Published : 28 Sep 2022 06:20 AM
Last Updated : 28 Sep 2022 06:20 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 11. ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்

ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில்

முனைவர் கே.சுந்தரராமன் 

108 வைணவ திவ்ய தேசங்களில், தஞ்சை மாவட்டம், ஆதனூர் பார்க்கவி தாயார் சமேத ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், 11-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. கும்பகோணத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள இக்கோயிலில் பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

திருமாலை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்த ஊர் என்பதால் (ஆ,தன்,ஊர்) ஆதனூர் என்ற பெயர் இவ்வூருக்கு கிட்டியது. கருவறை விமானத்தில் உள்ள 7 பூதகணங்களின் மத்தியில் வடக்கு நோக்கி அமையப் பெற்றுள்ள திருமால் சிலை, பல்லாண்டுகளாக வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இக்கோயிலில் திருமங்கையாழ்வார் வழிபட்டுள்ளார். இத்தலத்துக்கு என்று தனிப்பாசுரம் எழுதவில்லை என்றாலும் தனது பெரிய திருமடலில் ‘ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்’ என்று குறிப்பிடுகிறார்.

(முன்னவனை மூழிக் களத்து விளக்கினை,

அன்னவனை ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை,

நென்னலை யின்றினை நாலையை, - நீர்நிலைமேல்…)

மற்றொரு இடத்தில்..

இடரான வாக்கை யிருக்க முயலார்

மடவார் மயக்கின் மயங்கார் - கடவுளர்க்கு

நாதனூ ராதரியார் நானெனதென்னார

மலன் ஆதனூர் எந்தை யடியார்.

என்று பாடியுள்ளார்.

மூலவர் / உற்சவர்: ஆண்டளக்கும் ஐயன் / ஸ்ரீ ரங்கநாதர்

தாயார்: பார்க்கவி

தல விருட்சம்: புன்னை, பாடலி

தீர்த்தம்: சூர்ய, சந்திர தீர்த்தம்

ஆகமம் / பூஜை: பாஞ்சராத்ரம்

விமானம்: பிரணவ விமானம்


தல வரலாறு

ஒருசமயம் பாற்கடலில் வாசம் செய்யும் திருமாலை தரிசிக்க, பிருகு முனிவர் சென்றிருந்தார். அப்போது திருமகள் அவருக்கு ஒரு மாலையை பரிசளித்தார். அந்த மாலையை மற்றொரு சமயத்தில், பிருகு முனிவர், இந்திரனுக்கு அளித்தார். மாலையை தன் யானையின் மீது இந்திரன் வைத்ததும், யானை அதை தன் காலில் போட்டு மிதித்தது.

இதைக் கண்டு கோபம் அடைந்த பிருகு முனிவர், பூலோகத்தில் சாதாரண மனிதராக பிறக்கும்படி இந்திரனை சபித்தார்,. தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய இந்திரனிடம் திருமகள், “நான் பூலோகத்தில் பிருகு முனிவரின் மகளாகப் பிறந்து, திருமாலை திருமணம் புரியும்போது உனது சாபம் நீங்கப் பெறும்” என்று அருளினார்.

அதன்படி, பிருகு முனிவரின் மகளாக, பூலோகத்தில் திருமகள் அவதரித்தார். இத்தலத்துக்கு வந்த பெருமாள், திருமகளை தக்க தருணத்தில் மணம் புரிந்தார். இந்திரன் இங்கு வந்து திருமாலையும், திருமகளையும் வணங்கும்போது, பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயனாகக் காட்சியளித்து, சாப விமோசனம் அருளினார்.

திருமங்கையாழ்வாருக்கு உபதேசம்

ஒருசமயம் திருமங்கையாழ்வார், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டார். பல்வேறு பணிகளை செய்தபிறகு, கையில் இருந்த அனைத்து பணமும் செலவாகிவிட்டது. செய்வதறியாது தவித்த திருமங்கையாழ்வார், திருமாலிடம் தனக்கு உதவுமாறு வேண்டுகிறார். பெருமாளும், கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வந்து காத்திருக்குமாறு திருமங்கையாழ்வாரிடம் அசரீரியாகக் கூறுகிறார்.

திருமங்கையாழ்வார் அங்கு சென்று பெருமாளுக்காகக் காத்திருக்கிறார். அப்போது ஏடு, எழுத்தாணி, மரக்கால் ஆகியவற்றுடன் அங்கு வந்த ஒரு முதியவர் (வணிகர்), தன்னை ரங்கநாதர் அனுப்பியதாகக் கூறிக் கொண்டு, திருமங்கையாழ்வாருக்கு உதவ வந்திருப்பதாகக் கூறுகிறார். திருமங்கையாழ்வார், அவரிடம் கோயில் திருப்பணிகளுக்காகவும், பணி செய்த தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவும் பணம் கேட்கிறார்.

முதியவர், தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். மேலும் தன்னிடம் உள்ள மரக்காலைக் காட்டி, அது கேட்டதைக் கொடுக்கக் கூடியது என்று கூறுகிறார். பணியாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்று திருமங்கையாழ்வார் கூறியதும், தான் மரக்காலில் மணலை நிரப்பித் தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவும் இருக்கும் என்று கூறுகிறார். அதற்கு திருமங்கையாழ்வார் ஒப்புக் கொள்கிறார்.

பெரும்பான்மையானவர்களுக்கு அது மணலாகவே இருந்தது. கோபமடைந்த பணியாளர்கள் முதியவரை தந்திரக்காரர் என்று கூறி தாக்க முற்பட்டனர். வணிகர் தப்பியோட, அவரைத் தொடர்ந்து திருமங்கையாழ்வாரும் ஓடினார்.

சிறிது தொலைவு சென்றதும், ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து முதியவரை யார் என்று வினவுகிறார் திருமங்கையாழ்வார். வந்திருப்பவர், திருமால் என்பதை அறிந்த திருமங்கையாழ்வார், அவரை வணங்கினார். திருமாலும் இந்த இடத்தில் கோயில் கொண்டு, அவருக்கு ஏட்டில் எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசித்து அருளினார். இந்த இடமே ஆதனூர் என்று பெயர் பெற்றது.

கோயில் அமைப்பு

ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில் 3 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளுக்கு மத்தியில் இக்கோயில் உள்ளது. கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளிக்கொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி மற்றும் ஏடுடன் அருள்பாலிப்பது, உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளிகொண்டிருக்கும் கோலமாகக் கருதப்படுகிறது. பெருமாளின் பாதத்தருகே காமதேனு,காமதேனுவின் மகள் நந்தினி, சிவபெருமான், பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் உள்ளனர்.

கருவறைக்கு முன்புறம் அர்த்தமண்டபத்தில் பெருமாளின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளன. இந்தத் தூண்களை வலம் வந்து, அவற்றைப் பிடித்துக் கொண்டு, பெருமாளின் பாதம், முகத்தை தரிசனம் செய்தால் மோட்சம் அருளப்படும் என்று கூறப்படுகிறது. இத்தூண்கள் மோட்சத் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கத்திலும் இத்தூண்களைக் காணலாம். இலங்கை செல்லும் சமயத்தில் ராமபிரானும் ஆஞ்சநேயரும் இத்தலத்துக்கு வந்து தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. வைணவ நவக்கிரக ஸ்தலங்களில் இத்தலம் குரு பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது.


ஊரும் பெயரும்

கைகளில் ஏடு (ஓலைச் சுவடி), எழுத்தாணி, மரக்காலை வைத்து, ஜீவாத்மாக்களின் நல்ல மற்றும் தீய செயல்களை கணக்கிட்டு அவர்களை ஆள்வதால், திருமால் ‘ஆண்டு அளக்கும் ஐயன்’ என்று அழைக்கப்படுகிறார்.

சூரியனின் (ஆதவனின்) கதிர்கள், இறைவனின் கண்களாக கருதப்படுகின்றன. அவர் கண்கள் திறந்த பின்னரே அனைத்தும் நடைபெறுகின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பூக்கள், ஆறுகள், மலைகள், விலங்குகள் என்று அனைத்துக்கும் அவர் சேவை புரிகிறார். சூரிய கதிர்களாக அவர்களது உடலுக்குள் நுழைந்து, அவர்களை வழிநடத்துகிறார். அதனால் இந்த ஊர் ‘ஆதவானுல்ல ஓர்’ என்று அழைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் ‘அதானூர்’ என்று அழைக்கப்பட்டது.


கூர்மாவதாரத்தின்போது, பாற்கடலில் இருந்து வெளிவந்த நல் விஷயங்களில் காமதேனுவும் ஒன்று. அது இந்திரனுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது. திருமகளைக் காட்டிலும் தான் அனைவராலும் கௌரவிக்கப்பட வேண்டும் என்று காமதேனு விருப்பம் கொண்டாள். காமதேனுவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க எண்ணிய திருமால், திருமகள் மற்றும் காமதேனுவிடம் ஒரு மரக்காலை அளித்து, உலகில் உள்ள பொருட்களை வைத்து அதை நிரப்புமாறு கூறுகிறார்.

காமதேனு அதை செய்யவில்லை. திருமகள், திருமாலை பிரார்த்தனை செய்து, துளசி இலைகளால் அந்த மரக்காலை நிரப்பினார். தனது தவறை உணர்ந்த காமதேனு, திருமாலை சரண் புகுந்து, அவரை நோக்கி தவம் புரிந்தாள். அதன் காரணமாக இவ்வூர் ஆதனூர் (ஆ தவம் செய்த ஊர்) என்று அழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

வைகாசி பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், சுவாமி, தாயாருக்கு திருமஞ்சனம், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். பல்வேறு வாகனங்களில் சுவாமி, தாயார் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x