

தெய்வங்கள் நம்மைக் காக்கும் என்று எண்ணி கோயில்களுக்குச் சென்று பிரதான தெய்வத்தை வணங்கி வேண்டுகிறோம். ஆனால் அந்த பிரதான தெய்வத்தை மட்டுமல்ல, அக்கோயிலின் உடைமைகளையும் காப்பது காலபைரவர். இவருக்கு வரும் ஜென்ம நட்சத்திரமான அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். இந்த வருடம் நவம்பர் 21-ம் தேதி வருகிறது.
சொர்ணபைரவர்
ஆடையின்றி அழகிய மலர் மாலைகள் அணிந்து, நாய் வாகனத்துடன் சிவன் கோயில்களில் காணக் கிடைப்பவர். சிவப்பு மலர்களும், சிவப்பு நூலில் போடப்படும் திரி கொண்டு விளக்குப் போடுதலும் வழக்கம். தலைக்குப் பின்னே தீ சுவாலை தோன்ற அமைக்கப்பட்டிருப்பார். சில மூலவர்களுக்கு இடையில் ஆடை அணிவிக்கப்பட்டிருக்கும். மனைவி பைரவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் இவர் சொர்ண பைரவராகக் காணப்படுவதும் உண்டு.
ஏன் தோன்றினார்?
சிவனுக்கும் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதில் சிவனுக்குரிய ஐந்தாவது தலையான மேல் தலை `அதோ முகம்` என்று அழைக்கப்படுகிறது. பிரமன் தனக்கு ஐந்து தலை என்ற கர்வத்தைக் காட்ட, அவரது கர்வத்தை அடக்க சிவன் ஒரு வழி செய்தார். காலபைரவராகத் தோன்றி பிரம்மனின் மேல் தலையைக் கிள்ளி எடுத்ததாகத் தெரிவிக்கிறது புராணம். ருத்ர பைரவராகத் தோன்றிய காலபைரவர், தலையில் பிறைச்சந்திரனைக் கொண்டு தான் சிவனே என்பதைக் காட்டிக் கொண்டுவிட்டார்.
எதிரிகளிடமிருந்து காக்கும் பைரவர்
மிகப் பெரிய சைவத் திருக்கோயில்களில் தனி சன்னிதி கொள்ளும் இவர், சில கோயில்களில் சிவன் சன்னிதியை ஒட்டி தனித்து நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதும் உண்டு. இவ்வாறு காணப்படும் காலபைரவரின் காலடியில் அனைத்து கோயில் சன்னிதிகளையும் பூட்டிய சாவிகளை வைத்து விட்டுச் செல்வர். பைரவர் மீது உள்ள பயம் காரணமாக இதனை திருடர்கள் அக்காலத்தில் தொடமாட்டார்கள். பக்தர்களும் இந்த நம்பிக்கையையொட்டி ஜென்மாஷ்டமி அன்று தங்கள் வீடுகளின் கொத்துச் சாவிகளை, காலபைரவர் காலடியில் வைத்து எடுத்துச் செல்வர்.
பக்தர்களுக்கு அருளும் காலபைரவர், அவர்களின் எதிரிகளிடமிருந்தும் காப்பார் என்பது நம்பிக்கை. பெண்களைப் பாதுகாக்கும் சிறப்பு தெய்வம் இவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.
எட்டு திருநாமங்கள்
இவருக்கு, கால பைரவர், அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோத பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் உண்டு. இவர்களின் தேவியராக முறையே பிரம்மாஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் விளங்குகின்றனர்.
பூஜிப்பது எப்படி?
ஆதிசங்கரர், காலபைரவர் அஷ்டகத்தை இயற்றியுள்ளார். அதன் முதல் ஸ்லோகத்தைச் சொன்னாலே நற்பலன் கிடைக்கும்.
நீண்ட ஆயுள், பெண்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம், சொத்துகள், குலம் மற்றும் உடைமைகளை காப்பது ஆகியவற்றிற்கான சிறப்பு தெய்வம் கால பைரவர். இவரை மனதால் நினைத்தாலே போதுமானது என்பது ஐதீகம் என்றாலும் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுதல் பக்தர்கள் வழக்கம். அபிஷேகத்தில் புளிக்காத, கரும்பு சாறு சேர்த்தால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. பெண்களைக் காக்கும் கருணை தெய்வம் காலபைரவரைப் போற்றுவோம்.
காலபைரவர் அஷ்டகத்தின் முதல் பாடல் தேவராஜஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம் வ்யாலயஜ்ஞஸு த்ரமிந்து சேகரம் க்ருபாகரம் நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம் காசிகா புராதிநாத காலபைரவம் பஜே |