

தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி (திருப்பேர் நகர்) அப்பக்குடத்தான் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 6-வது திவ்ய தேசம் ஆகும். பஞ்சரங்கத் தலத்தில் ஒன்று. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குத்தான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது.
பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
நம்மாழ்வார் பாசுரம்:
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என்நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே.
மூலவர்: அப்பக்குடத்தான்,
உற்சவர்: அப்பால ரங்கநாதர்
தாயார்: இந்திரா தேவி, கமல வல்லி
தலவிருட்சம்: புரச மரம்,
தீர்த்தம்: இந்திர புஷ்கரிணி
விமானம் : இந்திர விமானம்
தல வரலாறு
ஒரு சமயம் உபமன்யு என்ற மன்னன் துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாகிறான். முனிவர் அவனை சபித்ததால் தனது பலம் அனைத்தையும் இழந்துவிடுகிறான். தன்னை மன்னித்தருளுமாறும் தனக்கு சாப விமோசனம் தருமாறும் முனிவரிடம் மன்றாடினான் மன்னன். சற்றே இறங்கி வந்த முனிவர், “பலச வனம் (புரச மரங்கள் நிறைந்த வனம்) என்று அழைக்கப்படும் இத்தலத்தில் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் செய். இந்த தானத்தின் மூலம் உனது சாபம் தீரும்” என்றார்.
கோயில் அருகிலேயே ஓர் அரண்மனையைக் கட்டினான் மன்னன். முனிவரின் கூற்றுபடி அன்னதானம் செய்து வந்தான். வருவோருக்கெல்லாம் வயிறார அன்னமளித்தான் மன்னன். இவ்வாறு நீண்ட நாள் நடைபெற்றது அன்னதானம்.
ஒரு நாள் திருமால், வயது முதிர்ந்த அந்தணாராக வேடமிட்டு மன்னனிடம் வந்து அன்னம் கேட்டார். அவருக்கு உணவு பரிமாறப்பட்டது. மன்னனை சோதிக்க விரும்பிய திருமால், அன்றைய பொழுது தயாரிக்கப்பட்ட அனைத்து உணவு வகைகளையும் உண்டு தீர்த்தார். இதைக் கண்டு மன்னன் ஆச்சரியப்பட்டாலும், மேலும் என்ன வேண்டும் என்று அந்தணரிடம் கேட்டார். அதற்கு அவர் மீண்டும் உணவு கேட்டார்.
மன்னனும் உடனே தயார் செய்து கொடுப்பதாகக் கூறினான். இனி உணவு தயாரிக்க நேரமாகும் என்றும் தன்னால் அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாது என்றார் முதியவர். வேறு என்ன செய்வது மன்னர் யோசனை செய்யும்போதே முதியவர் தனக்கு ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டார். அதன்படி அப்பம் அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த அப்பக் குடத்தை திருமால் வாங்கிய வேளையில், மன்னனின் சாபம் தீர்ந்தது. இதனால் மன்னன் மனம் மகிழ்ந்தான்.
மன்னனிடம் இருந்து அப்பக்குடத்தை, திருமால் பெற்றதால் இவருக்கு ‘அப்பக்குடத்தான்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. இப்போதும் இத்தலப் பெருமாளின் வலது கை ஓர் அப்பக் குடத்தை அணைத்தபடியே உள்ளது. ஸ்ரீரங்கத்துக்கும் முன்னதாகவே இத்தலம் ஏற்பட்டது என்றும் அதனால்தான் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆதியாக அடியெடுத்து வைத்த தலம் என்பதால் ‘கோவிலடி’ என்று அழைக்கப்பட்டது என்றும் கூறுவர்.
இத்தலத்துக்கு வந்து வணங்கி இந்திரன் தனது கர்வம் நீங்கப் பெற்றான். மார்கண்டேயருக்கு எம பயம் போக்கி, உபரிசிரவசு மன்னனுக்கு சாபம், பாவம் போக்கி அருளிய தலம். நம்மாழ்வார் கடைசியாக மங்களாசாசனம் செய்த திருத்தலம் இதுவாகும்.
இத்தல மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் இந்திர விமானம் என்று அழைக்கப்படும். மேற்கு நோக்கிய வண்ணம் புஜங்க சயன கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயார் கிழக்கு பார்த்து அருள்பாலிப்பதால் தம்பதி சமேத பெருமாளாக இத்தலத்தில் அப்பக்குடத்தான் அருளுகிறார்.
பராசரரும் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்துள்ளார். இத்தல விநாயகர் இந்திரனுக்கு சாப விமோசனம் பெற வழிகாட்டியதால், வழிகாட்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
திருமங்கையாழ்வார் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துவிட்டு திருவெள்ளறை பெருமாளை தரிசிக்கச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து செல்கிறார் அப்பக்குடத்தான் பெருமாள். இதனால் திருவெள்ளறையில் வைத்து அப்பக்குடத்தான் பெருமாளை மீண்டும் மங்களாசாசனம் செய்கிறார் திருமங்கையாழ்வார்.
(பஞ்சரங்கத்தலம் – ஆதிரங்கம் (ஸ்ரீரங்கப்பட்டினம் – மைசூர்), அப்பால ரங்கம் (திருப்பேர் நகர் – கோவிலடி), மத்திய ரங்கம் (ஸ்ரீரங்கம்), சதுர்த்த ரங்கம் (கும்பகோணம் சாரங்கபாணி கோயில்), பஞ்ச ரங்கம் (இந்தளூர் – மயிலாடுதுறை) ஆகியவை திருமாலின் பஞ்ச ரங்கத்தலம் என்று அழைக்கப்படும் தலங்கள் ஆகும். இதன்மூலம் கோவிலடி ஸ்ரீரங்கத்துக்கும் முற்பட்டது என்று அறியலாம்)
திருவிழாக்கள்
புரட்டாசி மாதம் கிருஷ்ணனுக்கு உரியடி உற்சவம், நவராத்திரி, மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி உத்திர உற்சவத்தில் திருத்தேர் விழா, தீர்த்தவாரி தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும்.
எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபத்தில் இருந்து விமோசனம் பெற, தீராத பிரச்சினைகள் விட்டுச் செல்ல, குழந்தை பாக்கியம் பெற, திருமண வரம் அருளப் பெற இத்தல பெருமாளை வழிபடுவது வழக்கம். பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவர்.
அமைவிடம்: தஞ்சாவூரில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ளது.