

108 வைணவ திவ்ய தேசங்களில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோவில் பூமாதேவி சமேத ஒப்பிலியப்பன் பெருமாள் கோயில் 13-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. தென் திருப்பதி என்று இத்தலம் சிறப்பு பெற்றுள்ளதால், இப்பெருமாளுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.
108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும் பெருமாளுக்கு உப்பில்லா நிவேதனம் அளிக்கப்படுகிறது. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். தாயாரின் அவதாரத் தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.
பெரியாழ்வார் பாசுரம்:
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டாங் குறைவார்க்கு கோயில் போல்
வண்டு வளங்கிளரு நீள் சோலை
வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்.
மூலவர்: ஒப்பிலியப்பன் (திருவிண்ணகரப்பன்)
உற்சவர்: பொன்னப்பன்
தாயார்: பூமாதேவி
தீர்த்தம்: அஹோத்ர புஷ்கரிணி
ஆகமம் / பூஜை: வைகானஸம்
விமானம்: சுத்தானந்த விமானம்
தல வரலாறு
ஒருசமயம் திருமகளின் அம்சமான பூமாதேவி, “எப்போதும் மகாலட்சுமியை மார்பில் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் அந்த பாக்கியத்தை தாங்கள் அளிக்க வேண்டும்” என்று திருமாலிடம் வேண்டுகிறார். அப்போது திருமால், அவரிடம், “விரைவில் நீ பூலோகத்தில், ஒரு ரிஷியின் மகளாக திருத்துழாய் என்ற பெயருடன் அவதரிக்க உள்ளாய். அப்போது உனக்கு அந்தப் பேறு கிடைக்கும்” என்று கூறுகிறார்.
இந்த சமயத்தில் மிருகண்டு மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி, மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று தவமிருந்தார். அப்போது பூமாதேவி, குழந்தை வடிவில் ஒரு துளசி செடி அருகே இருப்பதைக் கண்டார், லட்சுமியின் அம்சமாக குழந்தை இருப்பதால், குழந்தைக்கு திருத்துழாய் (துளசி) என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.
தக்க வயது வந்ததும், திருமால் ஒரு முதியவர் வேடம் தாங்கி, முனிவரிடம் பெண் கேட்டார். அப்போது மார்க்கண்டேய மகரிஷி, சிறிய பெண் என்பதால் தன் மகளுக்கு, உணவில் சரியாக உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது என்று கூறுகிறார். உப்பில்லாத சமையலாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறிய முதியவர், திருத்துழாயை மணமுடித்துச் செல்வேன் என்கிறார்.
வந்திருப்பது திருமால் என்பதை ஞான திருஷ்டியில் அறிந்த முனிவர், மகளை திருமாலுக்கு மணமுடித்துக் கொடுத்தார். உப்பில்லாத உணவை உண்பதற்கு ஒப்புக் கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் பெருமாள் அழைக்கப்பட்டார். துளசிதேவியும் (திருத்துழாய்) அவரது மார்பில் துளசி மாலையாக நிரந்தரமாக தங்கினார். இதனால் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பெருமாளுக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.
திருவோண நட்சத்திரம்
மார்க்கண்டேய மகரிஷியிடம் பெண் கேட்டு, திருமால், வந்தது பங்குனி மாத திருவோண தினம் ஆகும். திருமணம் நடைபெற்றது ஐப்பசி மாத திருவோண தினம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாத திருவோண தினத்தில் திருமால் சந்நிதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு, அகண்ட தீபம், வால் தீபம் ஏற்றப்படுகிறது. திருவிளக்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். ஆவணி திருவோண தினத்தில் காலையில் கருட வாகனத்தில் எழுந்தருளி (உதய கருட சேவை), நாட்டாறு தீர்த்தத்தில் (தட்சிண கங்கை) நீராடுகிறார்.
தாயாருடன் இணைந்து பவனி
தன்னை சரணடைபவர்களை எப்போதும் காப்பதாக கீதையில் கிருஷ்ண பரமாத்மா உரைத்ததை நினைவுகூர்த்து, இத்தல பெருமாள் யாருக்கும் ஒப்பில்லாமல் உயர்ந்திருப்பவர் என்ற பொருளில் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். அதில் மகிழ்ந்த பெருமாள், திருவிண்ணகரப்பன் (மூலவர்), பொன்னப்பன் (உற்சவர்), மணியப்பன், என்னப்பன் (பிரகார சந்நிதி), முத்தப்பன் என ஐந்து கோலத்தில் நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார்.
ஒருபோதும் தன் மகளை விட்டுப் பிரியக் கூடாது என்று மார்க்கண்டேய மகரிஷி, திருமாலை கேட்டுக் கொண்டதால், பெருமாள் பிராட்டியை பிரியாமல் இருப்பார். அவருடன் இணைந்து பவனி வருவது இன்றும் நடைபெறுகிறது.
கோயில் அமைப்பும், சிறப்பும்
இக்கோயில் ராஜகோபுரம் கிழக்கு பார்த்தவாறு ஐந்து நிலைகளுடன் அமைந்துள்ளது. வெளி பிரகாரத்தில் தெற்குபுறத்தில் என்னப்பன் சந்நிதி அமைந்துள்ளது. வடக்குப் பகுதியில் மணியப்பன் சந்நிதி, அர்த்தமண்டபத்தின் முன்புறத்தில் தேசிகர் சந்நிதி, நடவான மண்டபத்தில் கருடன் சந்நிதி, மகாமண்டபத்தில் ராமானுஜர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், ராமர் சந்நிதிகள் உள்ளன.
இத்தலத்தில் பிராட்டி, பெருமாளுக்கு வலது புறத்தில் இருப்பது தனிச்சிறப்பு. மேலும் இத்தலத்தில் அனைத்து நைவேத்யங்களும் உப்பில்லாமலேயே தயாரிக்கப்படுகின்றன.
மார்க்கண்டேய மகரிஷி வழிபட்ட தலம் என்பதால் இத்தலத்தில் ஆயுள் விருத்தி, மிருத்யுஞ்ச ஹோமம் நடைபெறுகிறது. இங்குள்ள அஹோத்ர புஷ்கரிணி தீர்த்தத்தில் (பகலிராப் பொய்கை) இரவு, பகல் என்று எந்த நேரத்திலும் நீராடலாம்.
திருவிழாக்கள்
புரட்டாசி, ஐப்பசி, பங்குனி பிரம்மோற்சவங்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருள்வார். தேரோட்டம், திருக்கல்யாண வைபவம், ஸ்ரீராம நவமி உற்சவ தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஸ்ரீராம நவமி உற்சவத்தில் (11 நாட்கள்) ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நிறைவு நாட்களில் மாப்பிள்ளை அழைப்பு, சீதா கல்யாணம், ராமர் கனகாபிஷேகம், பட்டாபிஷேகம், ஆஞ்சநேயர் கனகாபிஷேகம் நடைபெறும்.