Published : 23 Nov 2016 05:00 PM
Last Updated : 23 Nov 2016 05:00 PM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 05: ஊனோடும் உயிரோடும் ஆத்மாவோடும்...

கம்சன் அனுப்பிய அசுரர்கள் ஒவ்வொருவராய் தோற்று உயிரை விட்டுக்கொண்டு இருந்தபோது, “என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. நான் போகிறேன், கண்ணனைக் கொல்கிறேன், வெற்றியோடு வருகிறேன்” என்று சூளுரைத்துப் புறப்படுகிறாள் பூதனை என்ற அரக்கி. வீட்டிலோ கண்ணன் வயிறு நிறையப் பால் குடித்துவிட்டுத் தொட்டிலில் அறிதுயிலில் இருக்கிறான். நோட்டம் விட்டு, மெதுவாகப் பார்ப்பவர் மனம் மயங்கும் தேவதை போல் அழகிய உருவத்தோடு வருகிறாள் பூதனை.

பால் கொடுப்பதுபோல் அவனைத் தூக்கி அமுக்கிக் கொல்வதுதான் அவள் திட்டம். இங்கே நடப்பதோ வேறாகிவிடுகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. குழந்தை பிறந்த ஒரு தாய்க்குத் தானே பால் ஊறும். இவளோ அரக்கி. மாய வேலையில் பாலென ஏதோ ஒன்றை ஊற வைத்து ஊட்ட முடியும் என்றாலும் அவள் திட்டம், பாவனை பண்ணி அமுக்கி மூச்சுத் திணற வைத்துக் கொல்வதாய்த் தானிருக்கும். ஆனால் கண்ணனை, அவன் பால் வடியும் திருமுகத்தை, அழகைப் பார்த்ததும் இவளுக்குத் தாய்மை உணர்வு பொங்கி இருக்க வேண்டும்.

‘ஐயோ! இந்தக் குழந்தைக்கு நான் தாயாக இருந்திருக்கக் கூடாதா!? ’ என்ற எண்ணம் தலை தூக்கி இருக்க வேண்டும். அதனால்தான் கொல்ல வந்ததைக்கூட மறந்து அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டு மார்பகத்தோடு கண்ணனைப் பொருத்தியிருக்க வேண்டும். பாலும் சுரந்திருக்க

வேண்டும். அடடா! போட்டுக் கொடுத்த திட்டத்தை மறந்து இவள் இப்படிப் பண்ணுகிறாளே! என்று கண்ணன் சுதாரித்துத் தான் கடமையைச் செய்து முடிக்கிறான். அவன் கடமையா? என்ன? ஏதோ ஒரு காரணத்தால் அசுரப் பிறவி எடுக்க வேண்டியவர்களை இதுபோன்ற அமைப்பில் விமோசனம் கொடுக்க, பரமாத்மா திட்டங்களைப் போட்டு அதன்படி முடித்து முக்தி கொடுக்கிறான். கண்ணனின் கரம், சிரம், பாதம் எல்லாம் பட்டால் பின் என்ன! பிறவிப் பயனே அதுதானே!

உயிரையும் ஆத்மாவையும் உறிஞ்சிய கண்ணன்

அதனால்தான் அந்தத் தகுதி பெற்றவர்களை எல்லாம் இந்த அவதாரத்தில் வரிசையாக வரவைத்து தன்னுள் சேர்த்துக்கொள்கிறான். அதுதானே சத்தியம்! அல்லாமல் போனால், அரக்கர்கள் வருவதும், அவர்களைக் கண்ணன் கொல்வதும் அர்த்தமற்றவை. புராணங்களில் வரும் அசுரர்கள் அனைவரும் புண்ணிய ஆத்மாக்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இங்கே நீங்கள் பார்க்கும் சிற்பம் திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயிலில்தான் இருக்கிறது.

மிகப்பெரிய உருவம் கொண்ட அரக்கியை, பாலோடு ஊனை, உயிரை ஆத்மாவையும் சேர்த்து உறிஞ்சித் தன்னில் அடக்கித் தன்னோடு சேர்த்துக்கொள்கிறான். கொழுகொழுவென்ன இருந்த பூதனை இங்கே எலும்பும், தோலுமாக வற்றிப் போவதைக் காட்டிய சிற்பியை என்னவென்பது. தெய்வ அருள் பெற்றவன் என்பதன்றி வேறென்ன சொல்ல!

அனுபவித்தால் மட்டுமே புரியும்

பார்க்கும் மற்றுமொரு படம் ஒரு ஒப்புமைக்காக! இது அழிந்துபோன நூற்றாண்டு பழமையான திருவிடை மருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோயிலின் தேர் சிற்பம். இது தேரின் அமைப்பிற்குப் பொருந்தும் வண்ணமாகச் செய்யப்பட்டிருந்தாலும் இதிலும் ஒட்ட உறிஞ்சி முடிப்பதை அழகாய் காட்டியிருக்கிறார் சிற்பி. பீடத்தில் உட்கார்ந்து கண்ணனை மடியில் போட்டு அவன் காலை வலிமிகுதியால் அழுத்திப் பிடிப்பதும், வேதனைச் சிரிப்புக் காட்டினாலும் கால் கட்டை விரலை உயர்த்துவதில்கூட வலி தெரிவதெல்லாம் அனுபவித்தால் மட்டுமே புரியும். சற்றே கண்ணை மூடிக் கண்ணனை, அவன் பூதனையை முடித்து முக்தி கொடுத்த பின் சிரித்தபடி எழுந்து வருவதைக் கற்பனை செய்து பாருங்கள் தன்னாலே வந்து சேரும் நிம்மதி!

அடுத்த வாரம் இன்னும் ஒரு அழகிய சிற்பத்துடன்...

(தரிசிப்போம்)

- அடுத்த வாரம் ராமாவதாரம்...


ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x