Last Updated : 05 May, 2016 12:12 PM

 

Published : 05 May 2016 12:12 PM
Last Updated : 05 May 2016 12:12 PM

பைபிள் கதைகள் 5: மனிதனைப் பலி கேட்ட கடவுள்!

பெருவெள்ளத்துக்குப் பிறகு பூமியில் பெருகி வாழ்ந்த மக்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசினர். அவர்கள் மீது அதிகாரம் செலுத்திய நிம்ரோது, தன்னைத் தானே அரசனாக அறிவித்துக்கொண்டான். மக்கள் அவனுக்கு அடிபணிந்து நடந்தனர். அவனையே ரட்சகனாக ஏற்றதால் கடவுளை மறந்தனர். நிம்ரோது ஒரு நகரை உருவாக்கி, அதன் நடுவே விண்ணை முட்டும் கோபுரம் கட்டுப்படி தனது மக்களைக் கட்டாயப்படுத்தினான். இதனால் நமக்குப் புகழ் வந்து சேரும் என்று ஆசை காட்டினான். நிம்ரோதுவின் சுயநலப் பேச்சைக் கேட்டு, மக்கள் அனைவரும் புகழ் விரும்பிகளாக ஒரே இடத்தில் தேங்கிப்போவது கடவுளாகிய யொகேவா தேவனுக்குப் பிடிக்கவில்லை.

எனவே அந்த நகரில் வாழ்ந்த மக்களை திடீரென பல மொழிகள் பேசும்படி கடவுள் அற்புதம் ஒன்றை நிகழச் செய்தார். இதனால் மொழிக் குழப்பம் ஏற்பட்டது. எனவே அவரவர்க்குப் புரிந்த புதிய மொழிகள் பேசி மக்கள் பல இனக் குழுக்களாகப் பிரிந்து பூமியின் வேறு பகுதிகளுக்குச் சென்று குடியேறினர். அப்படி அவர்கள் சென்று குடியேறிய ஒன்றாக ‘ஊர்’ என்ற நகரம் விளங்கியது. ஊர் நகரிலும் மக்கள் கடவுளை மறந்து விதவிதமான சிலைகளை வழிபட ஆரம்பித்தனர். இதனால் அந்த ஊரில் வசித்துவந்த ஆபிரகாமைக் கடவுள் தனக்காகத் தேர்வு செய்தார்.

சொந்த ஊரை விட்டுச் செல்

ஆபிரகாம் தனிமையில் இருக்கும்போது அவரிடம் கடவுள் பேசினார். “நீ உனது ஜனங்களையும், நாட்டையும் விட்டு வெளியேறி நான் காட்டும் வேறொரு நாட்டுக்குப் போ. உன் மூலமாக நான் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன். மக்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவார்கள். நான் உன் மூலம் பூமியிலுள்ள அனைத்து இன மக்களையும் ஆசீர்வதிப்பேன். அவர்கள் உன்னைத் தகப்பன் என்று கொண்டாடுவார்கள்” என்றார்.

புதிதாக நாம் குடியேறி வாழச் செல்லும் ஊர் எத்தனை சிறந்த ஊராக இருந்தாலும் சொந்த ஊரில் வாழ்வதுபோன்ற நிம்மதி எங்கும் கிடைக்காது. ஆனால் கடவுளுக்குக் கீழ்ப்படிந்த மனிதரான ஆபிரகாம், ஊர் நகரில் தனக்கிருந்த வீடு, சொத்துக்கள், அமைதியான வாழ்க்கை ஆகிய அனைத்தையும் விட்டுவிட்டுத் தன் தந்தை தேராகு, மனைவி சாராள், அண்ணன் மகன் லோத்து ஆகியோருடன் கிளம்பினார். அவர்களோடு இன்னும் சிலரும் இணைந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் ஊர் நகரிலிருந்து வெகு தொலைவில் இருந்த ஆரான் என்ற நகருக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அபிரகாமின் தந்தையாகிய தேராகு இறந்துபோனார். ஆரானில் சில காலம் வசித்த பின்னர், அந்த நகரையும் விட்டு வெளியேறிய ஆபிரகாம், தன் குடும்பத்தாருடன் கானான் என்ற தேசத்தை வந்தடைந்தார்.

அங்கே கடவுள் ஆபிரகாமிடம் மீண்டும் பேசினார். “ நீ வந்தடைந்திருக்கும் இந்தத் நாட்டையே நான் உன் பிள்ளைகளுக்குக் கொடுப்பேன்” என்றார். கடவுள் கூறியபடியே ஆபிரகாமை செல்வந்தர் ஆக்கினார். கால்நடைகள் மேய்ப்பதையே தொழிலாகக் கொண்ட ஆபிரகாமின் செம்மறியாட்டு மந்தையைப் பெருகச் செய்தார். ஆடுகள் பெருகப் பெருக நூற்றுக்கும் அதிகமான வேலைக்காரர்களைப் பணிக்கு அமர்த்தினார்.

இப்படியாகச் செல்வாக்கு மிக்க மனிதராக மாறிய ஆபிரகாமுக்கு எல்லாம் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லையே என்ற கவலை முதுமை கூடக்கூட வாட்டியது. தானொரு மலடி என்பதில் சாராள் மிகுந்த துயரம் அடைந்தாள். அவர்களது துயரத்தைக் கண்ட கடவுள் ஆபிரகாமை அழைத்தார். “வானத்தில் நிறைந்திருக்கும் ஏராளமான நட்சத்திரங்களைப் பார். அவற்றை உன்னால் எண்ண முடியாது, வருங்காலத்தில் உன் சந்ததியும் இவ்வாறே இருக்கும். உனக்கொரு மகன் பிறப்பான். அவனே உனக்குரியவற்றைப் பெற்றுக்கொள்வான்” என்று வாக்களித்தார்.

ஆனால் ஆபிரகாம் 100 வயதையும் சாராள் 90 வயதையும் எட்டியிருந்தனர். இருப்பினும் இத்தனை முதுமையில் மகப்பேறு எப்படிச் சாத்தியம் என்று அந்தத் தம்பதியர் அவநம்பிக்கை கொள்ளவில்லை.

கடவுள் வாக்குக் கொடுத்தது போலவே அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தான். அவனுக்கு ஈசாக்கு எனப் பெயரிட்டனர். ஆபிரகாமும் சாராளும் மிகுந்த கண்ணும் கருத்துமாக அவனைக் கடவுளுக்குள் விசுவாசம் மிக்கவனாக வளர்த்து வந்தனர்.

மகனைக் கேட்ட கடவுள்

ஈசாக்கு பெரியவனாக வளர்ந்து நின்றபோது ஆபிரகாமின் விசுவாசத்தைக் கடவுள் சோதிக்க விரும்பினார். ஆபிரகாமை அழைத்த கடவுள், “உன்னுடைய அன்புக்குரிய ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு மோரியா தேசத்தில் நான் உனக்கு அடையாளம் காட்டும் மலைப் பகுதிக்குப் போ. அங்கே உன் மகனைக் கொன்று எனக்குத் தகன பலியாகக் கொடு” என்றார்.

கடவுள் இப்படிக் கேட்டதும் மகன் மீதுகொண்ட பாசத்தால் ஆபிரகாம் மனதுக்குள் வேதனையால் துடித்தார். இருப்பினும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றத் தயாரானார். மகனை அழைத்துக்கொண்டு மூன்று நாள் பயணப்பட்டு, கடவுள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தார். அந்த மலையில் ஒரு பலி பீடத்தைத் தயார் செய்து விறகுகளை அடுக்கினார். மகன் ஈசாக்கை பலி பீடத்தில் படுக்க வைத்து அவனைக் கட்டிப்போட்டார். பிறகு பலியை நிறைவேற்றத் தன் கத்தியை வெளியே எடுத்து அவனை வெட்டுவதற்குத் தயாரானார்.

அந்த மின்னல் நேரத்தில் கடவுள் தனது தூதன் வழியாக ஆபிரகாமைத் தடுத்தார். “ஆபிரகாமே! ஆபிரகாமே! உனது மகனைக் கொல்ல வேண்டாம். அவனை எவ்விதத்திலும் காயப்படுத்த வேண்டாம். நீ என்னை மதிப்பவன் என்பதையும், எந்தச் சூழ்நிலையிலும் எனக்குக் கீழ்ப்படிபவன் என்பதையும் தெரிந்துகொண்டேன். நீ எனக்காக உன் ஒரே ஒரு மகனையும் கொல்லத் தயாராக இருக்கிறாய் என்பதையும் தெரிந்துகொண்டேன்” என்று கடவுள் கூறினார்.

கடவுள் மீது ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசமும் கீழ்ப்படிதலும் அவர் ‘கடவுளின் நண்பர்’ என்று அழைக்கப்படக் காரணமாயிற்று. அப்படிப்பட்ட ஆபிரகாமைக் கொண்டு கடவுள் அடுத்து என்ன செய்தார் என்று அடுத்த வாரம் பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x