

அத்தி வரதர் எழுந்தருளும் வைபத்தின் 3-ம் நாளில் இளம்பச்சை நிறப்பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
திண்டிவனம், வந்தவாசி, வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்தனர். ஒரு மணி நேரத்தில் 4,500 முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
காஞ்சிபுரத்துக்கு ரயில் வரும் நேரங்களில் ரயில் நிலையத்திலிருந்து கோயிலுக்கும், ரயில் புறப்படும் நேரங்களில் கோயிலிலிருந்து ரயில் நிலையத்துக்கும் இணைப்புப் பேருந்துகளை விட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கெனவே காஞ்சிபுரம் பேருந்து நிலையம், ஒலிமுகமதுபேட்டை போன்ற பகுதிகளுக்கு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
உணவு பாதுகாப்புத் துறையினர், சுகாதாரத் துறையினர் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், நீர் மோர் ஆகியவை சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர். தாய்மார்களுக்கு பாலூட்டும் அறைகள் உருவாக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக வீல் சேர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பேட்டரி கார்கள் போதுமான அளவு இல்லாததால், மினி வேன்களும் கோயிலுக்குள் இயக்கப்படுகின்றன. வரிசையில் செல்லும் பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸார் வரிசைகளை நிறுத்தி வைத்து சிறிது இடைவெளி விட்டே அனுப்புகின்றனர்.