

108 வைணவ திவ்ய தேசத் தலங்களுள், தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில், 9-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டும் திருமால் முதலை, யானை ஆகிய இரண்டு விலங்கினங்களுக்கு அருட்காட்சி அளித்துள்ளார்.
பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் (திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள், கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்) இத்தலமும் ஒன்று. கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள இத்தலம் திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
திருமழிசையாழ்வார் பாசுரம்
கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வைகயறிந்தேன்-
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும்
மாயன் உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு
மூலவர்: கஜேந்திர வரதர் (ஆதிமூலப் பெருமாள், கண்ணன்)
உற்சவர்: செண்பகவல்லி
தாயார்: ரமாமணி வல்லி (பொற்றாமரையாள்)
தல விருட்சம்: மகிழம்பூ
தீர்த்தம்: கஜேந்திர புஷ்கரிணி, கபில தீர்த்தம்
ஆகமம்/பூஜை: வைகானஸ ஆகமம்
விமானம்: ககனாக்ருத விமானம்
தல வரலாறு
இந்திராஜும்னன் என்ற அரசர், சிறந்த திருமால் பக்தராக விளங்கினார். பல மணி நேரம் திருமாலுக்கு பூஜை செய்தவண்ணம் இருப்பார். அப்படி ஒருநாள் பூஜை செய்த சமயத்தில் அவரை சந்திக்க துர்வாச முனிவர் வந்திருந்தார். முனிவர் வந்திருப்பதை உணராமல், அரசர் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார். வெகு நேரமாகியும் தனது பக்திக் குடிலைவிட்டு அரசர் வெளியே வராமல் இருப்பதால், மிகுந்த கோபத்தில் இருந்த முனிவர், “மிகுந்த கர்வம் கொண்டவனாகவும், பக்தியில் சிறந்தவன் என்ற மமதையில் உள்ளவனாகவும் நீ இருப்பதால், மதம் பிடித்த யானையாகப் போவாய்” என்று மன்னனை சபித்தார். முனிவரின் குரல் கேட்ட மன்னர், அதிர்ச்சியில் உறைந்து போனார். தனது தவறுக்கு மன்னிப்பு கோரினார். மேலும், சாப விமோசனமும் அருளும்படி முனிவரை வேண்டினார்.
மன்னர் மீது இரக்கம் கொண்ட முனிவர், “திருமால் மீது பக்தி கொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு சமயம், முதலை உன் காலைப் பிடிக்கும் போது, ஆதிமூலமே என்று திருமாலை அழைத்தால், அவர் உன்னைக் காப்பாற்றி, மோட்சமும், சாப விமோசனமும் அளிப்பார்” என்று அருளினார்.
கூஹு என்ற அரக்கன் குளத்தில் வாழ்ந்து வந்தான். குளத்தில் நீராட வருபவர்களின் காலைப் பிடித்து இழுத்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருசமயம் அகத்திய முனிவர், குளத்தில் நீராட இறங்கிய போது, அவரது காலைப் பிடித்து இழுத்து துன்புறுத்தினான். கோபம் கொண்ட அகத்தியர், அவனை முதலையாக மாறும்படி சபித்தார். தன் தவறை உணர்ந்த அரக்கன், முனிவரிடம் சாப விமோசனம் அளிக்குமாறு வேண்டினான்.
முனிவரும் அரக்கன் மீது இரக்கம் கொண்டு, “கஜேந்திரன் என்ற யானை இக்குளத்துக்கு வரும்போது, நீ அதன் காலைப் பிடிக்கும் சமயத்தில் திருமால் வந்து அதைக் காப்பாற்றுவார். அவரது சக்ராயுதம் உன் மீது பட்டவுடன் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்” என்று அருளினார்.
ஒருநாள் கஜேந்திரன், கபிஸ்தலத்தின் கோயில் முன்பு உள்ள கபில தீர்த்தத்தில் நீர் அருந்த இறங்கியது. உடனே முதலை, யானையின் காலைக் கவ்வியது. “ஆதிமூலமே” என்று யானை தனக்கு உதவுமாறு திருமாலை அழைத்ததும், திருமால் திருமகளுடன் காட்சியளித்து, சக்ராயுதத்தால் முதலையை (அரக்கன்) அழித்து, யானைக்கு (கஜேந்திரன்) மோட்சம் அருளினார்.
இவ்வாறு யானைக்கு திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும். ஆஞ்சநேயருக்கு திருமால் அருள்பாலித்த தலம் என்பதால் இத்தலத்துக்கு கபிஸ்தலம் (கபி - தலம்) என்ற பெயர் கிட்டியது.
கோயில் அமைப்பு
5 அடுக்கு ராஜ கோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த புஜங்க சயன கோலத்தில் கஜேந்திர வரதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
ராகு - கேது தோஷ நிவர்த்தி
விப்ரசித்தி அரசருக்கும், சிம்ஹிகை என்ற அரசிக்கும் பிறந்த ராகுவுக்கு அமுதத்தை பருக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் அசுர குலத்தைச் சேர்ந்த ராகுவுக்கும் தேவர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது. பாற்கடலைக் கடைந்தபோது அமுதமும், விஷமும் சேர்ந்தே வந்தன. மோகினி அவதாரம் எடுத்த திருமால், அமுதம் கொடுப்பதற்காக தேவர்களை ஒரு வரிசையில் அமரச் சொன்னார். சூரிய சந்திரர்களுடன் ராகு அமர்ந்து அமுதம் உண்டுவிட்டதை உணர்ந்த திருமால், ராகுவின் தலையைக் கொய்துவிட்டார். அமுதம் உண்டதால், தலை துண்டிக்கப்பட்ட பின்பும் உயிர் இருந்தது. தலைப்பாகம் ராகு என்றும் உடற்பாகம் கேது என்றும் பெயர் பெற்றன.
ராகுவும் கேதுவும், தங்களை மீண்டும் இணைக்குமாறு பிரம்மதேவரிடம் வேண்டினர். ஆனால் அவர் சூரிய சந்திரர்களுடன் இணைந்து நவக்கிரகங்களாக மாறி எதிர்திசையில் சுழல்வதற்கு ஆலோசனை கூறினார். அப்போது திருமால் தோன்றி, அவர்கள் இருவரும் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் கடக ராசியில் கேது தங்கி ரிக், யஜூர், சாம வேதங்களைக் கற்று ஞானகாரகனாகவும், மகர ராசியில் ராகு தங்கி அதர்வண வேதத்தையும் கற்று போக யோககாரகனாகவும் விளங்க அருள்புரிந்தார். அதன்படி அவர்களும் கல்வியில் சிறந்து, நவக்கிரகங்களுள் இணைந்தனர். தாங்கள் அழிவதற்கு காரணமாக இருந்த சூரிய, சந்திரர்களை விழுங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இடப்புறம் சுற்றிக் கொண்டு வருவதாகவும், அவர்களால் தான் சூரிய சந்திர கிரகணங்கள் நடைபெறுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன.
ராகு, கேது தோஷங்கள் நீங்க பாபநாசம் கஜேந்திர வரதரை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள பெருமாள் வானர இனத்தில் பிறந்த ஆஞ்சநேயருக்கு அனைத்து வல்லமைகளையும் அளித்து, அவருக்கு ஞானத்தில் தலைசிறந்த சிரஞ்சீவி பட்டம் அருளியுள்ளார்,
திருவிழாக்கள்
வைகாசி விசாகம் (தேர்த் திருவிழா), வைகாசி பிரம்மோற்சவம், ஆடி பௌர்ணமி (கஜேந்திர மோட்ச லீலை) தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். சுவாமி வீதியுலாவைக் காண எண்ணற்ற பக்தர்கள் கூடுவது வழக்கம்.