

நரகாசுரன் என்ற அசுரன் பல கொடுமைகளைச் செய்துவந்தான். பூமாதேவியின் புதல்வனான அவனை யாராலும் அழிக்க முடியவில்லை.
பின்னர் பகவான் கிருஷ்ணர் சத்யபாமாவை அழைத்துக்கொண்டு தேர் ஏறி நரகனுடன் சண்டை செய்தார். தாய் அம்சம் கொண்ட பெண்ணால் மட்டுமே அவனை வெல்ல முடியும் என்பது பிரம்மா அவனுக்கு அளித்த வரம். எனவே கிருஷ்ணரால் நரகாசுரனை வதம் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் நரகாசுரனின் தாக்குதலால் கிருஷ்ணர் மூர்ச்சை ஆனதைப்போல் கிடந்தார். செய்இதை பார்த்த சத்தியபாமா வெகுண்டு சண்டை செய்து நரகாசுரனை அழித்தாள். ஐப்பசி வளர்பிறை சதுர்த்தசிதான் அந்த நாள். தன்னுடைய அழிவை உலகம் கொண்டாடவேண்டும் என்று வரம் வாங்கினான் நரகாசுரன். தீபாவளிப் பண்டிகைக்கு வேறு பல கதைகள் இருந்தாலும் அடிப்படைக் கதை இதுதான். என்றைக்கோ எந்த யுகத்திலோ மடிந்து போன நரகாசுரனை இன்னும் ஏன் நினைவில் வைத்துக் கொண்டாட வேண்டும்?
காரணம் இதுதான். நரக +அசுரன் = நரகாசுரன்.
தெய்வத்தன்மையான பொறுமை, அடக்கம், திறமை, செல்வம், அறிவு உள்ளவர்களை தேவன் அதாவது சுரன்
என்று அழைக்கிறோம். இதற்கு எதிர்மறையான கொடுங்கோல் தன்மை, பழி வாங்கும் உணர்ச்சி, வன்முறைகள் ஆகியவற்றைக் கொண்டவர்களை அசுரன் என்கிறோம்.
பூமியில் இரண்டு தன்மைகளும் உண்டு என்பது கண்கூடு. தெய்வத்தன்மையான சுபிட்சம் உள்ள பகுதிகளை சொர்க்கம் என்றும் அசுரத்தன்மையான அமங்கலம் உள்ள பகுதியை நரகம் என்றும் சொல்லலாம்.
ஒவ்வொருவர் மனதிலும் இந்த இரண்டு தன்மைகளும் உண்டு. வாழ்வின் நோக்கம் தெய்வத்தன்மையைப் பெறுவதுதான். அதாவது மங்களத்தைப் பெறுவதுதான். மங்களத்தைப் பெற அமங்கலங்கள் போக வேண்டும்.
நரகமாகிய அமங்கல அசுரனை மாய்த்து சொர்க்கமான தெய்வத்தன்மையைப் பெறும் நோக்கில் கொண்டாடப்படுவதுதான் தீபாவளி எனலாம். பெரியாழ்வார் கண்ணனை நரக நாசன் என்று போற்றுகிறார். நரகனை நாசம் செய்யும் கண்ணனை தீபம் ஏற்றிக் கொண்டாடுகிறோம். நரகாசுரன் பகவானின் பிள்ளைதான் . தன் புதல்வனை, தானே அழிப்பாரா என்ற கேள்வி எழும். உலகில் நல்லதும் கெட்டதும் இறைவனின் படைப்பு. கெட்டது நல்லவற்றை அழிக்க முற்படும்போது பகவான் கெட்டதை அழிக்கிறார். தன் படைப்புதானே என்று பார்க்க மாட்டார்
அடுத்து ஒரு கேள்வி. நரகனின் தாய் பூமாதேவி. தாயே தன் குழந்தையை அழிப்பாளா?
எல்லா வளங்களும் நமக்குத் தரும் தாயான பூமியை அழித்தும் இழித்தும் நாசம் செய்யும் மனிதர்கள் பூமியை நரகமாக்கும்போது அந்த நரகத்தைச் செய்யும் நரகாசுரர்களை பூமியே நாசம் செய்கிறாள். மங்களமாகிய சொர்க்கத்தைத் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் போற்ற வேண்டும். அமங்கலமாகிய நரகத்தைத் தனி வாழ்விலும் சமூக வாழ்விலும் அழிக்க வேண்டும். அதற்கான பிரார்த்தனைதான் தீபாவளிப் பண்டிகை.
பொதுவாக சதுர்த்தசி எண்ணெய் முழுக்கிற்கான நாளல்ல. ஆனால் தீபாவளியன்று மட்டும் சதுர்த்தசி எண்ணெய் முழுக்கிற்கான நாள். ஏதாவது ஒன்று தொலைந்து அல்லது அழிந்து திரும்பி வராது போனால் எண்ணெய் முழுக்கு செய்வது வழக்கம். தீபாவளியில் நமக்கு நரக வாசத்தைத் தரும் கெட்ட எண்ணங்கள் தொலைய தலை முழுக்கிட வேண்டும்.
தீமையைப் போக்கும் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். நன்மையை வளர்ப்போம்.