

கவுதம புத்தர் வீட்டைவிட்டு வெளியேறியவுடன் அலாரா கலாமா உள்ளிட்ட பல்வேறு ஞானிகளைச் சந்தித்து உரையாடினார். அவர்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த யோக நிலைகள், ஆழ்நிலை தியான முறைகள், பல்வேறு வாழ்வு நெறிமுறைகளை அவருக்குக் கற்றுத் தந்தனர். ஆனாலும் வாழ்வு தரும் துயரத்தில் இருந்து முற்றிலும் விடுபடும் முறைகளை அவர்களால் சொல்லித் தர முடியவில்லை.
இதனால் அவர்களைவிட்டு நீங்கி, மகத நாடு எங்கும் சுற்றித் திரிந்தார் புத்தர். பிறகு ஒரு அழகிய தோப்பைத் தேர்ந்தெடுத்துத் தங்கினார். அந்தத் தோப்பின் அருகே தெள்ளிய நீரோடிய ஆறு, மக்கள் வாழ்ந்த கிராமம் ஆகியவை இருந்தன. அந்தக் கிராமத்தில் பிச்சை பெற்று வாழ அவர் தீர்மானித்தார். குருவின் துணையின்றி, தோப்பில் தனியே தியானம் செய்யத் துணிந்தார். இது பற்றி ஆரிய பரியேசனா (உன்னதத்துக்கான தேடல்)என்ற நூல் சொல்கிறது.
கடும் தவம்
அவரது சீடர் சரிபுட்டா, அகவேசனா ஆகிய இருவரிடமும் இது பற்றி புத்தர் விவரித்துள்ளார். உணவு, உறைவிடம், உடை, மனித சகவாசம் ஆகியவற்றை புத்தர் விட்டொழித்தார்.
"அவரை அல்லது கீரை அல்லது பட்டாணி போன்ற உணவை ஒரு கையளவு எடுத்து வாயில் போட்டு கடித்து மென்று, அதன் சாறை உட்கொண்டால் என்ன ஆகும்? நினைத்ததை தொடர்ந்து செயல்படுத்திப் பார்த்தேன். என் உடல் நலிந்தது. என்னுடைய உடல் இணைப்பு எலும்புகள் வலுவிழந்தன. எருமையின் கால் குளம்புகளைப் போல, என் பின் உறுப்புகள் ஓடாகின. என் முதுகெலும்புகள் துருத்திக்கொண்டு நின்றன. சிதிலமான வீடுகளின் மூங்கில் தப்பைகளைப் போல என் விலா எலும்புகள் தொங்கின. என் குழி விழுந்த கண்களின் ஆழத்தில் இருந்து கண்கள் பார்த்தன" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஞானம் பெறும் வழி
இதற்குப் பிறகு இத்தகைய கடுமையான தவ வாழ்க்கையால், ஒப்பற்ற ஞானத்தைப் பெற முடியாது என்பதை புத்தர் உணர்ந்துகொண்டார். ஞானத்தைப் பெற தவத்தை விடுத்த மற்றொரு வழி இருக்கலாம் என்று புத்தர் நினைத்தார். தன் மனதைக் கட்டுப்படுத்த எளிதான ஒரு நிலை தேவை என்று கருதினார். அத்தகைய ஒரு நிலையை வலுவற்ற உடல்வாகு மூலம் பெற முடியாது. அதனால் சத்தான அரிசி உணவைச் சாப்பிட்டுப் பார்த்தால் என்ன என்று நினைத்தார்.
உடலுக்குத் தேவையான அளவு உண்ட பிறகு, தன் உடல் பலத்தைத் திரும்பப் பெற்ற புத்தர், தியான வாழ்வை மீண்டும் தொடர்ந்தார். ஓர் இரவில் முக்தி நிலையை அடைந்தார். இதை "என்னுள் ஓர் ஞான ஒளி கிளர்ந்து ஒளிர்ந்தது" என்று அவர் குறிப்பிடுகிறார். கயை எனப்படும் இடத்தில், நிரஞ்சரா என்றும் ஆற்றங்கரையில், மரத்தின் அடியில் தவம் செய்தபோது இந்த அனுபவம் அவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு கவுதமர், புத்தர் அல்லது ஞானி என்று அழைக்கப்படலானார்.