

கலியுகத்தில் மக்கள் தங்கள் கர்மவினைப் பயனின் உபாதை குறைய வேங்கடவனை வழிபடுதல் வழக்கம். முதுமை, பொருளாதார மற்றும் சூழ்நிலை ஆகியவை காரணமாக பலரால் வேங்கடவனைத் தரிசிக்க முடியாமல் இருக்கும். அவர்களுக்குக் காட்சி கொடுக்கும் வண்ணமாக, வண்ண வண்ணக் கோலத்தில் பல அலங்காரங்களில் திருவீதி உலா வருவார் மலையப்ப சுவாமி.
இது பிரம்மன் வேங்கடவனுக்குச் செய்யும் திருமலை உற்சவம். இந்தத் திருமலை உற்சவத்தைக் காண லட்சோப லட்சம் பக்தர்கள் திரளாகக் கூடுவர். கோவிந்த கோஷம் விண்ணை முட்டும். திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் நல்ல திருப்பம் என்பது சொல் வழக்கு. கலியுக வரதனான திருவேங்கடமுடையான் பக்தர்களின் கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. திருவேங்கடமுடையானைப் போற்றித் துதிக்கும் குலசேகர ஆழ்வார் பாசுரம்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பயரும் கிடந்தியங்கும்
படியாய் கிடந்துன் பவளவாய் காண்பேனே
புரட்டாசி மாத பிரம்மோற்சவம் அக்டோபர் 3 ம் தேதி தொடங்கி 11-ம் தேதிவரை திருப்பதி திருமலையில் நடைபெற உள்ளது. உற்சவத்தின் முதல் நாள் திங்கட்கிழமை த்வஜாரோகணத்துக்குப் பின்னர் பெரிய சேஷ வாகனம். இரண்டாம் நாள் செவ்வாய் கிழமை சிறிய சேஷ வாகனம், ஹம்ச வாகனம், மூன்றாம் நாள் புதன் கிழமை சிம்ம வாகனம், முத்துப் பந்தல், நான்காம் நாள் வியாழக்கிழமை கல்ப விருஷம், சர்வ பூபால வாகனம், ஐந்தாம் நாள் வெள்ளிக்கிழமை மோகினி அவதாரம், கருட வாகனம், ஆறாம் நாள் சனிக்கிழமை ஹனுமந்த வாகனம், தங்கத் தேர், யானை வாகனம், ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை சூர்யபிரபை மற்றும் சந்திரபிரபை வாகனம், எட்டாம் நாள் திங்கள்கிழமை ரதோத்ஸவம், குதிரை வாகனம், ஒன்பதாம் நாள் செவ்வாய் கிழமை பல்லக்கு சக்ர ஸ்நானம்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி நகரத்தில் இருந்து திருமலைக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். திருமலையில் தற்போது நிலவிவரும் அருமையான இயற்கைச் சூழல், மனதை இறைவனுடன் ஒன்றச் செய்துவிடும் என்பது திண்ணம்.