சிற்பக் கலைக்கு பெயர்பெற்ற திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள்  கோயிலின் மேற்கு வாசல்.
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலின் மேற்கு வாசல்.
Updated on
4 min read

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ‘மகா கும்பாபிஷேககம்’ - சிறப்பு பகிர்வு

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் சிற்பக்கலைக்கு பெயர் பெற்றது. இக்கோயிலின் நான்கு பிரகாரங்களிலும் உள்ள 224 தூண்கள், நாலம்பலம் மண்டபத் தூண்கள், ஸ்ரீபலிக்கல் மண்டபத் தூண்கள், மேலும், அதன் வெளிப்புற அதிஸ்தானம், கோபுரவாசலின் மேற்குப்பகுதி அதிஸ்தானம் ஆகிய இடங்களில் கற்சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

உதயமார்த்தாண்ட மண்டபம், ஒற்றைக்கல் மண்டபம், சாஸ்தாங்கோயில் நமஸ்கார மண்டபம், நாலம் பல நுழைவாயில் கதவு, இவற்றோடு கருவறையைச் சுற்றிய தாழ்வாரக் கூரையிலும், விமானத்திலும் மரச்சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.

கோயில் சுற்றுப் பிரகாரங்களிலும், பிற இடங்களிலும் சிங்கம், முள்ளம்பன்றி, புலி, மான், மூஞ்சுறு, குரங்கு, பன்றி, நாய், யானை, ஆமை, குதிரை, கீரி, ஒட்டகம் போன்ற விலங்குகளின் சிற்பங்கள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை மட்டும் 138.

அதிலும் சிங்கம் கர்ஜிப்பது, இருகால்களை மேலே தூக்கி நிற்பது, தலையைத் திருப்பி வாலைக் கடிப்பது போன்ற 27 சிற்பங்கள் தத்ரூபமாக உள்ளன.

இதேபோல் தன் குட்டியைக் கொஞ்சும் புலி, வாய் பிளந்து கம்பீரமாக நிற்கும் கரடி, முன்னங்கால் உயர்த்தி சண்டை செய்யும் மான், பாம்பைக் கண்டு அஞ்சி நிற்கும் குரங்கு, ஆகாயத்தைப் பார்த்து குரைக்கும் நாய் என காட்சிகளை தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள்.

காகம், சேவல், மயில், கொக்கு, கிளி, அன்னம் என 131 வகையான பறவைகளின் சிற்பங்கள் உள்ளன. இவற்
றில் அன்னத்தின் சிற்பங்களே அதிகம்.

கொக்கு மீனைக் கொத்துவது, பாம்பைப் பிடிப்பது, கிளி தலையைத் திருப்பிச் சிறகைக்கோதுவது, இணைந்து நிற்கும் இரட்டைக் கொக்குகள், சிறுகுன்றின் மேல் நிற்கும் கிளி ஆகிய சிற்பங்களும் உள்ளன.

வடக்குப் பிரகாரம் வலதுபகுதித்தூண் ஒன்றில் பறவை ஒன்று, இரு சிறகுகளையும் அகலமாய் விரித்து வானில் பறக்கும் காட்சி மிகவும் இயல்பாகவும், ரசிக்கும்படியும் இருக்கும். 111 பாம்பு சிற்பங்கள், யாளிச் சிற்பங்கள், புருஷா மிருகம், பல்வேறு பறவைகள், விலங்குகள், கற்பனை உயிரினங்கள் என 427 சிற்பங்கள் உள்ளன.

கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ள சிற்பத் தூண்கள்
கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ள சிற்பத் தூண்கள்

கணிதச் சிற்பங்கள்

இதேபோல் வட்டம், அறுகோணம், கயிறு பின்னல், வட்டத்தில் முக்கோணம், எண் கோணம், வட்டத்தில் உள் சதுரம் ஆகியனவும், சங்கு, கும்ப பஞ்சரம், வேல் ஆயுதம், சக்கரம், விளக்கு, வில், கம்பு போன்ற 186 சிற்பங்கள் உள்ளன. மலர், இதழ்கள், தாமரை உள்ளிட்ட மலர்களின் 452 சிற்பங்கள் உள்ளன.

புராணம், இதிகாசங்கள் சாராத சாதாரண மனிதர்கள், முனிவர்கள், அரசர்கள், கலைஞர்கள் ஆகியோரின் 477 சிற்பங்கள் உள்ளன. கோயிலின் ஸ்ரீபலிக்கல் மண்டபத்தில் இசைக்கலைஞன் இரண்டு கைகளாலும் தப்பு அடித்துக்கொண்டே ஆடும் சிற்பம்உள்ளது. சிற்பத்தில் கலைஞனின் நான்கு பற்கள் வெளியே தெரிகின்றன.

முன்னம்பல் ஒன்று இந்த கலைஞனுக்கு இல்லை. சிற்பி வேண்டுமென்றே அதைச் செதுக்கவும் இல்லை. அவனது எடுப்பான சிரிப்புக்கு அதுதான் காரணம்.

மன்மதன்
மன்மதன்

கடவுள் சிற்பங்கள்

திருவட்டாறு வைணவத் தலம் என்றாலும், இங்கு சிவனின் பல்வேறு வடிவங்கள், சிவபுராணம், பெரியபுராணம் என 265 சிற்பங்கள் உள்ளன.

ஸ்ரீபலி மண்டபத்தில் உள்ள ஊர்த்து வதாண்டவர் சிற்பம் ஆளுயரம் உள்ளது. நான்கு பிரகாரங்களிலும் 7 விநாயகர் சிற்பங்களும், 11 முருகனின் சிற்பங்களும், 24 காளியின் சிற்பங்கள் உள்ளன. விஷ்ணுபுராணம், ராமாயணம், மகாபாரதம் தொடர்பாக 384 சிற்பங்கள் உள்ளன. அனுமனுக்கு மட்டும் 67 சிற்பங்கள் உள்ளன.

மலைநாட்டு திவ்ய தேசங்கள்

வைணவத்தில் 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. இவற்றில் இப்பூவுலகில் 106 திவ்ய தேசங்கள் உள்ளன. திருப்பாற்கடல், பரமபதம் ஆகியவை விண்ணுலகில் அமைந்துள்ளன.

பூவுலகத்தில் உள்ள 106 திவ்ய தேசங்களில் சோழநாட்டில் ரங்கம் உட்பட 40 கோயில்களும், தொண்டை நாட்டில் (காஞ்சிபுரம் வட்டாரம்) 22 கோயில்களும், வடநாட்டில் (வட இந்தியா) 11 கோயில்களும், பாண்டிய நாட்டில் (மதுரை, நெல்லை) 18 கோயில்களும், நடுநாட்டில் (கடலூர், விழுப்புரம்) 2 கோயில்களும் உள்ளன.

மலைநாட்டில் அமைந்துள்ள 13 கோயில்களில் கேரளத்தில் 11 கோயில்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரம் திருவாழிமார்பன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஆகிய இரண்டும் அமைந்துள்ளன.

மலைநாட்டுக் கோயில்களைப் பற்றி திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அதில் சுவாமி நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைக் குறித்து 11 பாடல்கள் பாடியிருக்கிறார்.

சூழலூதும் கண்ணன்
சூழலூதும் கண்ணன்

எப்போது தரிசிக்கலாம்?

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயம், தினமும் அதிகாலை 5 மணிக்கு திருநடை திறக்கப்படும். நண்பகல் 12 மணிவரை நடை திறந்திருக்கும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். தினமும் ஐந்துகால பூஜை நடக்கிறது.

அதன்படி அதிகாலை நிர்மால்ய பூஜை. அதன்பிறகு சுவாமியை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்யப்படும். அடுத்து உஷ பூஜை, தொடர்ந்து உற்சவருக்கு அபிஷேகம், மூலவருக்கு பஞ்ச கவ்யம் சாத்தப்படும். தினமும் காலை 7.45 மணிக்கும், மாலையில் 6.30 மணிக்கும் இருவேளை ஆரத்தி நடக்கிறது.

எப்படி செல்வது?

நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்பு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடக்கும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் ஆலயம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நாகர்கோவிலில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருவட்டாறு. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் நேரடியாக பேருந்து வசதி உண்டு.

அல்லது திருவனந்தபுரம், களியக்காவிளை செல்லும் பேருந்துகளில் ஏறி, அழகியமண்டபம் என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து திருவட்டாறுக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

காரில் செல்பவர்கள் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சாலையில் அழகியமண்டபம் சென்று, அங்கிருந்து திருவட்டாறுக்கு வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.

கோயில் திருவிழாக்கள்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி, ஐப்பசி மாதங்களில் வெகுவிமர்சையாக திருவிழாக்கள் நடைபெறுகிறது. பங்குனி மாதத் திருவிழாவின்போது மூவாற்றுமுகம் ஆற்றிலும், ஐப்பசி மாதத் திருவிழாவின்போது களியல் ஆற்றிலும் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளுவது மிகவும் சிறப்பாகும்.

இதேபோல் புரட்டாசி மாத சனிக்கிழமைகளும் இங்கு மிகவும் விசேஷம். அன்றைய நாள்களிலும், வைகுண்ட ஏகாதசி தினத்திலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். சித்திரை விஷு கனி காணல் நிகழ்வு, ஓணப் பண்டிகை ஆகியவையும் இந்த ஆலயத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும்.

தொகுப்பு: என். சுவாமிநாதன்
கட்டுரையாளர்கள்: ப.கோலப்பன், லெட்சுமி மணிவண்ணன்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in