

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம், கூட்டமாக திருமலையில் குவிந்து வருகின்றனர். கரோனா பரவலுக்கு பிறகு திருப்பதி தேவஸ்தானம் வழக்கம்போல் தரிசன டோக்கன்களை வெளியிட்டு வருகிறது.
வரும் செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் தரிசிக்க இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் tirupatibalaji.ap.gov.in எனும் இணைய தளத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் இம்மாதம் 12,15 மற்றும் 17-ம் தேதிகளில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளுக்காகவும் இன்று காலை 9 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருப்பதி அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பார்வேட்டை உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று காலை உற்சவர்களான ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் ஸ்ரீ வாரி மெட்டு மார்க்கத்தில் உள்ள பார்வேட்டை மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு ஈட்டி எய்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் மாலை உற்சவ மூர்த்திகள் மீண்டும் ஊர்வலமாக கோயில் திரும்பினர்.