

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ‘மகா கும்பாபிஷேககம்’ - சிறப்பு பகிர்வு
சேரநாட்டு வைகுண்டம், செண்பக வனம், கதளிவனம், ஆதிதாமஸ்தலம் என பல பெயர்களால் திருவட்டாறு அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் சுவாமி ஆதிகேசவப் பெருமாள் தெற்கே தலைவைத்து, வடக்கே திருப்பாதத்தை நீட்டி, மேற்கு நோக்கி சயனித்திருக்கிறார்.
இடது கை தொங்கவிட்ட நிலையிலும், வலது கையோக முத்திரை காட்டியும் அமைந்துள்ளது. கோயிலில் நான்கு திசைகளிலும் வாசல் இருந்தாலும் கிழக்கு, மேற்குப்பகுதி வாசல்களே திறக்கப்படுகின்றன. இக்கோயிலின் தலவிருட்சம் செண்பகமரம்.
திருவிதாங்கூர், திருக்கொச்சி, வேணாடு, கேரளம், இப்போது தமிழகம் என பல ஆட்சியாளர்களின் கீழ் இப்பகுதி
இருந்துள்ளது. கேரளத்தின் தென்பகுதியை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் 1729 வரை இப்
போதைய குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்துதான் ஆட்சிசெய்தார்கள்.
அவர்கள் காலத்தில் இந்த ஆலயம் மிகவும் சிறப்புடன் இருந்தது. டச்சுப்படையை குளச்சல் போரில், திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா வீழ்த்தினார். அப்போது, தனது உடைவாளை திருவட்டாறு ஆலயத்தில் வைத்து வணங்
கிய மன்னர், இந்த வெற்றியைத் தந்தமைக்காக 900 பணத்தை ஆதிகேசவப் பெருமாளுக்கு காணிக்கையாகக் கொடுத்தார்.
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சேவை செய்துவரும் முன்னாள் ராணுவ வீரரான சுகுமாரன் (80)
கூறியது: “இப்பகுதியில் எங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு வருக்காவது கேசவன், ஆதிகேசவன், கேசவன் குட்டி, கேசவன் பெருமாள் என பெயர் உண்டு. கங்கை நதி அலகாபாத்தில் தெற்கு, வடக்காக ஓடுகிறது.
திருவல்லா மண்டபம்
இங்கே நீராடிவிட்டு ஆதிகேசவப் பெருமாளை வணங்குவது பெரும்பாக்கியம். இங்கே பெருமாளை முதலில் திருப்பாதத்தை வணங்கிவிட்டு, அடுத்து திரு உந்தியையும், கடைசியாக திருமுகத்தையும் மூன்று வாசல்கள் வழியாக தரிசிக்க வேண்டும். ஆதிகேசவப் பெருமாளின் பாதத்தில் ஹாதலேய முனிவர் வணங்கியபடி இருக்கிறார்.
மாங்கல்ய பூஜை
திருமணத்தடை அகற்றும் தலம் இது. இங்கே குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏழு முறை மாங்கல்ய பூஜை என்ற பிரத்யேக அர்ச்சனை செய்தால் திருமணத்தடை அகன்று வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். அதேபோல், மகப்பேறு இல்லாதவர்கள் மனம் உருக வேண்டி சந்தான கோபால அர்ச்சனை செய்தால் குழந்தைச் செல்வம் கிடைக்கும். இதேபோல், பாம்பினால் (சர்ப்ப) தோஷம் இருப்பவர்களும் இங்கே வந்து வழி பட்டால் சர்ப்பதோஷம் நீங்கும். இங்கு சுதர்சன அர்ச்சனை செய்தால் வாழ்வில் தடைகள் நீங்கிவிடும்.
திருவல்லா மண்டபம்
இக்கோயிலில் திருவல்லா என ஒரு மண்டபம் உள்ளது. 1740-ம் ஆண்டு அன்னியர் படையெடுப்பில் இக்கோயிலில் இருந்த உற்சவ மூர்த்தியை எடுத்துச்சென்று விட்டனர். இதனால், அந்த ராணிக்கு தீராத நோய் ஏற்பட்டது. எனவே, உற்சவரைத் திரும்பவும் திருவட்டாறுக்கே கொண்டுவந்தனர்.
தனது தவறுக்கு பரிகாரமாக அந்த மன்னர் கட்டிய மண்டபம்தான் இது. ஆண்டுக்கு 20 நாட்கள் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில்கருட சேவை நடக்கிறது. வீதியுலா நிறைவுற்றதும் இந்த மண்டபத்தில் தான் சுவாமியை இறக்குவார்கள்.
அங்கு சுவாமிக்கு அவல் நைவேத்தியம் நடைபெறும். இவ்வாறு சுகுமாரன் கூறினார்.
| திருவட்டாறு கோயில் சுவாரஸ்ய தகவல்கள் # கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் முழுவதுமாக ஆறுகளால் சூழப்பட்ட திருவட்டாறு என்னும் ஊரின் நடுப்பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட பழமையான வைணவத் திருத்தலம். # 108 வைணவத் திருத்தலங்களுள் 76-வதாக போற்றப்படும் இந்த ஆலயத்தைக் குறித்து, நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். குமரிமாவட்டத்தில் திருப்பதிசாரம் என்னும் ஊரில் உள்ள திருவாழ்மார்பன் ஆலயமும் திவ்யதேசங்களில் ஒன்றுதான். நம்மாழ்வார் அது குறித்தும் 11 பாசுரம் பாடியுள்ளார். # மேற்குநோக்கிய மூலவர் 22 அடி நீளமும், 16,008 சாளக்கிராமங்கள் உள்ளடங்கிய கடுசர்க்கரை திருப்படிமமாக ஆதிஷேச அரியணையில் அருதுயில் கொண்டுள்ளார். # இந்த ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்தில் மூன்று நிலை வாயில்கள் மூலமாக பெருமாளின் திருப்பாதம், திருவுந்தி மற்றும் திருமுகத்தினை தரிசிக்கலாம். # பிற்காலத்தில் அழகிய மணவாள தாசர், ஆதித்தவர்ம சர்வாங்கநாதன், வீரகேரள வர்மா போன்றோர் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் குறித்து பாடியுள்ளனர். # ஸ்ரீசைதன்ய மகா பிரபு, கி.பி.1510-ல் இந்த திருத்தலத்திற்கு வருகைதந்து, பிரம்ம சம்ஹிதையின் ஜந்தாம் அத்தியாயத்திற்கு உரை எழுதியுள்ளார். # புரட்டாசி, பங்குனி மாதங்களில் 3 முதல் 9 வரையுள்ள நாட்களில் அஸ்தமன சூரியனின் நீள்கதிர்கள் கர்ப்ப கிரகத்தினுள் பரவி மூலவரை வணங்குவது தெய்வீக அதிசய காட்சியாகும். # மிக அழகிய மர மற்றும் கல் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கேரள கட்டிடக்கலைப் பாணியில் அமையப்பட்ட திருக்கோயில் இது. # திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கருவறை முன்பு 18 அடி நீளம், 18 அடி அகலம், மூன்று அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 12 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒற்றைக்கல் மண்டபம் # அவல், சர்க்கரைப் பாகு கலவையில் கதலி வாழைப் பழத்தை வட்டமாக வெட்டிப்போட்டு படைப்பது ஆதிகேசவப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம். |
தொகுப்பு: என். சுவாமிநாதன்
கட்டுரையாளர்கள்: ப.கோலப்பன், லெட்சுமி மணிவண்ணன்