

குழந்தைகளுக்கான கலைக் களஞ்சியம் முதல் பல்வேறு இலக்கியப் பணிகளிலும் படைப்பிலக்கியத்திலும் முத்திரை பதித்தவர் பெரியசாமித் தூரன். இசைத் துறைக்கும் நாட்டியத்துக்கும் உதவும் எண்ணற்ற பங்களிப்பையும் செய்திருக்கிறார். கீர்த்தனை அமுதம், இசைமணி மஞ்சரி, முருகன் அருள்மணிமாலை, நவமணி இசைமாலை, இசைமணி மாலை, கீர்த்தனை மஞ்சரி ஆகிய இசை சார்ந்த படைப்புகளை தந்திருக்கிறார். பெரியசாமித் தூரனின் 108-வது பிறந்த நாளையொட்டி, சமீபத்தில் கலாக்ஷேத்ரா வளாகத்திலுள்ள அரங்கத்தில் தூரனின் காதல் வள்ளி கண்ட முருகன் என்னும் நாட்டிய நாடகத்தை பரத கலாஞ்சலி நாட்டியக் குழுவினர் நிகழ்த்தினர்.
42 ஆண்டுகளுக்குப் பிறகு
1974-ம் ஆண்டில் “தன்னுடைய வள்ளி திருமணம் பாடல்களை வைத்து ஒரு நாட்டிய நாடகத்தை தமிழிசைச் சங்கத்திற்காக நடத்தித் தர முடியுமா?” என்று நாட்டிய குரு தனஞ்ஜெயனிடம் கேட்டார் பெரியசாமி தூரன். அந்த நாட்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகளே அதிகம் நடந்துகொண்டிருந்த சூழ்நிலையில், இந்த நாட்டிய நாடகம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதுதான் பரத கலாஞ்சலி தன்னுடைய குழுவினருடன் அரங்கேற்றிய முதல் நாட்டிய நாடகம் என்னும் பெருமையையும் பெற்றது. பெரியசாமித் தூரனால் இந்த நாட்டிய நாடகத்துக்கு கொடுக்கப்பட்ட தலைப்புதான் ‘காதல் வள்ளி கண்ட முருகன்’.
தமிழகம் முழுவதும் இந்தியாவின் பல பகுதிகளிலும் அரங்கேறிய இந்த நாடகம், வெளிநாட்டு மேடைகளிலும் வள்ளி முருகன் திருமணத்தை அரங்கேற்றியது. ஏறக்குறைய 42 ஆண்டுகளுக்குப் பின், பெரியசாமி தூரனின் பிறந்த நாளையொட்டி இந்த நாடகத்தை சாந்தா, தனஞ்ஜெயனின் மகன் சத்யஜித் தனஞ்ஜெயன், தன்னுடைய குழுவினருடன் கலாக்ஷேத்ரா அரங்கத்தில் கடந்த வாரம் அரங்கேற்றினார். இந்த நிகழ்வை பரத கலாஞ்சலியும் பெரியசாமித் தூரன் தமிழ் இசை அறக்கட்டளையும் இணைந்து நடத்தின.
வள்ளி மானை வளையவந்த முருகன்
வேடர் குல மன்னனின் மகளான வள்ளி, முருகனையே தன் மனத்தில் நிறுத்தி வளர்கிறாள். தான் மனதில் நினைத்திருக்கும் மணாளன் முருகனையே மணம் செய்து கொள்வதுதான் ‘காதல் வள்ளி கண்ட முருகன்’ நாட்டிய நாடகத்தின் கதை. வேலனாக சர்வேஷ் குமாரின் நாட்டிய பாவங்கள் ரம்யமாக இருந்தன. வேடுவனாக வந்தவரின் உடல் மொழி அரங்கில் இருப்பவர்களை ஆச்சரியப்படவைத்தது. பருவப் பெண்ணாகத் தோழிகளுடன் பந்தாடும் காட்சியிலும், முருகன், பொல்லாத கிழவனாக வேடமிட்டு யானையைக் காட்டி மிரட்டும் காட்சிகளிலும் மகிழ்ச்சி, பயம், சிருங்காரம் எனப் பல உணர்ச்சிகளைத் தன்னுடைய முகத்தில் வெளிப்படுத்தி வள்ளியாகவே பார்ப்பவரின் மனதில் வளைய வந்தார் வித்யா தினகரன்.
செவ்வியல் இசையோடு கிராமிய இசை, காவடிச் சிந்து போன்ற பலவகைகளையும் பயன்படுத்தி பெரியசாமித் தூரனின் பாடல்களுக்கு துறையூர் ராஜகோபால சர்மா, மதுரை சேதுராமன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.