

நாகர்கோவில்: திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் 6 மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு 22 அடி நீளத்தில் கடுசர்க்கரை யோகம் என்ற மருந்து கலவையாலான பெருமாள் சயனம் கொண்டுள்ளார். இக்கோயிலில் கடைசியாக 1604-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 418 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அதற்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டன. விமானங்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட 7 கும்ப கலசங்கள் தயார் செய்யப்பட்டன.
கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 29-ம் தேதி தொடங்கின. நேற்று காலை 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலையில் பெய்த சாரல் மழையைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டு வந்தனர். 3 கி.மீ.தொலைவுக்கு முன்பாக ஆற்றூரிலேயே பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. காலை 5 மணிக்கு ஜீவகலச அபிஷேகம், புனித தீர்த்த கலசங்களுக்கு வழிபாடு நடைபெற்றது. 6.25 மணிக்கு கருவறை விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த 5 கும்ப கலசங்கள், கருவறையை ஒட்டியுள்ள ஒற்றைக்கால் மண்டபம், உதய மார்த்தாண்ட மண்டபம் ஆகியவற்றின் விமானங்களில் இருந்த இரு கும்பங்கள் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு, 6 மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் காத்து நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை ஏற்றப்பட்ட லட்ச தீபத்தின் ஒளியில் கோயில் ஜொலித்தது.