தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் இன்று 108 திருவிளக்கு பூஜை

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் இன்று 108 திருவிளக்கு பூஜை
Updated on
1 min read

திருச்சி: தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 108 திருவிளக்கு பூஜை இன்று (ஜூன் 14) நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறைசார்பில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தப்படும் என நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில் ஆகிய 12 அம்மன் கோயில்களில் பவுர்ணமி நாளான இன்று (ஜூன் 14)108 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் பங்கேற்கும் பெண்களிடமிருந்து மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கு தொகையாக தலா ஒருவரிடம் ரூ.200 மட்டுமே வசூலிக்கப்படும்.

பூஜையில் பங்கேற்கும் பெண்களின் புகைப்படம், முகவரி, செல்போன் எண், ஆதார் எண் ஆகியவற்றுடன் கூடிய பட்டியலை அந்தந்த கோயில்கள் பராமரிக்கவும், ஒரு பூஜையில் பங்கேற்ற பெண்கள் இயன்றவரை அடுத்து வரும் பூஜைகளில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. அறநிலையத்துறை அறிவித்துள்ள 12 கோயில்களிலும் 108 திருவிளக்கு பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சமயபுரம் மாரியம்மன் கோயில் வட்டாரங்களில் கேட்டபோது, “இத்திட்டம் வைகாசி மாத பவுர்ணமி நாளான இன்று (ஜூலை 14) தொடங்கி, மாதந்தோறும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

பூஜையில் வழங்கப்படும் பொருட்கள்

இந்த பூஜையில் பங்கேற்கும் பெண்களுக்கு தலா ஒரு பித்தளை காமாட்சி விளக்கு (125 கிராம் எடை), எவர்சில்வர் குங்குமச்சிமிழ், மஞ்சள் தூள், குங்குமம், கற்பூரம், ஊதுவத்தி, தீப்பெட்டி, தாலிக்கயிறு செட், விளக்குத் திரி, தையல் இலை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சம்பழம், பூச்சரம், பூக்கள், பச்சரிசி (500 கிராம்), தீப எண்ணெய் (100 மில்லி), பூஜை பை, பிரசாதமாக சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை மற்றும் சேலை, ஜாக்கெட் துணி என ரூ.800 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in