

அத்தி வரதர் எழுந்தருளும் விழாவான 2-வது நாளில் அத்தி வரதர் நீலப்பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். ரூ.50 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசையில் நின்றே அத்தி வரதரை தரிசித்தனர்.
கிழக்கு கோபுர வாசல் வழியாகச் சென்ற பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து விட்டு மேற்கு கோபுர வாசல் வழியாக வெளியேறினர். அத்தி வரதரை காண்பதற்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை வரிசையில் நின்றதாக பக்தர்கள் தெரிவித்தனர். கோயில் பிரகாரத்தைச் சுற்றி வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரகாரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனங்களை கொண்டு செல்ல அவர்களுக்கு தனியாக அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள சாலைகளிலும் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் முத்தியால்பேட்டை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வையாவூர் சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தன. வந்தவாசி, வேலூர் சாலை வழியாகச் செல்லும் வாகனங்கள் தற்காலிக பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அத்தி வரதர் வைபவத்துக்காக மினி சிறப்பு பேருந்துகளில் பக்தர்கள் பயணம் செய்தனர்.
தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் நகராட்சியால் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் வசதிக்காக அவர்கள் வரிசையில் செல்லும் இடங்களில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விழா நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, வடக்கு மண்டப ஐ.ஜி. நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி உட்பட பல்வேறு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இராம.கோபாலன் வருகை
இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் அத்தி வரதரை தரிசித்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று மூலவரையும் தரிசனம் செய்தார்.
மூலவரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் `இந்து தமிழ்' செய்தியின் எதிரொலியாக அத்தி வரதரை தரிசிக்கும் பக்தர்கள் மேற்கு ராஜகோபுரம் வழியாகச் சென்று மூலவரைத் தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வெளியூரில் இருந்து அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவரை தரிசித்த பின் பெருந்தேவி தாயார் சந்நிதியிலும், மூலவர் இருக்கும் இடத்திலும் தரிசனம் செய்தனர். பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன், ஆட்சியருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் நன்றி தெரிவித்தனர். அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மூலவரைத் தரிசிக்க சென்றால் நெரிசல் ஏற்படலாம் என்பதால் அந்தப் பகுதியிலும் முன்னெச்சரிக்கையாக போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.