

குடகு மலை . இயற்கை என்னும் எழிலாள் தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட இடம் பச்சை புடவையுடுத்தி பவனி வருகிறாளோ என்று நினைக்கத் தூண்டும். கர்நாடகாவின் தலை சிறந்த மலைவாசஸ்தலம். இதன் உச்சியில் உள்ளது மெர்க்காரா எனப்படும் மடிக்கரே.
ஊரைச் சுற்றிலும் பச்சை போர்த்திய மலைகள். இங்கே இருக்கும் பிரதான கோயில் ஓம்காரேஷ்வர் ஊருக்குள்ளேயே உள்ளது. கோயில் வாசலில் இறங்கியவுடன் குளம் தெரியும். அதைத் தாண்டியதும் மதில் சுவர்களால் சூழப்பட்ட கோயில்.
இந்தக் கோயில் மசூதி போன்ற வடிவத்தில் நான்கு ஸ்தூபிகளுடன் உள்ளது. இதுதான் இதன் விசேஷ அம்சம். அப்பகுதியை முன்பு ஆட்சி செய்த முகமதியர்களின் தாக்கமாக இருக்கலாம். மத்தியில் வசீகரமான குவிமாடம், அதன் நான்கு முனைகளில் ஸ்தூபிகளும் அதைச் சுற்றி ரிஷபங்களும் உள்ளன. குவிமாடத்திற்கு மேல் திசைகாட்டும் கருவியும் உள்ளது. படிகளில் ஏறினால் வாசலில் வளைவு. இரு மணிகள் முழக்கமிடுகின்றன. ஏறியவுடனேயே மூலவர் சந்நிதி வந்து விடுகிறது.
மற்ற கோயில்களைப் போல் பக்தர்கள் தரிசிப்பதற்கு என விஸ்தாரமான கூடமோ அல்லது தூண்கள் அடங்கிய மண்டபமோ இல்லை. சுற்றுப்பிரகாரத்திலேயே சந்நிதி இருக்கிறது. கதவின் சாளரங்கள் பஞ்ச உலோகத்தினால் ஆனவை. இது லிங்கேஸ்வரனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1820-ல் லிங்கராஜேந்திரன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. அவன் ஒரு கொடுங்கோலன். தன்னுடைய அரசியல் அபிலாஷைகளுக்காக நேர்மையும் பக்திமானுமான அந்தணனைக் கொன்றான்.
இன்னொரு கதையின் பிரகாரம் அவருடைய மகளை அடைய விரும்பினான். அவர் மறுத்ததால் தீர்த்துக் கட்டியதாகக் கூறப்படுகிறது. அவரைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கனவிலும் நனவிலும் வந்து மன்னனை உலுக்கி எடுத்தார் அந்தணர். சித்திரவதை தாங்காமல் அவன் ஆன்றோர்கள், அறிஞர்கள் கூற்றுப்படி சிவனுக்குக் கோயில் கட்டினான்.
அதில் காசியிலிருந்து லிங்கத்தைக் கொண்டு வந்து ஸ்தாபித்து துயர் நீங்கப் பெற்றான். பிரகாரச் சுவற்றில் வண்ண மயமான சித்திரங்கள் உள்ளன. புராணங்களையும் இதிகாசங்களையும் தீட்டியிருக்கிறார்கள்.
கோயில் முன் உள்ள அழகிய குளத்தில் நடக்கும் முக்கியமான திருவிழா தெப்போற்சவம். ஊரே கோயில் முன்னால் கூடிவிடுமாம். தூரத்திலிருந்து பார்க்கும் போது வண்ணமயமான தேவலோக ரதம் வலம் வருவது போல் இருக்கும்.