

பக்தியில் திளைத்து, உலக வாழ்வின் இன்பங்களில் பற்றை விடுத்து, பக்திப் பரவசம் மேலோங்க ஆனந்த நிலையை எய்திய ஞானிகளில். பலர் தங்களது இறையனுபவத்தைப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்தினர். அப்பாடல்கள் நமக்கு இன்றும், என்றும் வாழ்வியல் நற்சிந்தனைகளை வழங்குகின்றன.
18-ம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த இரு வேறு ஞானியர் தாங்கள் பின்பற்றிய ஞானநெறி வெவ்வேறானதாக இருந்தாலும், இருவரும் ஒரே மாதிரியான இறையனுபவத்தைப் பாடல்களில் வெளிப்படுத்தியது வியப்பூட்டுகிறது.
தாயுமானவர் சுவாமிகள்
18-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறையனுபவத்தில் ஈடுபட்டு, “பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற பரிபூரணானந்தமே” என்று ஞானநிலையை அடைந்தவர் தாயுமானவர். திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள தாயுமானவரை வணங்கி மகப்பேறு வாய்த்ததால், அவருடைய பெற்றோர் அவருக்குத் தாயுமானவர் என்றே பெயர் சூட்டினர். கல்வி கேள்விகளில் சிறந்து, சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்று, சைவ ஆகமங்களையும் கசடறக் கற்றார் தாயுமானவர். திருமூலர் மரபில் வந்த குரு ஒருவரால் ஆட்கொள்ளப்பட்டு, “சும்மா இரு” என்ற உபதேசத்தைப் பெற்றார் தாயுமானவர்.
இந்த உபதேச மொழிதான், அவருடைய பாடல்களுக்கு அடிப்படையாக அமைந்தது. சூழ்நிலை காரணமாக நாயக்கர் ஆட்சியில், ராஜப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்தாலும், அவர் மனது பக்தி மார்க்கத்தில் மூழ்கி இருந்தது. எனவே, சந்நியாசம் பூண்டு, தல யாத்திரை சென்றார். பரிபூரணானந்தம், மௌன குரு வணக்கம், சுகவாரி, தேஜோமயானந்தம், பராபரக்கண்ணி, ஆனந்தக் களிப்பு என்று பல தலைப்புகளில் பாடல்களை இயற்றினார்.
குணங்குடி மஸ்தான் சாகிபு
18-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு. அவர் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகே உள்ள சிற்றூரான குணங்குடியில் பிறந்தவர். “மஸ்த்” என்ற பாரசீகச் சொல்லுக்கு ‘போதை, வெறி’ என்று பொருள். இறைவன் மீது தீராக்காதல் கொண்டு, ஞானநிலையுடன் திகழ்ந்ததால் அவரை மஸ்தான் என்று அழைத்தனர். இச்சொல்லோடு ஊர்ப்பெயரை இணைத்து “குணங்குடி மஸ்தான் சாகிபு” என்று அறியப்பட்டார்.
அவர் சூஃபித்துவத்தைப் பின்பற்றியவர். சூஃபி என்ற அரபுச் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், ஆத்ம ஞானம் என்ற சொல் வெகுவாகப் பொருந்தும். அவர்தம் படைப்புகள் பேரானந்தத்தையும், மனித வாழ்வின் தத்துவ நிலையையும் கூறின. இறைவனை அறிந்து, அவனுடன் இரண்டறக் கலக்கும் நினைவில் தம்முடைய சூஃபி மார்க்கத்தின் இறுதியை அடைந்து பாடிய பாடல்கள் எளிமையாகவும், ஞானக் கருத்துக்களைக் கூறுவனவாகவும் இருக்கின்றன. குருவணக்கம், ஆநந்தப்பத்து, சதக நூல்கள், ஆனந்தக் களிப்பு, கண்ணிகள் (நிராமயக் கண்ணி, பராபரக் கண்ணி, றகுமான் கண்ணி, எக்காலக் கண்ணி போன்றவை) கீர்த்தனைகள் ஆகியவை அவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
ஆனந்தக் களிப்பு
பேரின்பத்தில் திளைத்து, இறைவனை அறிந்து அவனுடன் இரண்டறக் கலக்கும் ஞான அனுபவத்தைப் பெருமகிழ்ச்சியுடன் சொல்வதே ‘ஆனந்தக் களிப்பு’. தாயுமானவர், குணங்குடியார் ஆகிய இருவருமே ‘ஆனந்தக் களிப்பு’ என்ற தலைப்பில் தங்கள் இறையனுபவத்தை வெளிப்படுத்தி, பாடல்களை இயற்றியுள்ளனர்.
தாயுமானவர் தமது ‘சங்கர சங்கர சம்பு சிவ, சங்கர சங்கர சங்கர சம்பு’ என்று துவங்கும் ஆனந்தக் களிப்பில்,
ஆதி அநாதியும் ஆகி எனக்கு
ஆனந்தமாய் அறிவாய் நின்று இலங்கும்
ஜோதி மவுனியாய்த் தோன்றி அவன்
சொல்லாத வார்த்தையைச் சொன்னாண்டி தோழி! - சங்கர
என்று தான் அறிந்த ஜோதிமய ஆனந்த நிலையையும், அதற்குக் காரணமான மௌன குருவின் பெருமையையும் ஒருசேரக் கூறுகிறார்.
என்னையும் தன்னையும் வேறா உள்ளத்து
எண்ணாத வண்ணம் இரண்டு அற நிற்கச்
சொன்னது மோஒரு சொல்லே அந்தச்
சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் சங்கர
என்று இறைவனுடன் இரண்டறக் கலந்த பெருநிலையை விவரிக்கிறார் தாயுமானவர்.
குணங்குடியார் தமது சூஃபி மார்க்கத்தின் இறுதியை அடைந்து பாடிய பாடல்கள் ஆனந்தக் களிப்பு என்ற தலைப்பில் அமைகின்றன.
“இன்றைக்கிருப்பதும் பொய்யே இனி
என்றைக் கிருப்பது மெய்யென்ப தையே
என்று மிருப்பது மெய்யே என
எண்ணி எண்ணி அருள் உண்மையைப் போற்றி!!
என்று மெய்ஞ்ஞானத்தை உணர்ந்த நிலையினைக் கூறி,
மூலக் கனலினை மூட்டும் ஒளி
மூக்கு முனையில் திருநடனங் காட்டும்
பாலைக் கறந்துனக் கூட்டும் என்று
பட்சம் வைத்தென்னைப் படைத் தருளித்தான்
என்று குருவருளால் கிட்டும் யோகப் பேரானந்த நிலையை விவரிக்கிறார் குணங்குடியார்.
அது மட்டுமல்லாமல்,
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! என்று தாயுமானவர் பாடுவதை,
குணங்குடியார்
எந்த உயிரும் எமது உயிர் என்று எண்ணிஎண்ணிச்
சிந்தை தெளிய அருள் செய்வாய் நிராமயமே
என்று பாடுகிறார். வெவ்வேறு நெறிகளைப் பின்பற்றினாலும் அனைவரும் சென்றடைய வேண்டியது இறைச் சிந்தனையின் பேரானந்த நிலைதான் என்பதை நமக்கு உணர்த்துகின்றன இப்பெரியோரின் பாடல்கள்.
பேரின்பத்தின் இறுதி இலக்கு
மெய்ஞ்ஞானத்தின் அடிப்படை ‘தன்னையறிதல்’. தன்னையறியும் முயற்சியில் ஈடுபடுபவர் தான் பேரின்பத்தின் இறுதி இலக்கான இறைவனை அடைய முடியும். அந்த நிகழ்முறையில், இவ்வுலக ஆசைகளை விட்டொழித்து, நிலையாமையை உணர்ந்து, இறை வழிபாட்டில் தன்னைக் கரைத்துக் கொள்வதே ஞானநெறியாகும். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் மற்றும் குணங்குடி மஸ்தான் சாகிபு இருவருமே ஞானநெறியில் ஈடுபட்டு, ஆனந்தக் களிப்பை அடைந்தனர்.