

பாஞ்சாலம் என்ற நாட்டை சமுத்திரராசன் எனும் அரசன் ஆண்டு வந்தான். புண்டரவர்த்தனம் அதன் தலைநகரமாகும். அந்நகரின் வெளியே பலாலயம் என்ற சுடுகாட்டருகில் ஒரு அம்மன் கோயில் அமைந்திருந்தது. அதன் பக்கத்தில் முனிச்சந்திர பட்டாரகர் எனும் ஒரு முனிவர் இருந்தார்.
ஒருநாள் அவ்வூர் மக்கள் அந்தக் கோயிலுக்கு நிறைய ஆடு மாடுகளை ஓட்டி வந்தனர். அவர்களிடம் முனிவர் எதற்காக இவற்றை ஓட்டி வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அரசருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், அதைக் கொண்டாடும் வகையில் ஆடு, மாடுகளைப் பலிகொடுக்க வந்ததாகவும் கூறினர். அதனைக் கேட்ட முனிவர் மிகவும் வருந்தி, உயிர் பலி வேண்டாம். இது பாவச்செயல். பலியற்ற கடவுள் வழிபாடுதான் உண்மையான வழிபாடு. ஆருயிர்க்குக்கெல்லாம் அன்பு செய்ய வேண்டும். அகிம்சையும் கொல்லாமையும் நல்லறமாகும் என்று அம்மக்களிடம் எடுத்துரைத்தார்.
அவர் வார்த்தைகளை ஏற்று மக்கள் மனம் திருந்தினர். பலி கொடுக்கப்படாததால் சுடுகாட்டிலிருந்த பேய்கள் முனிவர் மீது கோபம் அடைந்து அவரை அங்கிருந்து துரத்திவிட எண்ணின. ஆயினும் முனிவரின் தவ வலிமைக்கு அஞ்சி, தலைமைப் பேயான நீலி எனும் நீலகேசியிடம் சென்று முறையிட்டன. நீலகேசியும் அப்பேய்களுக்கு உதவத் தன் பூர்விகமான பழையனூரிலிருந்து பலாலயம் இடுகாட்டிற்கு வந்தாள்.
முனிவரை மயக்க முயன்ற நீலகேசி
முனிச்சந்திர பட்டாரகரை, கூளிகளையும் பூதங்களையும் அனுப்பி மிரட்டினாள். முனிவரோ அஞ்சவில்லை. பின் நீலகேசி வஞ்சனையால் முனிவரை வீழ்த்த எண்ணினாள். அதற்காக அரசனின் மகள் காமலேகையின் உருவம் ஏற்றாள். கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து முனிவரிடம் சென்று அவரை மயக்க முயன்றாள். ஆனால் சந்திர பட்டாரகர் சிறிதும் மனம் மாறவில்லை.
முனிவர் அவளிடம், “நீ மன்னனின் மகள் காமலேகை அல்ல. நீ பழையனூர் நீலி. நீ என்னைக் காதலிக்க வரவில்லை. என்னை இங்கிருந்து விரட்டி அழிக்க வந்துள்ளாய். ஆனால் என் ஆன்ம பலத்தின் முன் உனது அற்பச் செயல் வெற்றி அடையாது”என்றார். முனிவரின் தவ வலிமை கண்டு நீலகேசி பயந்தாள். அவரின் காலடியில் விழுந்து வணங்கினாள். மாய உருவத்திலிருந்து மாறி, பிழையெல்லாம் பொருத்தருள்க பெருமானே என்று இறைஞ்சினாள்.
முனிவர், அருகனின் நல்லறங்களைக் கூறி நீலகேசியை ஆசிர்வதித்தார். நீலகேசியோ குரு காணிக்கை தர விரும்பினாள். அகிம்சை எனும் உயர்ந்த அறத்தை நாடெல்லாம் பரப்பினால் அதுவே குரு காணிக்கை ஆகும் என்றார். நீலகேசியும் மனித வடிவம் தாங்கி அகிம்சையைப் பரப்ப முடிவு செய்தாள்.