அத்திவரதர்: பிரம்மதேவன் போற்றிய பேரருளாளன் 

அத்திவரதர்: பிரம்மதேவன் போற்றிய பேரருளாளன் 
Updated on
5 min read

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் சிறப்புமிக்க தொண்டை மண்டத்து திவ்ய தேசமாகத் திகழ்வது காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோயில். இது காஞ்சி மாநகரத்தின் கீழ்க்கோடியில் சிறப்புற அமைந்துள்ளது.

உயர்ந்த கோபுரங்களும் நெடிதுயர்ந்த மதில்களும் அவற்றின் நடுவே விளங்கும் புண்ணியகோடி விமானமும் வெகுதூரத்தில் இருந்தே நமக்கு காட்சி நல்குகின்றன. இவ்விமானத்தின் கீழ் அஸ்திகிரி என்னும் சிறு மலையின் மேல் ஸ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

பிரம்மதேவன் பரந்தாமனை தரிசிக்க வேண்டும் என்ற சங்கல்பத்துடன் புஷ்கரம் என்ற புண்ணிய ஸ்தலத்தில் வெகுநாட்கள் தவம் செய்தார். பரந்தாமன் ப்ரஸன்னமாகி தீர்த்த ரூபியாகக் காட்சி தந்தார். அந்த தீர்த்த ரூபத்தினால் திருப்தி ஏற்படாததால், பிரம்மதேவன் மீண்டும் பரந்தாமனை எண்ணி தவம் செய்யவே, பரந்தாமன் மீண்டும் ப்ரஸன்னமாகி நைமிசாரண்யம் என்ற ஆரண்ய ரூபமாகக் காட்சி தந்தார்.

எங்கும் நிறைந்து, எல்லாமுமாகிய எம்பெருமான் நீராய், நிலனாய், காட்சி தந்த போதிலும், பிரம்மதேவனுக்கு திருப்தி ஏற்படவில்லை. சங்கு, சக்கரத்தோடு, திவ்ய மங்கள ரூபத்துடன் பெருமாளின் திருமேனியை சேவிக்க வேண்டும் என்ற அளவிலா ஆசையுடன், மீண்டும் பெருமாளை தனக்கு அத்தகு காட்சி தந்தருளும்படி வேண்டி நிற்க நூறு அச்வமேத யாகங்கள் செய்தால், தான் ஆவிர்பாவம் அடைந்து காட்சி தருவதாகக் கூற நூறு அச்வமேத யாகங்கள் செய்வதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால் மிகவும் சுலபமாக அருளைப் பெறும் வழியைக் கூறும்படி பிரம்மதேவன் வேண்டினார்.

பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டு அகிலத்தை ஆட்கொள்ளும் கருணைக்கடல், கார்முகில் வண்ணன், கண்ணன் தன் பக்த வாத்ஸல்யத்தால் பிரம்மதேவனை சத்யவ்ரத க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்துக்குச் சென்று ஒரேயொரு அச்வமேத யாகம் செய்யும்படி பணித்தார். காஞ்சியில் செய்யும் புண்ணியம் எதுவாயினும் 100 மடங்கு அதிகப் பலனைத் தரும் என்று கூறியதன் பேரின் அத்திகிரியில் பிரம்மதேவன் யாகம் செய்தார். அந்த யாகத்தில் அத்திகிரிநாதன் அர்ச்சாவதார மூர்த்தியாக காட்சி தந்தருளினார். அக்னியில் இருந்து தோன்றிய வெப்பத்தால் உற்சவ மூர்த்தியின் திருமுகத்தில் ஏற்பட்ட வடுக்களை நாம் இன்றும் பார்க்கலாம். பிரம்மதேவனால் ஆராதிக்கப்பட்டு ஆவிர்பாவம் அடைந்தபடியால் ஹஸ்திகிரி க்ஷேத்ரத்துக்கு காஞ்சி என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு சமயம் சரஸ்வதிதேவியின் சாபத்துக்கு ஆளாகி, யானையாக உருவெடுத்த இந்திரன், இவ்விடத்தில் தவம்புரிந்து சாப விமோசனம் பெற்றபடியால், இத்தலத்துக்கு ஹஸ்திகிரி என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அத்திகிரி என்ற இத்தலத்தில் எம்பெருமான் அர்ச்சாவதார மூர்த்தியாகத் தோன்றியபடியால் இப்பெருமாளுக்கு ஹஸ்திகிரிநாதன் என்ற பெயர் உண்டாயிற்று.

மேலும் இப்பெருமாள் தேவேந்திரனால் போற்றி வணங்கப்பட்ட காரணத்தால் தேவராஜன் என்றும், தேவாதிராஜன் என்றும் அழைக்கப்படலானார். பாற்கடலில் பள்ளிக்கொண்ட பரந்தாமன், தம் பரம காருண்யத்தால் உலகம் உய்ய பிரம்மதேவனின் யாககுண்டத்தில் அர்ச்சாவதாரரூபியாய் எழுந்தருளி அனைவரையும் ஆட்கொண்டு அருள்பாலித்து வருவதால் பேரருளாளன் என்றும் தன்னை அண்டியவர்களின் துயர்தீர்த்து ஆட்கொள்ளும் கருணைபடைத்தவன் என்பதால் ப்ரணதார்த்திஹரன் என்றும், பாகவதோத்தமர்களின் யோகஷேமங்களை தம் அருட்கடாக்ஷத்தால் நிலவச் செய்து வேண்டுவன வழங்கும் வரதனாய் திகழ்வதால் வரதராஜன் என்றும் ஆச்சார்யர்களாலும், ஆழ்வார்களாலும், ஆன்றோர்களாலும் ஆராதிக்கப்படுகிறார், அத்திகிரியில் தோன்றிய தவப்பெருமாளாகிய ஸ்ரீவரதராஜப்பெருமாள்.

யாக குண்டத்தில் தோன்றிய உற்சவ மூர்த்திக்கு ஒரு திருக்கோயில் அமைத்து, அவர் எழுந்தருளியிருக்கும் மலைக்கு 24 படிக்கட்டுகளையும், புண்யகோடி விமானத்தையும் அமைத்து, விஷ்வகர்மாவைக் கொண்டு தாருமரத்தால் மூலவிக்ரதத்தைச் செய்விக்கச் செய்து ப்ரதிஷ்டை செய்து உற்சவ மூர்த்தியை சர்வாபரண சம்பன்னனாய் திவ்ய மங்கள விக்ரஹத்துடன் பலருக்கும் காட்சி தந்து அருள்புரியும் வண்ணம் உற்சவம் நடப்பித்து அகமகிழ்ந்தார் பிரம்மதேவன். அது பிரம்மதேவனால் முதன்முதலில் செய்விக்கப்பட்ட உற்சவமாதலால் அதற்கு பிரம்மோற்சவம் என்ற பெயர் வழங்கலாயிற்று.

பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மரத்தாலான இந்த ஆதி அத்திகிரி வரதனைப் பின்னர் புஷ்கரணியில் எழுந்தருளச் செய்து அவ்விடத்தில் சில விக்ரஹத்தைப் பிரதிஷ்டை செய்தனர். பக்தர்கள் தம் ஆயுட்காலத்தில் ஒரு முறையாகிலும் தரிசிப்பதற்கென்று, முதலில் 60 வருடங்களுக்கு ஒரு முறையும், பின்னர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் அனந்தசரஸ் புஷ்கரணியில் இருந்து ஆதி அத்தி வரதரை வெளியே எழுந்தருளச் செய்து வசந்த மண்டபத்தில் வைத்திருந்து ஒரு மண்டல காலத்துக்குப் பிறகு, மீண்டும் அனந்தசரஸ் புஷ்கரணியில் ஏளப்பண்ணுவதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

இவரையே அத்தி வரதர் என்கிறோம். ஹஸ்திகிரி என்பது தமிழில் அத்திகிரி என்று மருவியதால் அத்திகிரி வரதர் என்று அழைக்கப்படுகிறார். 1979-ம் ஆண்டு, அத்திகிரி வரதரை, அனந்தசரஸ் புஷ்கரணியில் இருந்து வெளியே கொணர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்து ஒரு மண்டல காலம் பக்தர்களுக்கு சேவை சாதித்தருளிய வைபவம் நிகழ்ந்தது.

அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தொடங்கி இவ்வைபவம் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற்றது. ஆதி அத்தி வரதர் 31 நாட்கள் சயன கோலத்திலும் 17 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வரதராஜப் பெருமாள் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் பிராட்டியின் பெயர் பெருந்தேவித் தாயார் என்பதாகும். வேதங்களில் சொல்லியிருக்கும் மஹாலஷ்மியின் திருநாமத்தைக் கொண்டவளே ஸ்ரீபெருந்தேவித் தாயார்.

ஓம் மஹாதேவ்யைச வித்மஹி
விஷ்ணு பத்னீச தீமஹி
தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்

மஹாதேவி என்னும் பெருந்தேவி திருநாமம் கொண்ட பிராட்டியார், ப்ருகு மஹரிஷியின் புத்ரகாமேஷ்டி யாகத்தில் பொற்றாமரைக் குளத்தில் அவதாரம் செய்ததாக ஐதீகம். தாயாரைப் படிதாண்டாப்பத்தினி என்றும் அழைப்பதுண்டு. தாயாருக்கு திருவீதிப் புறப்பாடு கிடையாது. கோயிலுக்குள்ளேயே திருமஞ்ஜனக் கேணி அமைந்திருப்பதால் இங்கு நடைபெறும் தெப்போற்சவத்தில் தாயாரையும் எழுந்தருளச் செய்வதால் இந்த தெப்போத்சவத்துக்கு பெருந்தேவித் தாயார் தெப்பம் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

தமது அர்ச்சாவதார நிலைமையுங்கடந்து தமக்குத் திரு ஆலவட்டக் கைங்கர்யம் செய்துவந்த திருக்கச்சி நம்பிகளிடம் மனமுவந்து உரையாடிய பேரருளாளப் பெருமாளின் தனிப்பெருங்கருணையை, “ ஸ்ரீதேவராஜ மங்களா சாஸனம்” எனும் ஸ்தோத்ரத்தில் “ ஸ்ரீகாஞ்சி பூர்ண மிச்ரேண ப்ரீத்யா ஸர்வாயி பாஷணே” என்று சுவாமி மணவாள மாமுனிகள் போற்றியிருக்கிறார்.

யாதவப் பிரகாசரிடம் சீடராக ஸ்ரீராமானுஜர் வேதாத்யயனம் செய்து வந்த சமயம், யாதவப்பிரகாசர் சொல்லி வந்த உபநிஷத் வாக்யங்களுக்கு மாறுபட்ட கருத்துகளை எடுத்துரைத்து தெளிவுபடுத்தி வந்ததால் யாதவப் பிரகாசருடன் கருத்து வேற்றுமை ஏற்பட நேரிட்டது. கருத்து வேற்றுமையினால் மனத்தாங்கலும், அதனால் பகையுணர்ச்சியும், அதன் விளைவாக ராமானுஜரை அழித்துவிட வேண்டும் என்ற தீய எண்ணமும் யாதவப் பிரகாசருக்கு ஏற்பட்டது. காசியாத்திரை என்ற வ்யாஜ்யத்தை உருவாக்கி, வழியில் ராமானுஜரை மாய்த்துவிட வேண்டும் என்ற திட்டத்துடன் புறப்பட்ட யாதவப் பிரகாசரின் கோஷ்டியில் இருந்து ராமானுஜரை தப்பிக்கச் செய்து வேடன் ரூபத்தில் காட்சி தந்து அவரை ஆட்கொண்டு அருளினார் வரதராஜப் பெருமாள். தம்மை ஆட்கொண்டு அருள்புரிந்த ஆண்டவனின் திருவடி பணிந்து அவன் சந்நிதியில் ஏதேனுமொரு கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள எண்ணிய ராமானுஜரைத் தீர்த்த கைங்கர்யத்தில் ஈடுபடச் செய்த பெருமை வாய்ந்தவர் திருக்கச்சி நம்பிகள். வைணவம் செழித்தோங்க ராமானுஜரை ஆளவந்தாருக்கு அறிமுகம் செய்வித்து ஆளவந்தாருக்குப் பின் வைஷ்ணவ தரிசனத்தை நிலைநாட்ட வல்லவர் அவரே என்பதை ஆளவந்தார் உணருவதற்கு உதவியாக இருந்தவரும் திருக்கச்சி நம்பிகளே!

ஸ்ரீராமானுஜரை முதன்முதலாக ஆளவந்தார் கண்டதும், அவரே தமக்குப் பின்னர் வைஷ்ணவ விருக்ஷத்தைக் காத்து வளர்க்கக்கூடியவர் என்ற எண்ணம் தோன்றியதும் ஸ்ரீவரதராஜப் பெருமாளின் திருச்சந்நிதியில்தான்.

ஸ்ரீஆளவந்தாரை ஆச்ரயிக்கத் திருவரங்கம் சென்ற ராமானுஜர் அவர் திருநாட்டுக்கு எழுந்தருளியதைக் கண்டு வருந்தி, காஞ்சிபுரம் திரும்பிவந்து திருக்கச்சி நம்பிகளிடம் நடந்ததைச் சொல்லி தமக்கேற்பட்ட சில எண்ணங்கள் சரியானவையா என்று ஸ்ரீவரதராஜப் பெருமாளிடம் கேட்டறிந்து சொல்லும்படி திருக்கச்சி நம்பிகளை பிரார்த்தித்தார். திருக்கச்சி நம்பிகள் மூலம் ஸ்ரீராமானுஜரின் குறிப்பை அறிந்து, வைணவம் தழைக்க ஸ்ரீகாஞ்சி வரதனே ஆறு வார்த்தைகள் அருளிச் செய்தார்.

வரதராஜப் பெருமாள் அருளிச் செய்த இந்த ஆறு வார்த்தைகளில் இருந்து அவரே பரம்பொருள் என்பதும், அந்திமக்காலத்தில் ஸ்ம்ருதி அவசியம் என்ற நியதி இல்லை என்பதையும், மரணத்துக்குப் பின் மோட்சம் நிச்சயம் என்பதையும் திருக்கச்சி நம்பிகள் மூலம் ராமானுஜருக்கும் அவர் மூலமாக உலகுக்கும் எடுத்துரைத்த வரதராஜப் பெருமானின் பெருங்கருணையை பல ஆச்சார்ய புருஷர்கள் போற்றியுள்ளனர்.

ஸ்ரீவரதராஜப் பெருமாளின் வைபவத்தை அனுபவித்து உலகுக்கு உணர்த்திய மஹான்களுள் ஸ்வாமி தேசிகன்,  மணவாள மாமுனிகளும் குறிப்பிடத்தக்கவர்கள். ஸ்ரீவரதராஜனின் வைபவத்தோடு ஸ்ரீபெருந்தேவித் தாயாரின் தனிப் பெருங்கருணையைத் தரணியெல்லாம் உணரும் வண்ணம் தமது ஸ்ரீஸ்துதியில் எடுத்துரைத்து தங்க மழை பெய்வித்த பெருமையை பெற்றவர் ஸ்வாமி தேசிகன் ஆவார்.

காஞ்சிபுரத்துக்கு அருகாமையில் உள்ள சோளங்கிபுரம் என்றழைக்கப்படும் ‘கடிகாசலம்’ என்னும் க்ஷேத்ரத்தில் தொட்டாச்சாரியார் என்ற சிறந்த விஷ்ணுபக்தர் வசித்து வந்தார். இவர் வருடந்தோறும் காஞ்சிபுரத்துக்கு வந்திருந்து வரதராஜப் பெருமாளின் பிரம்மோற்சவத்தைக் கண்டு களிப்புறுவார். ஒரு வருடம் முதுமையின் காரணமாக உடல்நலக் குறைவு உண்டாகி காஞ்சிபுரத்துக்கு அவர் வரமுடியாத சூழல் உருவாயிற்று. கருட வாகனத்தில் வரதராஜப் பெருமாளை எழுந்தருளும் திருக்காட்சியை நேரில் தரிசிக்க முடியாமற்போகவே, மனம்நொந்து பெரும் ஏக்கத்தில் ஸ்லோகம் ஒன்றைப் பாடினார்.

உள்ளம் குளிரும் உஷத் காலத்தில் அர்ச்சகர்கள் வெண்சாமரம் வீசப் பக்த கோடிகள் ‘வரதா, வரதா’ என்று கைகூப்பி வேண்டி நிற்கப் பெரிய வெண்குடைகளுடன் கருடனின் மேல், மலர்ந்த முகத்துடன் பிரசன்னனாகக் காட்சி தந்த பெருமாள், தன்னை நினைந்துருகும் தொட்டாச்சாரியாருக்கு அருள்புரிய திருவுளங்கொண்டு, அர்ச்சகர்களின் மனதில் தோன்றி குடையை சற்று சாய்த்து மறைக்கும்படி செய்து, சோளங்கிபுரத்தில் தக்காங் குளக்கரையில் துதித்து நின்ற தொட்டாச்சாரியாருக்குக் காட்சி தந்தருளிய அற்புதத்தை நினைவுபடுத்தும் வகையில் இன்றும் கோபுர வாசலில் குடையைச் சாய்த்து, உற்சவ மூர்த்தியை மறைப்பது மரபாக உள்ளது.

காஞ்சிபுரத்துக்கு அருகாமையிலுள்ள தூப்புல் என்னும் திருத்தலத்தில் திரு அவதாரம் செய்த ஆச்சார்யர் ஸ்ரீமன் நிகமாந்த மஹாதேசிகன் பேரருளாளனை நினைப்பது தவிர வேறு உலகப் பொருட்களில் பற்று இல்லாதவராகத் திகழ்ந்த அறிஞர் என்று பலராலும் போற்றப்பட்டவர். ஸ்ரீய:பதியே சர்வம் என்று எண்ணும் ஸ்வாமி தேசிகன், தன்னை ஆச்ரயித்த அந்தண இளைஞனுக்குக் கடாக்ஷித்து அருளும்படி காஞ்சியில் கோயில் கொண்ட தேவியை வேண்டினார். ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீஸ்துதியால் துதிக்கப்பட்ட ஸ்ரீபெருந்தேவித் தாயார் பெருங்கருணையுடன் பொன்மாரி பெய்வித்த சம்பவம் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.

கனகவர்ஷம்

ஸ்ரீவரதராஜ வல்லபையாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமஹாலஷ்மியான ஸ்ரீபெருந்தேவித் தாயாரின் பெருங்கருணையால் பொன் மாரி பெய்தது பக்தர்களின் இறைவழிபாட்டுப் பெருமையையும் கடவுட் கருணையையும் பலரும் உணர்ந்து போற்றும் வகையில் நிகழ்ந்த உன்னத சம்பவமாகும்.

காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

வரதன் திருமஞ்சன லீலை
காஞ்சியில் வாழ்ந்த வரதாசார்யர் என்ற பெரியவர் ஸ்ரீவரதராஜனுக்குப் பொறுக்கும் சூட்டில் (ஸுகோஷ்ணமாக) பாலமுது காய்ச்சி நாள் தவறாமல் நிவேதநம் செய்ததால் பேரருளாளன் அவரை “அம்மா” என அழைத்தாராம். அதனால் நடாதூர் அம்மாள் என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டது.

ஒரு சமயம், நடாதூர் அம்மாள் கனவில் வரதன் வந்து “அந்த பட்டாச்சார்யாரை என்னைப் பிராண்டாமல்
திருமஞ்சனம் செய்யச் சொல்” என்று குழந்தையாக அழுதான். இவர்தான் அம்மாவாச்சே! பதறிண்டு கோயிலுக்குப் போய் பட்டாச்சார்யரிடம் வரதனை மெதுவாகத் தொடுமாறு வேண்டினார்.
நம் எண்ணம்போல் நம்முடன் கலந்து பழகும் பேரருளாளன் பெருமைக்கு நிகர் ஏது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in