

தீர்மானிக்கிறான் மனிதன். திசை திருப்பிவிடுகிறான் இறைவன்.
ஒரு தோட்டத்தில் பயிர்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்தன. அதிகாலையில் அங்கு சென்று அறுவடை செய்ய அவர்கள் முடிவு செய்திருந்தார்கள். இரவில் நன்றாக உறங்கி விழித்தெழுந்த அவர்கள் ஒருவரையொருவர் அழைத்துக்கொண்டு மெதுவாகப் பேசியவாறு நடந்தார்கள்.
“எந்த ஏழையும் பிச்சை கேட்டு நம் விளைச்சல் நிலத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது. அவர்களைத் தடுத்து விரட்டும் சக்தியுடன் நாம் செல்கிறோம்!” என்ற உறுதியுடன் சென்றார்கள்.
அவர்கள் நிலத்தை நெருங்கியபோது அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர். வயல்கள் அழிந்துகிடந்தன. இந்த நிலைக்கு என்ன காரணம் என்ற சிந்தனைக்கு விடை கிடைத்தது. “நாங்கள் வழி தவறியவர்களாகிவிட்டோம். அதன் விளைவாகவே பாக்கியத்தை இப்போது இழந்து நிற்கிறோம்!” என்று புலம்பினார்கள்.
அவர்களில் நடுவராக இருந்த ஒருவர் சொன்னார்: “எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் இறைவனைத் துதித்து அவனுடைய நல்லருளை நாட வேண்டும் நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்றார்.
“ஆமாம்.. அவனே நமது இரட்சகன், மிகத்துாய்மையானவன், நாங்கள்தான் அநியாயக்காரர்களாக இருக்கிறோம்…அதற்குரிய கூலிதான் இந்த இழப்பு!” என்று ஒப்புக்கொண்டார்கள்.
“நிச்சயமாக நாம்தான் இவர்களைச் சோதித்தோம்! அந்தத் தோப்புக்குரியவர்கள் அதன் விளைச்சலை மறுநாள் அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள். எனினும், அல்லாஹ் நாடினால்- இன்ஷா அல்லாஹ்- என்ற பாதுகாப்புத் தேடும் வார்த்தைகளை அவர்கள் கூறவில்லை.ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழந்துகிடக்கும் பொழுதே உமது இறைவனின் புறத்தால் ஓர் ஆபத்து வந்து அந்தத் தோட்டத்தைத் துடைத்து அழித்துவிட்டது…” என்று குர்ஆன் எழுதுகோல் (கலம்) அத்தியாய வசனங்கள் விவரிக்கின்றன.
யாருக்கும் எதையும் ஈயாமல் மொத்த விளைச்சலையும் அனுபவிக்க விரும்பும் தோட்டக்காரனை இறைவன் பார்த்துக் கொண்டிருப்பானா?
அவன் நாடியபடி விளைந்த பயிரை நெருப்பு சூழ்ந்துகொண்டு அழித்துவிடுகிறது. விளைபொருள் இருந்த இடத்தில் மிஞ்சியிருந்தது கருத்த சாம்பல் மட்டுமே! இறைவனை மறந்து தன்னிச்சையாக இயங்குபவர்களுக்கு அவன் அளிக்கும் தண்டனை இத்தகையதுதான். வரம்பு மீறியவர்களாக இருப்பவர்களை வழிக்குக் கொண்டுவர சோதனைகளை அவன் ஏவுகிறான்.