

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் வரும் 17-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், உற்சவரான மலையப்பர் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு வருவாய் கணக்கு வழக்குகள் ஒப்பிக்கப்பட்டு, கணக்குகள் சமர்ப்பிக்கப்படும். அப்போது சிறிது நேரம் பக்தர்கள் முன்னிலையில் சுவாமி நிறுத்தப்படுவார்.
தங்க வாசல் அருகே சர்வபூபால வாகனத்தில் இந்த ஐதீகமுறை நடத்தப்படும். அப்போது, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பரும், இவர்களுடன் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வகேசவரும் இருப்பர். பின்னர் தேவஸ்தான கோயில் சாவி மூலவரின் காலடியில் வைத்து பூஜை செய்த பின்னர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
ஆனிவார ஆஸ்தானம் இம்முறை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (நாளை) வருவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு முதலே திருமலையில் பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை மட்டும் திருப்பதி ஏழுமலையானை மொத்தம் 74,304 பேர் தரிசித்துள்ளனர். உண்டியலில் ரூ. 5.45 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி சுவாமியை தர்ம தரிசனம் மூலம் தரிசிக்க 20 மணி நேரம் ஆவதாக கூறப்படுகிறது.