Published : 16 Sep 2022 05:18 AM
Last Updated : 16 Sep 2022 05:18 AM

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா அக். 25-ல் தொடக்கம் - அக்.30-ம் தேதி சூரசம்ஹாரம், 31-ம் தேதி திருக்கல்யாண உற்சவம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகிறது. 30-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ம.அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25-ம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு ஆகியவற்றை தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

6-ம் நாளான அக். 30-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4 மணிக்குமேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

31-ம் தேதி திருக்கல்யாண வைபவத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற பூஜைகள் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி - அம்மன் தோள்மாலை
மாற்றும் நிகழ்ச்சி, இரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் கந்த சஷ்டி விழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு இவ்விழா பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளதால் திரளானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x