

இமய மலைத்தொடரில் திபெத்தின் மேற்குப் பகுதியில் கைலாச பர்வதம் அமைந்துள்ளது. இது 22 ஆயிரத்து 28 அடி உயரமுள்ளது. இப்பர்வத மலை இந்து, பான், பௌத்த, ஜைன மதங்களின் புனித இடமாகத் திகழ்கிறது. ஆசியாவின் நீண்ட சிந்து, பிரம்மபுத்திரா, சட்லஜ், கார்னலி ஆறுகள் இங்கே பிறந்து, ஒவ்வொன்றும் திசைக்கொன்றாகச் சென்று பூமியை நான்காகப் பிரிக்கின்றன. புகழ்பெற்ற மானசரோவர் ஏரியும் இங்குள்ளது. கைலாச மலையைச் சுற்றி ஆறு மலைகள் தாமரை மலர் போல் அமைந்துள்ளன.
இந்து சமயக் கோட்பாட்டின்படி சிவபெருமான் இங்குதான் தன் மனைவி பார்வதியுடன் இருக்கின்றார். இம்மலை சிவலிங்கமாகவே வணங்கப்படுகிறது. விஷ்ணு புராணத்திலும் கயிலை மலை பற்றிப் பேசப்படுகிறது.
திபெத்தில் உள்ள பான் சமயத்தவருக்கு கைலாய மலை பிரதான யாத்திரைத் தலமாக உள்ளது. அவர்களது நம்பிக்கையின்படி சிபைமென் என்னும் ஆகாயப் பெண் கடவுளின் பீடமாக கைலாய மலை கருதப்படுகிறது. பான் மதத்தைத் தோற்றுவித்த ஷென்ரப் மிவொ விண்ணிலிருந்து கைலாச பர்வதம் வந்திறங்கினார் என்கின்றனர் அம்மதத்தினர்.
கைலாய மலை புத்தர்களின் சக்கரசம்வாரா என்னும் மிகப் பேரின்பம் நிலவும் இடமாக கருதப்படுகிறது. மிலரிப்பா எனும் புத்த தாந்திரிகர் இங்கிருந்துதான் பௌத்தத்தை திபெத்துக்குப் பரப்பினார்.
ஜைன மதத்தைத் தோற்றுவித்த விருஷப தேவர் முழுதுணர் ஞானம் பெற்று நாடு முழுவதும் சென்று தர்ம உபதேசங்களைச் செய்தார். பின் கைலாச பர்வதம் அடைந்தார். அங்கு சித்தசிலாதனம் என்னும் கற்பாறை மீது கிழக்கு நோக்கி பல்யாங்காசனத்தில் எழுந்தருளினார். அங்கு 14 நாட்கள் இருந்து மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசி திதியில் சூரிய உதயத்தில் முக்தி அடைந்தார். எனவே கைலாச பர்வதம் ஜைனர்களுக்கு மிக முக்கியப் புனித இடமாக விளங்குகிறது.