

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் ‘மகா கும்பாபிஷேககம்’ - சிறப்பு பகிர்வு
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் கொண்டது. சுவாமியின் திருமேனி கற்சிலையால் ஆனது அல்ல. அது, கடுசர்க்கரை யோகம் என்ற மருந்துக்கலவையால் உருவானது.
“அருள்தருவான் அமைகின்றான் அது நம் விதிவகையே. இருள்தரு மாஞாலத்துள் இனிப்பிறவியான் வேண்டேன்: மருளொளி மடநெஞ்சேவட்டாற்றான் அடி வணங்கே’’ என்று நம்மாழ்வார் ஆதிகேசவனை பாடுகிறார்.
திருவட்டாறு குறித்து மொத்தம் 11 பாசுரங்கள் அவர் பாடியிருக்கிறார். திருவட்டாற்றில் கிடப்பது இருள் கெடுக்கும் திருமேனி. எம்பெருமானின் முகத்தில் நிலவும் அமைதியின் ஆழத்தை அறியவல்லார் யார்!
கடுசர்க்கரை யோகம் கடுசர்க்கரை யோகம் குறித்து. பேராசிரியர் அ.கா.பெருமாள் தன்னுடைய ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் புத்தகத்தில் தெளிவாக எழுதியுள்ளார்.
சிற்பம் அல்லாத கடுசர்க்கரை யோகம் என்றால் சாளக்கிராமத்தின் மேல் லேபணத்தை (60-க்கும் மேற்பட்ட மூலிகை மற்றும் பொருட்களால் செய்யப்பட்ட சாந்து) பூசி செய்வது ஆகும் என்று கல்பகமங்கல மடத்தைச் சேர்ந்த தந்திரி சுப்ரமணியரு கூறுகிறார்.
இந்த மடத்தைச் சேர்ந்த குடும்பத்தினரே குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் கொடியேற்றுதல் போன்ற நிகழ்வுகளை நடத்துகின்றனர். திருவட்டாறு கோயிலில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பல இடங்களில் சிதிலமடைந்த மூலவர் திருமேனியை சீரமைத்துள்ளனர்.
கடுசர்க்கரை யோகமான தெய்வத் திருமேனிகளை சீரமைக்கத் தெரிந்தவர்கள் இன்று மிகக் குறைவு. கடைசியில் கேரள மாநிலம் பிரம்மமங்கலத்தில் இருந்து கே.எஸ்.கைலாஷ் என்ற நிபுணரை வரவழைத்து, சீரமைத்து முடித்துள்ளனர்.
“லேபணத்தை அரைக்கவும், பின்பு அதை தெய்வத் திருமேனியின் மீது பூசி சரி செய்யவும் நிறைய கால அவகாசம் தேவைப்படும். திருவட்டாறு அதிகேசவனின் மீது ஒன்பது முறை லேபணம் பூசி சரி செய்யப்பட்டது,” என்று சொல்கிறார் கைலாஷ்.
லேபணம் செய்யும் முறை பற்றி அவர் கூறியதாவது: லேபணம் அரைப்பதற்கு கங்கை நீர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்காக ரயில் வண்டிகளில் தண்ணீர் கொண்டு வந்தனர். அதற்கான மணலை, மூன்று அல்லது ஐந்து நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து கொண்டு வர வேண்டும்.
யானை தனது தந்தத்தால் தரையைக் குத்திக் கிளறும் போது அதில் ஒட்டியிருக்கும் மண், மண்ணைக் கிளறும் மாட்டின் கொம்பில் ஒட்டியிருக்கும் மண், கலப்பையால் நிலத்தை உழும் போது கொழுவில் சேரும் மண் ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும்.
பின்னர், அந்த மணல்களை 9 வகையான கசாயங்களில் 10 நாட்கள் ஊற வைக்கவேண்டும். திரிபலம் என்று அழைக்கப்படும் தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை அதனோடு சேர்க்க வேண்டும். பாரதப்புழா ஆற்றில் கிடைக்கும் கோழிப்பரல் முக்கியமான மூலப்பொருள். பலா மரத்தின் பிசின், வில்வம் பழத்தை உடைத்தால் கிடைக்கும் பிசின், சந்தனம், திப்பிலி என பட்டியல் நீள்கிறது.
சுண்ணாம்புக்குப் பதிலாக கடலில் கிடைக்கும் சங்குகளைத் தூளாக்கி அதையும் இதனுடன் சேர்க்கின்றனர். இன்னும் சில மூலப் பொருட்களை பசும்பாலில் அரைத்து சேர்க்க வேண்டும்.
லேபணம் பூசி முடிக்கப்பட்ட கடுசர்க்கரை யோக தெய்வம் அப்படியே பள பளக்கிறது. உலகின் மிகச் சிறந்த பளிங்குக் கற்களை பாலீஷ் செய்தால் கூட கிடைக்கப் பெறாத உருவமாக திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கருவறை மூலவர் பளபளக்கிறார்.
ஜூலை 6-ல் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஜூன் 29-ம் தேதி தொடங்கின. இன்று (ஜூலை 2) காலை 6 மணி முதல் யாக பூஜைகள் நடக்கின்றன. மாலை 5 மணி முதல் பிம்ப பரிக்கிரகம், ஜலாதிவாசம், அக்ஷத ஹோமம், குண்டசுத்தி ஹோமம், முளபூஜை, அத்தாழபூஜை ஆகியவை நடைபெறுகின்றன.
கும்பாபிஷேக நாளான 6-ம் தேதி அதிகாலை 3.30 மணி தொடங்கி யாக பூஜைகள், 6 மணிக்கு அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம், மாலையில் அத்தாழபூஜை, லட்ச தீபம் ஆகியவை நடைபெறுகின்றன. 9-ம் தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
ஏன் இத்தனைப் பிரயத்தனம்?
கடுசர்க்கரை யோகம் என்ற கலவை தயாரிக்கவும், அதனை பெருமாளின் திருமேனியில் பூசவும் மிகவும் உழைக்க வேண்டியது இருக்கிறது. “ஒரு மனிதனின் உடல்கூறு எப்படி அமைந்துள்ளதோ அது போலத்தான் ஆதிகேசவப் பெருமாளை உருவாக்கியுள்ளனர். கருங்காலி மரத்தைக் கொண்டு விலா எலும்புகளை செய்துள்ளனர்.
தேங்காய் நார்களால் நரம்பு சிரை மண்டலங்களை உருவாக்கியுள்ளனர். ஒரு முறை லேபணம் பூசியதும் அது நன்றாக காய்ந்த பின்னரே அடுத்த முறை பூச முடியும்.
இந்த லேபணத்தைப் பூசுவதற்கு சாதாரணமாகக் கொத்தனார்கள் பயன்படுத்தும் கரண்டியைப் பயன்படுத்த முடியாது. மரப் பலகையால் செய்யப்பட்ட கருவிகளைக் கொண்டும், பலா மரத்தின் இலைகளால் தடவித், தடவியும் மெருகேற்றியிருக்கிறார்கள்.
லேபணத்தைப் பூசுவதற்கு கருவறையின் உள்ளே சென்று விட்டால், வேலையை முடிக்காமல் வெளியே வர முடியாது. இயற்கை உபாதைகள் ஏற்பட்டால், மீண்டும் குளித்து விட்டுதான் உள்ளே செல்ல முடியும். அந்தளவுக்கு சிரமப்பட்டு ஆதிகேசவப் பெருமாள் திருமேனியை சீரமைத்துள்ளனர்.
சயனக் கோலத்தில் மிகவும் பெரியவர்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளின் திருமேனி மிகவும் பெரியது. இப்பெருமானின் சிறப்புகளில் முக்கியமானவை இரண்டு: 1. வைணவத் தலங்களில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள்களில் ஆதிகேசவனே உருவத்தில் பெரியவர். 2. சுவாமியின் திருமேனி கற்சிலை அல்ல. அது, கடுசர்க்கரை யோகம் என்ற மருந்துக் கலவையால் உருவானது.
திருவனந்தபுரத்தில் சயனித்திருக்கும் அனந்த பத்மநாப சுவாமியும் கடுசர்க்கரை யோகத்தால் ஆனவர்தான். ஆனால், அவரது திருமேனி 18 அடி நீளம் கொண்டது. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் கொண்டது. இந்தியாவில் மிகப்பெரிய கடுசர்க்கரை யோக திருமேனி கொண்டவர் ஆதிகேசவன்தான்.
தொகுப்பு: என். சுவாமிநாதன்
கட்டுரையாளர்கள்: ப.கோலப்பன், லெட்சுமி மணிவண்ணன்