

நாகர்கோவில்: திருவனந்தபுரம் புறப்பட்ட குமரி சுவாமி விக்ரகங்கள் இன்று குழித்துறையில் இருந்து 2வது நாளக சென்று களியக்காவிளையை அடைந்தபோது கேரள அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பக்தர்கள் மலர்தூவி பக்தி கரகோஷம் எழுப்பினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழாவில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து தேவாரக்கட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய 3 சுவாமி விக்ரகங்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பூஜைக்கு வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சாமி சிலைகள் புறப்பாடு நேற்று பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றலுக்கு பின்னர் நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமி விக்ரகங்களுக்கு மலர்தூவி வழிபாடு செய்தனர். நேற்று மாலை சுவாமி விக்ரகங்கள் ஊர்வலம் குழித்துறையை அடைந்ததும் இரவில் குழித்துறை மகாதேவர் கோயில், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டது.
2வது நாளான இன்று காலை சிறப்பு பூஜைக்கு பின்னர் குழித்துறையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. வழிநெடுகிலும் மேளதாளத்துடன் பக்தர்கள் சுவாமி விக்ரகங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் குலவையிட்டு கரகோஷத்துடன் சுவாமி விக்ரகங்களை வழியனுப்பினர். சுவாமி விக்ரகங்கள் திருத்துவபுரம், படந்தாலுமூடு வழியாக கேரள எல்லையான களியக்காவிளையை அடைந்தது. அப்போது தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சுவாமி விக்ரகங்களை, கேரள தேவசம் போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கேரள அரசு சார்பில் குமரி சுவாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்தியும், பேண்டு வாத்தியங்கள் இசைத்தும் போலீஸார் சுவாமி விக்ரகங்களுக்கு மரியாதை செலுத்தினர். இதை காண பல்லாயிரக்கணக்கான தமிழக, கேரள பக்தர்கள் களியக்காவிளையில் திரண்டிருந்தனர்.
பின்னர் கேரள மாநிலத்தில் ஊர்வலத்தை தொடர்ந்த சுவாமி விக்ரகங்கள் இரவில் நெய்யாற்றின்கரை கிருஷ்ணசுவாமி கோயிலை அடைந்து அங்கு தங்க வைக்கப்பட்டது. நாளை காலை சுவாமி ஊர்வலம் புறப்பட்டு இரவில் திருவனந்தபுரம் கிழக்கு கோட்டையை அடைகிறது. அதைத்தொடர்ந்து சரஸ்வதி, முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய 3 சுவாமி விக்ரகங்களும் தனித்தனியாக நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பூஜைக்கு வைக்கப்படுகிறது. 26ம் தேதி முதல் 10 நாட்கள் நவராத்திரி விழா பூஜையில் வைக்கப்பட்டு விஜயதசமி முடிந்த பின்னர் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு சுவாமி விக்ரகங்கள் புறப்பட்டு வருகின்றன.