

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 14-வது நாளில் அத்தி வரதர் வெளிர் மஞ்சள் கலந்த நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
அத்தி வரதரை தரிசிக்க சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கர்ப்பிணிகள், குழந்தைகளை அழைத்து வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வரத்தொடங்கியுள்ளதால், நகரப்பகுதி முழுவதும் கார்கள் மற்றும் வேன்கள் ஆக்கிரமித்துள்ளன. விழாவின் 14-வது நாளில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால், முக்கிய சாலைகளில் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத வகையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கேரள மாநில ஆளுநர் சதாசிவம் குடும்பத்தினருடன் அத்தி வரதரை தரிசித்தார். மேலும், துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடுவின் மனைவி மற்றும் நடிகர் சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் சிறப்பு தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: "அத்தி வரதரை அலங்காரம் செய்வதற்கு நேரம் தேவைப்படுவதால், காலை 5 மணிமுதல் மற்றும் இரவு 9 மணி வரை என சுவாமி தரிசன நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால், பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை மேற்கண்ட நாட்களில் சுவாமி தரிசனத்துக்கு அழைத்து வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக ஏற்கெனவே 20 மினிபேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 10 மினிபேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர,10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படுவதுடன் 35 கழிவறைகளும் அமைக்கப்பட உள்ளன. வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பொறுமை காத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.