Published : 06 Aug 2022 06:02 AM
Last Updated : 06 Aug 2022 06:02 AM

வரலட்சுமி விரதத்தையொட்டி தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் உலா

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வரலட்சுமி விரதம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருப்பதி: ஆடி பவுர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நேற்று வரலட்சுமி விரத விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள ஆஸ்தான மண்டபம் முழுவதும் பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மாலை 6 மணி முதல் 7 மணி வரை பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

முகக்கவசம் கட்டாயம்: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி நேற்று கூறியதாவது:

ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க தற்காலிக ‘ஜெர்மன் ஷெட்கள்’ அமைக்கப்படும். இம்முறை வாகன சேவையின்போது, மாட வீதிகளில் பழங்குடி இனத்தவரின் பாரம்பரிய நடனமும் இடம்பெறும். மேலும், வழக்கம்போல் பல்வேறு மாநில கலைஞர்களும் வாகன சேவையில் பங்கேற்பார்கள். பக்தர்களுக்கு 3,500 வாரி சேவகர்கள் சேவை செய்ய உள்ளனர். இவ்வாறு ஒய்.வி. சுப்பா ரெட்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x