அத்தி வரதர் வரலாறு - ஓர் அறிமுகம்
ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர், தனது காரியம் செவ்வனே நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்தார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, யாகத்துக்கு வரவில்லை. சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, பிரம்மதேவர் சரஸ்வதி தேவிக்கு பதிலாக காயத்ரி, சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தைத் தொடங்கினார். சினம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மதேவரின் யாகசாலையை அழிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப் பெருக்கெடுத்து வந்தாள். பிரம்மதேவரின் யாகத்தைக் காக்கத் திருவுள்ளம் கொண்ட திருமால், நதிக்கு நடுவில் சயனக் கோலம் கொண்டார். வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொண்டாள். பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது. தனக்காக வந்து யாகத்தைக் காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மதேவர், பெருமாளைப் பணிந்து தொழுதார். தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களைக் கேட்டனர். அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால், பெருமாள், `வரதர்’ என்ற திருப்பெயர் கொண்டார்.
ஒரு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கரம், கதை தாங்கிய திருக்கோலத்தில் காட்சி தந்தார். எனவே, அதே நாளில் பிரம்மதேவர், தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார். இப்படித்தான் அத்தி வரதர் மண்ணுலகில் எழுந்தருளினார்.பிரம்மதேவரால் உருவான அத்திமர வரதராஜரை தேவலோக யானையான ஐராவதம் தனது முதுகில் சுமந்தது. பின்னர் ஐராவதம் சிறு குன்றாக உருமாறி அத்தி (யானை)கிரி, வேழமலை என்று பெயர் பெற்றது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும் தேவர்களுக்கும் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்புரிந்து வந்தார்.
பின்னர் ஒருமுறை பிரம்மதேவர் அத்தி வரதரை முன்னிருத்தி ஒரு யாகம் செய்தார். யாகத் தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டுவிட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார். வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில், பிரம்மா திருமாலை வேண்டினார். அவருடைய ஆலோசனையின்படி, அத்தி வரதரை, கோயிலிலுள்ள நூற்றுக் கால் மண்டபத்துக்கு வடக்கிலுள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையிலுள்ள நீராழி மண்டபத்துக்குக் கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் வைத்தார். யாகத்தீயில் உஷ்ணமான பெருமான், கலியுகம் முழுக்க இந்த அமிர்தசரஸ் எனும் ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும், இதனால் எந்தக் காலத்திலும் இந்தத் திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்குச் சொல்லப்பட்டது. அத்தி வரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும், பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜப் பெருமாள் அத்திகிரிக்கு அருள வந்தார்.
இந்த ஆலயத்தில் பெருமாளை, ஐராவதம் யானையே மலையாக நின்று தாங்குவதாக ஐதீகம். எனவே இந்த திருத்தலத்துக்கு ‘அத்திகிரி’ என்றும் பெயர் உண்டு. பெருமாளின் துணை கொண்டு யாகத்தை பூர்த்தி செய்த பிரம்மனுக்கு, யாக குண்டத்தில் இருந்து புண்ணிய கோடி விமானத்துடன் பெருமாள் தோன்றி அருள் செய்தார்.
பிரம்மனின் யாகத்தில் இருந்து 16 கைகளுடன் சங்கு சக்கரம் தாங்கியபடி சுதர்சன ஆழ்வார் தோன்றினார். இவரே இந்த ஆலயத்தில் பிரதான மூர்த்தியாக இருக்கிறார். இவரை வழிபட்ட பிறகே மூலவரான வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் (சுதர்சன ஆழ்வார்) சந்நிதி அமைந்துள்ளது.
ஸ்ரீவேதாந்த தேசிகர், ஓர் ஏழையின் திருமணத்துக்காக இங்குள்ள பெருந்தேவி தாயாரை வணங்கினார். அப்போது தாயாரின் சந்நிதியில் ‘தங்க மழை’ கொட்டியது. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோயிலாக இது திகழ்கிறது.
ஸ்ரீஸ்ருங்கி பேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள், கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒரு முறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதமர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சி சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார். இதையடுத்து இவரும் இத்தலம் வந்து வழிபட்டனர். இறைவன் உங்கள் ஆத்மா வைகுண்டம் செல்லும். அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும். என்னை தரிசிக்க வருபவர்கள், உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்கப் பெறுவார்கள் என்று அருளினார். அதன்படி இந்த ஆலயத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்குகிறார்கள்.
வரதராஜப்பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம் ஆகிய 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும், 100 கால் மண்டபத்துக்கு வடக்கேயும் இருக்கிறது அனந்தசரஸ் திருக்குளம். இந்த குளத்தில் நீராவி மண்டபத்துக்கு தெற்கேயும், விமானத்துடன் கூடிய நான்கு கால் மண்டபத்தில்தான் அத்தி வரதர் அருள்கிறார். இவர் சுமார் 10 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டவர். முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்.
‘அத்தி வரதர்’எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து உற்சவங்கள் நடக்கும்.
அப்போது கோவில் வளாகத்தில் அவரை பக்தர்கள் தரிசிக்கலாம். ஒரு மண்டல காலம் (48 நாட்கள்), அவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும், 18 நாட்கள் நின்ற நிலையில் அருள்வார்.
அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், மக்கள் திரண்டு வந்து பெருமாளை தரிசிப்பர்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த நிகழ்வு கடந்த 1979-ம் (2-7-1979) ஆண்டு நடைபெற்றது. அதன்படி 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 48 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது.
குளத்தில் எழுந்தருளியது ஏன்?
அனந்தசரஸ் புஷ்கரணிக்குள் ஒரு மண்டபம் அமைத்து அதில் ஸ்ரீஅத்தி வரதரை எழுந்தருளியிருக்கும்படி செய்துள்ளார்கள். இவரை இங்கு எழுந்தருளியிருக்கச் செய்தது பற்றி பலவாறு கூறப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் அனைத்தையும் அவர்கள் நாட்டுக்குக் கடத்திச் சென்ற வேளையில், இந்த ஸ்ரீஅத்தி வரதரையும் நாடு கடத்திவிடுவார்களோ என்று அச்சத்தில் அப்போது இதை ஆராதித்து வந்தவர்கள் இவரை பூமிக்கடியில் பள்ளம் தோண்டி புதைத்திருந்தனர்.
பிற்பாடு சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு அவரை அங்கேயே ஆராதித்து வந்தார்கள் என்றும் அவருக்கு அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த மண்டபத்தைச் சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்துவிட்டதாகவும், 40 வருடத்துக்கு ஒருமுறை அவரை வெளியே எடுத்து ஒரு மண்டல காலத்துக்கு அவரை பூஜித்ததாகவும், பின்னர் அதற்குள் அவரை வைத்துவிட்டதாகவும் ஒரு சிலரால் கூறப்பட்டு வருகிறது.
இப்போது கோயில் இருக்குமிடம் ஒரு காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்கு முன்) அத்திமரங்கள் சூழ்ந்த மலையாக இருந்ததாகவும், அப்போது பிரம்மா யாகம் செய்து அந்த யாகத்திலிருந்து இவர் (ஸ்ரீஅத்தி வரதர்) வந்ததாகவும், அதிலிருந்து அவரை பிரம்மா பூஜித்து வந்ததாகவும் ஒருசில காலத்துக்குப் பின்னர் ஸ்ரீஅத்திகிரி வரதர் அர்ச்சகர் கனவில் வந்து தான் பிரம்மாவின் யாக குண்டத்திலிருந்து வந்ததால், தனது உடல் எப்போதும் தகிப்பதாகவும், எனவே தன்னை தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்யும்படியும், அவ்வாறு முடியாமல் போனால் நிரந்தரமாக புஷ்கரணியில் (குளத்து நீரில்) எழுந்தருளச் செய்யும்படி ஆணையிட்டதாகவும், அவருக்கு தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்வது கஷ்டமாக இருந்ததால் அவரை குளத்தில் எழுந்தருளச் செய்வது என்று முடிவு செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், அவரை குளத்தில் எழுந்தருளச் செய்துவிட்டால் மூலவருக்கு எங்கு போவது என்று அந்த அர்ச்சகர் கவலைப்படவே, மீண்டும் வரதர் கனவில் வந்து பக்கத்தில் சில மைல் தொலைவில் ‘பழைய சீவரம்’ என்னும் ஊரில் மலைமேல் தன்னைப்போலவே ஒரு பிரதிபிம்பமாக ஒரு வரதர் இருப்பதாகவும் அவரைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிக்கொண்டுவந்து ஒரு மண்டல காலம் வெளியில் பூஜை செய்து விடும்படியும் ஆணையிட்டதாகவும் அதன்படியே பழைய சீவரத்துக்குச் சென்று பார்த்தபோது அவர்கள் பெருமாள் கூறிய அதே இடத்தில் இவரைப் போலவே ஒரு பிரதிபிம்பமாக இருந்தவரைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து (தற்போது உள்ள மூலவர்) இவரைத் தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
தற்போதும் வருடத்துக்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் காஞ்சியிலிருந்து பழைய சீவரத்துக்கு பார்வேட்டை உற்சவமாக சென்று வருவது இதன் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரம் கருட சேவையும், தேர் உற்சவமும் மிகவும் புகழ்பெற்றவையாகும். இன்றும் லட்சக்கணக்கான மக்கள் வந்து இந்த சேவையை தரிசித்துச் செல்வதன் மூலம் இதனுடைய சிறப்பு நமக்குப் புலனாகிறது.
ஒருமுறை மட்டுமே...! ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்துக்குள் ஒருமுறை, தவறினால் இருமுறைதான் இந்த பெருமாளை தரிசிக்க முடியும்.
இதற்குமுன்... கடந்த 18-8-1854, 13-6-1892, 12-7-1937, 2-7-1979 ஆகிய தேதிகளில் அத்தி வரதரை தரிசனம் செய்யும் உற்சவம் தொடங்கியது.
| 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளும் அத்திவரதர் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஜூலை 1, 2022 முதல் அத்திவரதர் வைபவ நிகழ்வுகள், இனி தினம்தோறும் 48 நாட்களுக்கு தொடர்ந்து வெளிவரும்... |
