

விண்ணகரம், தட்சிண ஜெகந்நாதம் என்றெல்லாம் போற்றப்படும் தலம் நாதன்கோயில் ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோயில்.
நந்திபுர 108 திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40-ல் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும்.
கும்பகோணத்தை அடுத்த நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராணத்தலம் என்ற சிறப்பும் உடையது. நந்தியின் பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம். பஞ்சாயுதபாணியாய் எழுந்தருளியிருக்கும் இப்பெருமானை திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்கள் வாயிலாக மங்களாசாசனம் செய்துள்ளார்.
தட்சிண ஜெகந்நாதம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. மேலும் மகாலெட்சுமி பிராத்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து, எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் வைகாசி பிரமோற்சவம் விசேஷமானது. வரும் மே மாதம் 21- ம் தேதி காலை கொடியேற்றப்பட்டு, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 27-ம் தேதி திருக்கல்யாணமும், 29-ம் தேதி திருத்தேர் வடம்பிடித்தலும், 30-ம் தேதி புஷ்பயாகமும் இக்கோயிலில் நடைபெறுகிறது.