

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் 3-ம் நாளான நேற்று காலை உற்சவரான மலையப்பர் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். யோக நரசிம்ம அலங்காரத்தில் காட்சியளித்த மலையப்பரை காண மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.
வாகன சேவையின் முன் குதிரை, காளை, யானை ஆகிய பரிவட்டங்களும், ஜீயர் குழு வினரும் சென்றனர். இவர்களை தொடர்ந்து பல்வேறு மாநில நடனக் குழுவினர் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடிய படி சென்றனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் மாட வீதிகளில் பக்தர்களுக்கு மலையப்பர் காட்சியளித்தார். மாலை ரங்கநாயக மண்டபத்தில் ஸ்னபன திருமஞ்சனம் நடைபெற்றது.
சந்திர ஒளியில்..
இரவு, முத்துப் பல்லக்கு வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பர் உலா வந்தார். சந்திரனின் தலம் திருமலை என்பதால் சந்திரனுக்கு உரிய முத்துக்களால் ஆன பல்லக்கில் மலையப்பர் இரவில் சந்திர ஒளியில் எழுந்தருளினார்.