Published : 05 May 2016 12:15 PM
Last Updated : 05 May 2016 12:15 PM

அட்சய திருதியை அன்று ஆகார தானம்

ஆதிபகவனான விருஷபநாதர் மேருமலை போல் அசையாமலும், கடல்போல் கலக்கமற்றும் காற்றைப் போல் எதிலும் பற்றற்றும், ஆகாயம் போல் மாசின்றியும் தவத்திலிருந்தார். ஆறுமாதம் சென்றது. அவர் முனிவர்களுக்கு சர்யா மார்க்கமாகிய ஆகாரம் ஏற்கும் முறைகளையும் இல்லறத்தாருக்கு ஆகார தானம் அளிக்கும் வழிகளையும் விளக்க விரும்பினார்.

விருஷபநாதர் எல்லா இடங்களிலும் எழுந்தருளினார். அசுவினி நட்சத்திரத்தின் போது வரிசையாக வரும் நிலவு போல எல்லா வீதிகளிலும் வீடுகளிலும் முறையாக மவுனமாக எழுந்தருளினார்.

மக்களுக்கோ விருஷபநாதரின் எண்ணம் புரியவில்லை. அவர்களுக்கு எதிர்கோடல் முதலிய ஒன்பதுவகைப் புண்ணிய வழிமுறைகள் தெரியவில்லை. எனவே சிலர் யானை குதிரை போன்றவற்றையும், சிலர் பட்டாடைகளையும் சிலர் உயர்ந்தரக அணிகலன்களையும் காட்டினர். ஆனால் எவருக்கும் ஆதிநாதருக்கு ஆகார தானம் செய்யும் எண்ணம் தோன்றவில்லை. எனவே பகவான் மேலும் ஆறுமாதம் உபவாசம் மேற்கொண்டார்.

மன்னனுக்கு வந்த கனவு

அஸ்தினாபுரத்து அரசன் சிரேயான்சன் கனவில் மகாமேரு, கற்பகத்தரு, சிங்கம், விருஷபம், சூரியன், சந்திரன், சமுத்திரம், எண்வகை மங்கலங்களை ஏந்திய தேவதைகள் தோன்றினர். அவன் மறுநாள் புரோகிதனை அழைத்து தன் கனவுக்கு விளக்கம் கேட்டான்.

புரோகிதன் அரசனிடம், மகாமேரு கனவில் வந்ததால், விருஷபதேவர் சர்யா மார்க்கமாக இந்நகரத்துக்கு எழுந்தருளுவார். மற்றவை இறைவனின் குணநலன்களையும் நமக்கு வரும் சிறப்புகளையும் குறிக்கும் என்றான். அதைக் கேட்ட அரசன் மகிழ்வுற்றான்.

மறுநாளே சுவாமி வந்தார். சிரேயாம்சன் அவரை எதிர் கொண்டு அழைத்தான். பகவானை வலம்வந்து வணங்கினான். சிரேயாம்சனுக்கு முற்பிறவி ஞானம் வந்தது.

முற்பிறவியில் முனிவருக்கு ஆகார தானம் கொடுத்ததும் அதன் வழிமுறைகளும் அவனுக்குத் தோன்றின. உடனே இது பகவானுக்கு ஆகார நேரமென உணர்ந்தான். தானம் செய்பவருக்கான முறைகளோடு சுவாமியை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உயர்ந்த இருக்கையில் அமரச்செய்தான். அவரின் பாதங்களைத் தூய நீரால் கழுவி, அந்தப் புனிதநீரைத் தன் தலையில் தெளித்துக்கொண்டான். மனம்,மெய்,மொழிகளால் தூயவனாகி வணங்கினான்.

தூய கருப்பஞ்சாற்றால் பகவானின் திருக்கரமான பாத்திரத்தில் நிரப்பினான். அவரும் அருந்தினார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.தேவ வாத்தியங்கள் முழங்கின. நறுமண மந்தமாருதம் வீசியது.

பகவான் ஆகாரம் ஏற்றார். இவ்வாறு முனிவர்களுக்கான ஆகாரம் ஏற்கும் முறையையும் இல்லறத்தாரின் ஆகார தானம் அளிக்கும் முறைகளையும் நடத்திக்காட்டி மீண்டும் மவுனமாக வனத்தில் எழுந்தருளினார்.

இம்முறைப்படியே இன்றும் சமண இல்லறத்தார்களும் முனிவர்களும் பின்பற்றி போற்றி வருகின்றார்கள். அட்சய திருதியை அன்றுதான் பகவான் ஆகாரம் ஏற்றப் புனிதநாளாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x