கருணை தெய்வம் தென்காசி விஸ்வநாதர்

கருணை தெய்வம் தென்காசி விஸ்வநாதர்
Updated on
2 min read

காசிக்குப் போய் கங்கையில் புனித நீராடினால்தான் ஒவ்வொரு பக்தனின் கடமையும் பூர்த்தியாவதாக ஆன்மிக நூல்கள் சொல்கின்றன.

காசி வடக்கே அமைந்திருப்பதால், தெற்கே வசிக்கின்ற எல்லோரும் காசிக்குச் செல்வது சிரமம்தான். பொருளாதார வசதி, உடல் நிலை எனப் பல காரணங்களை முன்னிட்டுப் பலராலும் பயணிக்க முடியாமல் போவது இயல்பு.

அதனால் என்ன? இருக்கவே இருக்கிறது தென்காசி.

திருநெல்வேலிக்குப் பக்கத்தில் குற்றாலச் சாரலின் குளுமையோடு அமைந்துள்ள அழகான ஊர் தென்காசி.

காசியில் குடி கொண்டுள்ள காசி விஸ்வநாதர், தானே விருப்பப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார் என்பது நம்பிக்கை. எனவே, அங்கே போய் வணங்க முடியாதவர்கள், தென்காசி வந்து வணங்கினாலே காசிக்குச் சென்ற பலன் முழு அளவில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

காசி விஸ்வநாதர் கோயில் தென்காசியில் அமையக் காரணமாக இருந்தவன் பராக்கிரம பாண்டியன் எனும் மன்னன். கி.பி. 1442-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவன் பராக்கிரம பாண்டியன். கல்வி, வீரம், புலமை, மொழியறிவு, பக்தி என்று எல்லாவற்றிலும் சிறந்து காணப்பட்டான்.

கனவில் வந்த விஸ்வநாதர்

பாண்டியன் சிறந்த சிவ பக்தன். தினமும் ஈசனை வழிபடாமல் உணவு அருந்த மாட்டான். வருடம் ஒரு முறை காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடி, விஸ்வநாதரைத் தரிசித்து வருவது அவனது வழக்கம். ஒரு நாள் இரவு பாண்டியன் கனவில் காசி விஸ்வநாதர் வந்தார். ‘நீ வசிக்கும் ஊரிலேயே எனக்கு ஒரு கோயில் எழுப்பு. நானே அங்கே வந்து குடி கொள்கிறேன். வருடா வருடம் என்னைத் தேடி வடக்கே நீ வர வேண்டாம்’ என்று கூறினாராம்.

பராக்கிரமனுக்கு சந்தோஷம். ‘இறைவா, உனக்கு ஆலயம் கட்டுகின்ற பெரும் பேற்றை எனக்கு வழங்கி உள்ளாய். மகிழ்ச்சி. ஆனால், எந்த இடத்தில் ஆலயம் கட்ட வேண்டும் என்கிற தகவலையும் சொன்னால் நன்றாக இருக்குமே?’ என்று கேட்டானாம்.

அதற்கு காசி விஸ்வநாதர், ‘விடிந்ததும் கண் விழித்துப் பார். தரையில் எறும்புகள் சாரி சாரியாக உன் கண்களில் படும். அவற்றைப் பின்தொடர்ந்து செல். அந்த எறும்புகள் எந்த இடத்தில் போய் நிற்கின்றனவோ, அங்கே எனக்குக் கோயில் கட்டு’ என்று அருளினாராம்.

அதிகாலையில் கண்விழித்தான் பராக்கிரமன். தரையை நோக்கினால், ஈசன் அருளியபடி, இவன் காலடிக்குக் கீழே எறும்புகள். இந்த எறும்புக் கூட்டம் எதுவரை செல்கிறது என்று பின்தொடர்ந்து பார்த்தான். சித்ரா நதி (சிற்றாறு) அருகே செண்பக வனத்தில் வந்து எறும்புகள் நின்றன.

அங்கே புதர் மண்டிக் கிடந்த இடத்தைச் சுத்தம் செய்ய ஆணையிட்டான். அற்புதமான சிவலிங்கம் ஒன்று அங்கே இருக்கக் கண்டான். ஈசனை வணங்கி, ஆலயம் அமைக்கும் பணியைத் துவங்கினான். மிகப் பிரமாண்டமாக இந்த ஆலயத்தைக் கட்டி முடித்து குடமுழுக்கும் நடத்தினான். இன்றைக்கும் ஆலயத்தில் எந்த ஒரு திருவிழா என்றாலும், முதல் மரியாதையைப் பராக்கிரம பாண்டியன் திருவடிவத்துக்குத்தான் அளிக்கிறார்கள்.

பராக்கிரமன் கட்டிய ஆலயம்தான் இன்றைக்கும் உள்ள தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில். இங்கே உமையின் திருநாமம் உலகாம்பிகை. காசியில் விசாலாட்சியைத் தரிசித்தால் கிடைக்கும் பலன், உலகாம்பிகையைத் தரிசித்தால் கிடைத்துவிடும் என்கிறார்கள்.

பொங்கி எழுந்த கங்கை

ஆலயம் கட்டி முடித்த பின், கங்கை நீர் கொண்டு தினமும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசைப்பட்டான் பராக்கிரமன். இவனது எண்ணத்தை அறிந்துகொண்ட இறைவன், இந்தக் கோயிலிலேயே ஓரிடத்தில் கங்கையைப் பொங்கச் செய்தார். காசி விஸ்வநாதரைத் தொடர்ந்து கங்கையும் தென்காசிக்கு வந்தது கண்டு சந்தோஷப்பட்ட பராக்கிரமன், கங்கை பொங்கிய இடத்தில் ஒரு கிணறு கட்டினான்.

பராக்கிரமன் அமைத்த இந்தக் கிணறு, ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் காணப்படுகிறது. ‘காசி கங்கைக் கிணறு’ என்றே அழைக்கிறார்கள். தினமும் இறைவனுக்கு இந்த நீர் கொண்டுதான் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in