

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் திருமலையில் அலைமோதுகிறது. இதனால் சுவாமியை தரிசிக்க சுமார் 8 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
கோடை விடுமுறையையொட்டி, திருமலையில் கடந்த ஒரு மாத காலமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், கரோனா பரவலுக்கு பின்னர் ஆர்ஜித சேவைகள், ரூ. 300 சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம், சர்வ தரிசனம், என அனைத்து தரிசன முறைகளும் பழையபடி தொடங்கி விட்டதால், பக்தர்களின் கூட்டமும் அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த மே மாதம் மட்டும் பக்தர்கள் உண்டியல் மூலம் ரூ.130 கோடிக்கும் மேல் காணிக்கை செலுத்தியிருந்தனர். இந்த மாதத்திலும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து கூடிக்கொண்டே உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் 13-ம் தேதி மட்டும் சுவாமியை 78,602 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இதில், 42,423 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி இருந்தனர். உண்டியல் மூலம் ரூ. 4.32 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தியது தெரியவந்துள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால், நேற்று சுவாமி தரிசனம் செய்ய 8 மணி நேரம் வரை பக்தர்கள் 30 அறைகளில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.