Published : 21 Sep 2022 06:36 AM
Last Updated : 21 Sep 2022 06:36 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 4.திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்  

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்  

முனைவர் கே.சுந்தரராமன்

திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 4-வது திவ்ய தேசம் ஆகும். கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் பெரிய பிரகாரத்தின் தென்பகுதியில் உள்ள கல் அறைகளில் ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும். உய்யக்கொண்டார் எங்களாழ்வானின் அவதாரத் தலம்.

திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

திருமங்கையாழ்வார் பாசுரம் (பெரிய திருமொழி)

ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம் வேறு வேறுக வில்லது வளைத்தவனே எனக்கருள் புரியே

மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த

தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே.

மூலவர்: புண்டரீகாட்சன்

தாயார்: செண்பகவல்லி, பங்கயச் செல்வி

தலவிருட்சம்: வில்வம்

தீர்த்தம்: மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம்

விமானம்: விமலாக்ருத விமானம்

தல வரலாறு

ஒருசமயம் பாற்கடலில் திருமாலும் திருமகளும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருமால் திருமகளை வெகுவாகப் புகழ்ந்தார். அவள் கருணையால் அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியாக உள்ளன. அதில் தனக்கு பரம திருப்தி என்பதால் திருமகளுக்கு ஏதாவது வரம் கொடுக்க திருவுள்ளம் கொள்கிறார்..

அதற்கு திருமகள், திருமாலின் திருமார்பில் தான் நித்ய வாசம் செய்வதால் தனக்கு தனியாக வரம் ஏதும் பெற விருப்பம் இல்லை என்கிறார். இருப்பினும் தேவர்களைக் காட்டிலும் திருப்பாற்கடலில் தனக்கு அதிக உரிமை வேண்டும் என்றார்.

பெருமாள் தான் திருப்பாற்கடலில் அனைத்துமாக இருப்பதால், திருமகளின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறுகிறார். ஆனால் பூலோகத்தில் சிபி சக்கரவர்த்திக்கு தான் தரிசனம் தரும்போது, திருமகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கிறார்.

ஒருமுறை தென்னிந்திய பகுதியில் அசுரர்கள், அங்கு வசிப்பவர்களுக்கு நிறைய இன்னல்கள் கொடுத்து வந்தனர். அந்த சமயத்தில் சிபி சக்கரவர்த்தி அவர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு வெள்ளை வராகம் (பன்றி) அங்கு தோன்றி அவர்களுக்கு நிறைய இன்னல்களைக் கொடுத்தது.

சிபி சக்கரவர்த்தியின் படைவீரர்கள் எவ்வளவு முயன்றும் வராகத்தைப் பிடிக்க முடியவில்லை. சிபி சக்கரவர்த்தியே அதைப் பிடிக்க முயன்றார். அது தப்பித்து மலை மீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. சிபி சக்கரவர்த்தி அதைப் பிடிக்க மலையைச் சுற்றி வந்தார். அப்போது ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவரைக் கண்டார். அவர் கடும் தவம் புரிந்து கொண்டிருந்தார்.

விஷயத்தை மார்க்கண்டேய முனிவரிடம் கூறினார் சிபி சக்கரவர்த்தி. அப்போது மனம் மகிழ்ந்த முனிவர், “வராக வடிவில் வந்தது நாராயணன்தான். அவர் உனக்கு அருள்பாலித்திருக்கிறார். நான் அவரை நினைத்துத்தான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். நீ மிகவும் கொடுத்து வைத்தவன்” என்றார். மேலும் அங்குள்ள புற்றில் பாலால் அபிஷேகம் செய்யப் பணித்தார்.

அரசனும் அவ்வாறே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் அருள்பாலிக்கிறார். அப்போது இந்த தரிசனத்துக்கு வந்திருந்த திருமகளை நோக்கி, “உன் விருப்பப்படி இத்தலத்தில் உனக்கு அனைத்து அதிகாரத்தையும் தருகிறேன் . நான் அர்ச்சா ரூபமாக இருந்துகொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்” என்றார் திருமால்.

சிபி சக்கரவர்த்தி அனைவரிடத்தும் விடைபெற்றுக் கொண்டான். தான் ராவணனை அழிக்கச் செல்வதாக கூறும்போது, மார்க்கண்டேய முனிவர் மன்னரைத் தடுத்து, ராவணனை அழிக்க திருமால் ராமாவதாரம் எடுக்க இருப்பதாகக் கூறுகிறார். அவரை அவர் நாட்டுக்குச் சென்று நாட்டை ஆளும்படி கூறுகிறார் முனிவர்.

மன்னருக்கு இதில் திருப்தி இல்லை. அப்படியென்றால் காட்சி கொடுத்த பெருமாளுக்கு கோயில் எழுப்பும்படி முனிவர் சிபி சக்கரவர்த்தியிடம் கூற, அவரும் அவ்வாறே செய்வதாக உறுதி அளிக்கிறார்.

கோயில் கட்டும் பணிக்காக 3,700 குடும்பங்களை அழைத்து வந்தார் மன்னர். அவர்களில் ஒருவர் இறந்துவிட, இறந்த ஒருவருக்கு பதிலாக 3,700 பேரில் ஒருவராக இருந்து 3,700 குடும்பக் கணக்குக்கு குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டு அனைத்து பணிகளையும் செய்து முடிப்பதாக உறுதி அளித்தார் திருமால்.

திருமால் அளித்த வரத்தின்படி செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்துகொண்டு திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்னர் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் ‘புண்டரீகாட்சப்பெருமாள்' ஆனார். பெருமாள் கிழக்கு பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் என்று அழைக்கப்படுகிறது.

50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் வெள்ளறை என்ற பெயர் பெற்று திருவெள்ளறை ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. இத்தல பெருமாளை தரிசிக்க 18 படிகளைக் கடக்க வேண்டும். (இது கீதையின் 18 அத்தியாயங்களைக் குறிக்கும்). கோபுர வாயிலில் இருக்கும் 4 படிகள் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பலிபீடத்தை வணங்கி 5 படிகளைக் கடக்க வேண்டும். (இவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன)

பெருமாளை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளன. இவை தட்சிணாயன வழி (ஆடி முதல் மார்கழி வரை) என்றும் உத்தராயண வழி (தை முதல் ஆனி வரை) என்று பெயர் பெறும். இத்தல பெருமாளை கருடாழ்வார், சிபி சக்கரவர்த்தி, மார்க்கண்டேய முனிவர், நான்முகன், ஈசன் தரிசித்துள்ளனர்.

திருவிழாக்கள்

சித்திரை திருவிழா, சித்ரா பவுர்ணமி (கஜேந்திர மோட்சம்) ஆவணி கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், பங்குனி திருவோணம் (பிரம்மோற்சவம்) தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெறும்.

இத்தலத்தில் பலிபீடத்தின் முன்பு முதலில் கோரிக்கையை முன் வைப்பது வழக்கம். கோரிக்கை நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து பொங்கல் படைத்து பிரார்த்தனையை நிறைவு செய்வது உண்டு. குழந்தை பேறு வேண்டி கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை உண்பது வழக்கம்.

அமைவிடம்: திருச்சியில் இருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கி.மீ., தொலைவில் மண்ணச்சநல்லூருக்கு அருகில் உள்ளது.

t1

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x