Last Updated : 13 Oct, 2016 12:04 PM

 

Published : 13 Oct 2016 12:04 PM
Last Updated : 13 Oct 2016 12:04 PM

உயிர் காக்கும் குளம் காப்போம்

மட்குடத்திற்குள் சாம்பலும், எலும்புமாய் இருந்த பூம்பாவை உயிர்பெற்று எழுந்த தலம் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் உறையும் திருமயிலை. இப்பூம்பாவை உயிர்பெற்று எழ வேண்டும் என்பதற்காகத் திருஞான சம்பந்தர் திருமயிலை தேவாரப் பதிகம் மூலம் ‘தைப்பூசங் காணாதே போதியோ போய்விடுவாயோ பூம்பாவாய்’ என்று தன் பதிகத்தில் கேள்வி எழுப்புகிறார் பூம்பாவையை எழுப்ப.

காணக் கிடைக்காத அற்புதக் காட்சி, காணக் கிடைக்கும்பொழுது தவறவிடலாமா என்பது இதன் பொருள். இப்படிப்பட்ட திருத்தலத்தில் நடைபெறும் தெப்ப உற்சவம் எவ்வளவு உயர்வானதாக இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பதிகத்தில் குறிப்பிடப்பட்ட இத்தெப்ப உற்சவம் நடைபெறும் இத்திருக்குளம் அவ்வளவுக்கவ்வளவு சிறப்பானதாக இன்றும் உள்ளது.

“பழமையான பாரம்பரிய விதிகளைக் கடைப்பிடித்துவரும் கோயில்களில் பிரதானமானது இந்தக் கோயில். தைப்பூசத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா இங்கு மிகவும் விசேஷமானது” என்று தொடங்கிய இத்திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் த.காவேரி, பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்திருக்குளத்தைச் சுத்தமாக நிர்வகிப்பதற்காக எடுக்கப்பட்ட வழிமுறைகளை விவரிக்கத் தொடங்கினார்.

இந்தத் திருக்குளம் வறண்டு போகாமல் இருக்க மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே திருக்குளத்திற்கு நீர் வரத்து அளிக்கும் நாற்புறக் கால்வாய்களை ஆண்டுதோறும் தூர்வாரி, நீர்வரத்து உறுதி செய்யப்படுகிறது. முக்கியமாக அருணகிரிநாதர் சன்னிதி வழியாகக் குளத்திற்கு வரும் நீர் சுமார் இருபத்தியிரண்டு அடி வரை நிரம்புகிறது.

இத்திருக்குளத்திற்கு நீர் வரத்து குறைந்த காலகட்டத்தில் குளத்தில் உள்ள மீன்கள் இறந்துவிடும் அபாயம் உண்டானது. அவசரமாக மீன்களைக் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் பிரதிக்என்விரோ பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை நிர்வாகம் அணுகியது. அவர்கள் `இன்ஸ்டண்ட் ஐசியூ` என்று சொல்லக்கூடிய வகையில், பயோ கிரானியூல்ஸ் என்ற குறு மாத்திரைகளைக் குளத்து நீரில் படியோரமாகப் போட்டார்கள். இதனால் உடனடியாக நீரில் ஆக்ஸிஜன் வாயு கொண்ட நீர்க் குமிழிகள் தோன்ற ஆரம்பித்தன. நீருக்குள் உயிர் காற்று பெற்ற மீன்கள் துள்ளி விளையாடத் தொடங்கின.

இந்த வழிமுறையும் தற்காலிகமானதுதான். நீர் ஓட்டமுள்ள ஆறு, பெரிய அலைகள் உள்ள கடல் ஆகியவற்றின் மேல்தட்டில் பாசிகள் ஏற்படுவது இல்லை. ஆனால் சிறிய அலைகள் கொண்ட குளங்கள் வெளிர் பச்சை நிறத்தில் காணப்படுவது இயற்கை. ஆனால் இவற்றில் குப்பை மீண்டும் சேரத் தொடங்கினால், நீரில் அவை வழக்கம் போல் மக்கி, நீர்ப்பாசியை வேகமாக வளரச் செய்யும். இந்தப் பாசி, குளத்தில் உள்ள நீரின் மேல்மட்டத்தில் படர்ந்து, நீரில் எஞ்சியுள்ள ஆக்சிஜனையும் உறிஞ்சத் தொடங்கிவிடும்.

இதனால் மீண்டும் ஆக்சிஜன் கிடைக்காத குளத்து மீன்கள் இறந்து, மிதந்து, மேலும் நாற்றமடிக்கத் தொடங்கிவிடும். இந்த அபாயத்தை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்று நிர்வாகம் முடிவு செய்தது. எனவே நிரந்தரமாகச் சுழலும் செயற்கை நீரூற்று அமைக்கப் பட்டு, செயல் படுத்தப்படுகிறது என்று சொல்லும் காவேரி, தமிழகத் திருக்கோயில்களில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று தெரிவித்தார்.

படிகளைப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் தினந்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மயிலையின் நிலத்தடி நீர் உயரக் காரணமான இக்குளத்தின் கரை எங்கும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டு, தினந்தோறும் அந்த மலர்களைக் கொண்டு சோமாஸ்கந்தர் அலங்கரிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டார் காவேரி.

மென்மையாய் தென்றல் ஈரக்காற்றாய் சிலுசிலுக்க, சூரிய ஒளிபட்டு வைரமணி நீரலைகளின் ஊடே மீன்கள் துள்ளி விளையாடும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்.

சுத்தமான பக்தி

முன்னோர்களுக்குத் திதி கொடுக்க, வாழை இலையில் வைத்த பிண்டம் போன்ற உணவுப் பொருட்கள், தெப்பத் திருவிழாவின்போது வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கொழுக்கட்டை ஆகியவற்றைக் குளத்து நீரில் போடக் கூடாது. இவற்றை மீன்கள் உண்ணுவதே இல்லை. மாறாக மீனுக்குத் தேவையான உயிர்க் காற்றை இவை மறைமுகமாக உண்டு மீன்களின் உயிரைப் பறிக்கின்றன என்பதுதான் உண்மை. குப்பைகளை அதற்கான தொட்டியில் போட்டுவிடுவது நலம்.

ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் மீனாகத் திருக்குளத்தில் வாழ்கிறார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கை. குப்பையைப் போட்டு அவற்றிற்கு மூச்சுக் காற்று கிடைக்காமல் செய்வது எந்த விதத்தில் புண்ணியம் சேர்க்கும்? பாவங்கள் மட்டுமல்ல குப்பைகளும் சேர்ந்துவிடாமல் பத்திரமாக குளத்தைக் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு பக்தனின் தலையாயக் கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x