Published : 12 Aug 2022 05:40 AM
Last Updated : 12 Aug 2022 05:40 AM
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தொலைபேசி மூலம் நேற்று பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, ஹைதராபாத்தைச் சேர்ந்த வீராரெட்டி, திருமலையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் பக்தர்கள் குளிக்க வெந்நீர் வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், "தற்போது திருமலையில் 4,500 வெந்நீர் இயந்திரங்கள் உபயோகத்தில் உள்ளன. வரும் பிரம்மோற்சவ விழாவிற்குள் அனைத்து விடுதிகளுக்கும் வெந்நீர் இயந்திரங்கள் (கீஸர்) பொருத்தப்படும்" என உறுதியளித்தார். இதேபோன்று, விஜயவாடாவைச் சேர்ந்த தினேஷ் திருமலையில் உள்ள தேவஸ்தான அஸ்வினி மருத்துவமனையில் டயாலிஸிஸ் வசதி செய்தால் சில ஆபத்தான சமயங்களில் அது மிகவும் உபயோகமாக இருக்குமென ஆலோசனை வழங்கினார். இது உடனடியாக செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது.
மேலும், சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து, சுவாமியை தரிசிக்க நெருங்கும் சமயத்தில் சிலர் தங்களது பிள்ளைகளை அவர்களின் தோள் மீது தூக்கிச் செல்வதால், பின்னால் வரும் பக்தர்களுக்கு அது மிகவும் இடைஞ்சலாக உள்ளதாக குற்றம் சாட்டினார். இதுவும் விரைவில் சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், சில தேவஸ்தான ஊழியர்கள் தரிசனம், பிரசாதம்,தங்கும் அறைக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் தெரிவித்தனர்.
லஞ்சம் தடுக்கப்படும்
இதுகுறித்து பல முறை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, இனி இது தொடர்ந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தேவஸ்தான ஊழியர்கள் அனைவரும் லஞ்சம் பெறுவதில்லை. யாரோ ஓரிருவர் செய்யும் தவறால் இது அனைவரையும் பாதிக்கிறது என தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT