

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ‘மகா கும்பாபிஷேககம்’ - சிறப்பு பகிர்வு
திருவட்டாறு ஆதிகேசவன், திருவனந்தபுரம் அனந்தன் இருவரும் நம்மாழ்வாரால் பாடல் பெற்றவர்கள். ஆதிகேசவன் அனந்தனை நோக்கி மேற்கு முகமாக திரும்பியிருக்கிறார். அவர் கிழக்கு முகமாக இவரை நோக்கி இருக்கிறார். திரு அனந்த பத்பநாபனை காண வேண்டும் எனில் ஆதிகேசவனின் அனுமதி வாங்கிச் செல்ல வேண்டும் என்பது உள்ளூர் நம்பிக்கை.
ஆதிகேசவனின் ஒருபுறம் தர்மசாஸ்தா, மறுபுறம் கிருஷ்ணன் என அமைந்த ஆலயம் இது. ஏறக்குறைய திருவனந்தபுரத்திலும் இதே அமைப்புதான். மலைநாட்டு வைணவப் பதிகளில் இந்த இரண்டும் பேராலயங்கள்.
எழுத்தாளர் லட்சுமி மணிவண்ணன் கூறியதாவது: இவ்வாலயம் அநேக பூத கணங்களால் சூழப்பட்டது. பெருமாளுக்கு ஒன்றுமில்லையானால் கூட பூத கணங்களுக்கு வைப்புச்சோறும், வெள்ளமும் இட்டுக்கொண்டே இருக்க வேண்டும். பூ சொரிய வேண்டும்.
நாகர்கோவில் அருகேயுள்ள மற்றொரு திவ்ய தேசமான திருப்பதிசாரம் தவிர, மற்ற மலைநாட்டு திவ்யதேசங்களில் தாந்த்ரிக முறையிலேயே பூஜைகள் நடைபெறுகின்றன. தாந்த்ரிக பூஜைகள் செய்கைகளால் ஆனவை. பார்ப்பதற்கு அழகானவை. களியூட்டுபவை.
திருவட்டாறு கோயில் கருவறைக்குள் பெருமாள் அனந்த சயனத்தில் படுத்திருக்கிறார். கரியதிருமேனி. அனந்தன் ஜொலிப்பவர் எனில் இவர் கரிய மாணிக்கம். இருளுக்குள் துலங்கும் யானை போன்ற உருவம். முதலில் நுழைந்ததும் திருப்பாதங்களே தரிசனமாகும். நடுவில் திருவுந்தி.
இறுதியில் ஆழ்ந்த புன்முறுவலுடன் தியானிக்கும் திருமுகத்தை தரிசிக்கலாம். கருவறையில் உள்ள சுவர்களில் அநேக தேவர்களின் சிற்பங்கள் உள்ளன. இந்த ஆலயம் ஒரு மேட்டுப் பகுதியில் அமைந்திருக்கிறது. பரளியாறும், கோதையாறும் சுற்றி ஓடுகின்றன. பரளியாறு வட்டாறு என்றும் அழைக்கப்படுகிறது. இதுபோல, மேட்டில் அமைந்துள்ள தென் தமிழக வைணவ ஆலயங்களில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலையும் சொல்லலாம். அதுவும் மேடை மீது அமைந்துள்ளது.
திருவட்டாறு ஆதி கேசவன் ஆலய முகப்பின் வலது பக்கத்தில் சிறிய நரசிம்மர் கோயில் இருக்கிறது. நாகலிங்க மரங்கள் நிறைந்த கோயில் அது. நாகலிங்க பூக்களுக்கும், அதன் நறுமணத்துக்கும் விசேஷ தன்மை உண்டு. இதற்கு அருகில் முருகன் மற்றும் அன்னபூரணி சன்னதிகள் அமைந்துள்ளன. திருவட்டாறு ஊரில் பூமியைத் தோண்டத் தோண்ட வேர்கள் திரளும். பூமி முழுவதும் வேர்கள் நிரம்பிய ஊர்.
எந்த மரத்தினுடையவை, எந்த மரபினுடையவை, எந்த ஆழத்தினுடையவை என்பதெல்லாம் அறிய முடியாதவை. அதன்மேலே பெருமாள் படுத்திருக்கிறார் என்பதே அந்த குறியீடு. நம் ஒவ்வொருவரிலும் கூட எந்த மரத்தினுடையவை, எந்த காலத்தினுடையவை, எந்த ஆழத்தைச் சேர்ந்தவை என்பதை அறிய முடியாத வேர்கள் உண்டு.
நம் மனத்தின் மேலே ஏறிப்படுக்க தியான நிலையில் ஒரு பெருமாளை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனதின் ஆழத்தின் மேலே ஆதி கேசவன் ஏறிப் படுத்துக் கொண்டால் அகம் தேவாமிர்தம் ஆகிவிடும். இக்கோயிலில் பெருமாளுக்கு பால் பாயசம் நைவேத்தியம் பிரபலம்.
அது அந்த தேவாமிர்தம் அன்றி வேறில்லை. பச்சிலை ஓவியங்கள் இக்கோயிலில் காணப்படும் ஓவியங்களை புராண இதிகாச தொடர்புள்ளவை, சமூகம் தொடர்புள்ளவை என பகுத்து விளக்க முடியும். புராண இதிகாசம் தொடர்பான ஓவியங்களில் விஷ்ணு, வேணுகோபாலன், சிவன், கிராதன், நரசிம்மன், சரஸ்வதி, ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், ஸ்ரீபலி, நடராஜர், பிரம்மா, இந்திரன், காளி, அனுமன், கிருஷ்ணன், கஜேந்திரனுக்கு மோட்சம் அளிக்கும் ஆதிமூலம், துர்க்கை, சாஸ்தா, மகா லெட்சுமி, கிருஷ்ணலீலா ஆகிய ஓவியங்கள் அற்புதமானவை.
அக்காலத்தில் வாழ்ந்த பக்தர்கள் கூட்டம், பெண்களின் அணிவகுப்பு, கோயில் விழா ஊர்வலம், யாகம் செய்தல் ஆகியவற்றை விளக்கும் சமூகச்சார்பு ஓவியங்களும் இங்கு அதிகம். பொதுவாக இதுபோன்ற ஓவியங்களை வரைய இயற்கையாகக் கிடைக்கும் வண்ணங்களையே பயன்படுத்தினர்.
அந்தவகையில் இவை பச்சிலை ஓவியங்கள். கருப்பு நிறத்துக்கு விறகுக்கரி, பச்சைக்கு ஒருவகை இலையின் பொடி, மஞ்சள் நிறத்திற்கு மஞ்சள், வெண்மைக்கு அரிசிப்பொடி, சிவப்புக்கு மஞ்சளையும், சுண்ணாம்பையும் சேர்த்து கலவை ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த ஓவியங்களின் நீடித்த உழைப்புக்கு பலவகை மூலிகைசாறுகளையும் பயன்படுத்தி உள்ளனர். ஆதிகேசவர் கோயில் ஓவியங்களில் பத்மநாபபுரம் அரண்மனையின் செல்வாக்கு மிகுதியாக உண்டு. அத்தோடு இந்த ஓவியங்கள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் காலத்தை ஒத்தவை.
அந்த வகையில் இந்த ஓவியங்கள் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனலாம். கோயில் கருவறையைச் சுற்றி இருக்கும் இந்த பச்சிலை ஓவியங்கள் பழமை மாறாமல் இந்த கும்பாபிஷேகத்துக்காக புதுப்பிக்கப்பட்டு காண்பதற்கு அழகூட்டுகின்றன.