

போதி மரத்தடியில் ஞானம் பெற்ற பிறகு, தான் பெற்ற ஞானத்தை உலகுக்கு உணர்த்த புத்தர் விரும்பினார். உலகம் அறியாமையிலும் தீமையிலும் உழன்று கிடந்ததை அவர் அறிந்திருந்தார். தன் பணி கடினமானது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், மனித குலத்தின் மீது அவருக்கு இருந்த பரிவு அளவில்லாதது.
தனது கொள்கைகளை மக்களிடையே பரப்ப அவருக்குத் தொண்டர்கள் தேவைப்பட்டார்கள். காசிக்கு அருகேயிருந்த சாரநாத்தில் தவ முயற்சிகளைச் செய்த தனது ஐந்து பழைய சீடர்களைப் பற்றி அப்போது அவர் நினைத்தார். உடனே அந்த ஊரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்.
அந்தச் சீடர்கள் அருகே அவர் சென்றதும் அவரிடம் ஒரு ஒளிச் சுடர் தெரிந்ததை அவர்கள் கண்டுகொண்டார்கள். தங்கள் முன் ஒரு மகான் நிற்பதை உணர்ந்தனர். புத்தரின் முதல் போதனை, அந்த ஐந்து பேரிடம் தொடங்கியது.
நடுநிலைப் பாதை
தீவிர நிலைகள் எதுவாயினும், அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் புத்தர் போதனைகளைத் தொடங்கினார். போகம் நிறைந்த வாழ்க்கையைப் போலவே, கடும் தவமும் தியாகமும் நிறைந்த வாழ்க்கையும் நல்லதல்ல என்றார் புத்தர். நடுநிலைப் பாதையே சிறந்த வழி. அதன் மூலமாகத்தான் ஒருவர் வாழ்வைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும், உண்மையை உணர முடியும் என்றார் புத்தர்.
இந்த உலகம் துன்பங்கள் நிறைந்தது. நமது ஐம்புலன்களின் மூலம் இன்பங்களை அனுபவிக்கும் ஆசையே இந்தத் துன்பங்களுக்கு அடிப்படை காரணம். புனித எட்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இந்தத் துன்பங்களில் இருந்து விடுதலை பெறலாம். நிர்வாணம் எனப்படும் முக்தி நிலையையும் அடையலாம்.
வாழ்க்கையின் இறுதி லட்சியம் நிர்வாணம். அது பிறப்பு - இறப்பு - மீண்டும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட வைக்கும். தவறான நடவடிக்கைகளைத் தவிர்த்து, புத்தர் காட்டிய எட்டு வழிகளைப் பின்பற்றுவதே நிர்வாணத்தை அடைவதற்கான வழி.
எட்டு வழிகள்
நல்ல கொள்கை, நல்ல ஆர்வம், நல்ல மொழி, நல்ல நடத்தை, நல்ல வாழ்வு, நல்ல முயற்சி, நல்ல எண்ணம், நல்ல சிந்தனை ஆகியவையே புத்தர் போதித்த எட்டு வழிகள். இதுவே பௌத்தத் தம்மம் என்றழைக்கப்பட்ட ஒழுக்கச் சட்டம்.
இவற்றைக் கடைபிடித்து நமது துன்பங்களில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம் என்று புத்தர் அறிவுறுத்தினார்.
சாரநாத்தில் அவர் செய்த போதனைகள் ஒரு தொடக்கம் மட்டுமே. தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதி முழுவதையும் அனைத்து மக்களிடமும் பௌத்த வழியைப் பரப்பும் பயணங்களை மேற்கொண்டார். சாமானியர்களும் தனது கொள்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மக்கள் பேசிய பாலி மொழியிலேயே புத்தர் உரை நிகழ்த்தினார். அத்துடன் புத்தரின் போதனைகள் எளிமையானவை. புரிந்துகொள்ளக்கூடியவை.