திரிபுராவில் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரி

திரிபுராவில் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரி
Updated on
1 min read

இந்தியாவிலுள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இத்திருக்கோயில் விளங்குகிறது. மகாவிஷ்ணு சதிமாதாவைத் தனது சுதர்சன சக்கரத்தால் வீழ்த்தியபோது மாதாவின் உடல் 51 துண்டுகளாக நாட்டின் பல பகுதிகளிலும் விழ, அவை ஆங்காங்கே கோயில்களாக உருப்பெற்று சக்திபீடங்களாக வழிபடப்பட்டு வருகின்றன. அவ்வாறு திரிபுராவின் முன்னாள் தலைநகரான உதய்பூருக்கு வெளியே மாதாவின் வலது கால் வந்து விழுந்த பகுதியே இப்போது திரிபுரசுந்தரி என்ற பெயரில் வணங்கப்பட்டு வருகிறது. இதுவே அந்த மாநிலத்தின் பெயருக்கான காரணமாகவும் இருக்கலாம்.

கூர்ம (ஆமை) வடிவில் அமைந்துள்ள இக்கோயிலின் மூல விக்கிரகமான மா காளி (காளி அன்னை) சிவப்புநிறக் கருங்கல்லால் ஆனதாகும். பதினாறு வயதுக் குமரியாக வணங்கப்படும் தெய்வமாக மா காளி இருக்கிறாள். மூல விக்கிரகத்திற்கு அருகே சிறிய அளவில் அமைந்த ‘சோட்டோ மா’ (சிறிய தாய்) உருவச் சிலையை அப்போதிருந்த அரசர்கள் வேட்டைக்குப் போகும்போதும், யுத்தங்களுக்குச் செல்லும்போதும் வணங்குவதற்காக எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

கல்யாண் சாகர்

இப்போதுள்ள கோயில் மகாராஜா தான்ய மாணிக்யாவினால் 1501-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இக்கோயிலின் கிழக்கில் ‘கல்யாண் சாகர்’ என்ற குளத்தில் பெரும் வடிவிலான மீன்களையும் ஆமைகளையும் காணலாம். இந்த ஆமைகள் தமது உயிர் பிரியும் நேரத்தில் கோயிலின் அம்மன் சன்னதிக்கு வந்து உயிரை விட, அவை கோயில் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சமாதிகளும் அங்குள்ளன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இவற்றுக்கு ‘பொரி’ போன்றவற்றை உணவாக இட்டுவிட்டு, குளத்தில் நீராடி பின்பு அம்மனை வணங்குகிறார்கள். இந்தக் குளத்தில் உள்ள மீன்களைப் பிடிப்பதற்கு அனுமதியில்லை. ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியன்று கோயிலுக்கு அருகே நடைபெறும் திருவிழாவில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வது வழக்கம்.

திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவிலிருந்து 55 கிலோமீட்டர் சாலைவழிப் பயணம் மூலம் இக்கோயிலை அடையலாம். தெற்கு திரிபுரா மாவட்டத் தலைநகரான உதய்பூரிலிருந்து 3 கிலோமீட்டர் வழியில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in