Published : 05 May 2016 11:52 AM
Last Updated : 05 May 2016 11:52 AM

இந்தப் பிச்சைக்காரனுக்கு வேறு வேலை இருக்கு ராஜா

நான், முருகேசன், சிவசங்கர் ஆகியோர் சன்னதி தெரு வீட்டின் கூடத்தில் யோகியின் முன் அமர்ந்திருந்தோம். நாங்கள் மூவரும் முந்தையஇரவு திருவண்ணாமலை வந்து யோகியுடனேயே சன்னதி தெரு வீட்டில் தங்கியிருந்தோம். யோகி பற்பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். ஞானிகளிலிருந்து விஞ்ஞானம்வரை, தெய்வீக வாழ்க்கையிலிருந்து உலகியல் வாழ்க்கைவரை அனைத்து விஷயங்களைப் பற்றியும் யோகி சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் மூவரும் மெய்மறந்து அவர் பேசுவதையும், சிரிப்பதையும், புகைப்பதையும் ரசிந்து மகிழ்ந்துகொண்டிருந்தோம். அங்கே ஞானம், தியானம் மற்றும் ஆனந்தத்தின் கலவையான ஒரு தெய்வீகத்தில் நாங்கள் திளைத்துக்கொண்டிருந்தோம்.

திடீரென வெளியே வாயில் இரும்புக் கதவை யாரோ தடதடவென முரட்டுத்தனமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அப்போது வாயிற்காப்போன் இல்லை. யாரெனப் பார்க்க எழுந்த என்னை யோகி தடுத்துவிட்டு, தானே எழுந்து சென்று பெரிய மரக்கதவைத் திறந்து இரும்புக் கதவருகே சென்றார். அங்கே குடிபோதையில் ஒரு மத்திய வயதுக்காரர் நின்றுகொண்டிருந்தார். யோகி கேட்டருகே சென்றார். கேட்டைத் திறக்காமல் உள்ளிருந்தே அந்தக் குடிகார நண்பரைச் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பின் தன் இரு கரங்களையும் கூப்பி, “இந்தப் பிச்சைக்காருக்கு வேலை இருக்கு ராஜா. அப்புறமா வாங்க ராஜா” என சொல்லி அவரை அனுப்பினார்.

யோகி உள்ளே வந்து பெரிய மரக்கதவை மறுபடியும் தாழிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தார். அமைதியாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். அதற்குள் மீண்டும் கேட் தடதடவெனத் தட்டப்பட்ட ஒலி பலமாகக் கேட்டது. யோகி ஆழ்ந்து புகைபிடித்துக்கொண்டிருந்தார். மீண்டும் கேட்டிலிருந்து மிகவும் பலமாகச் சத்தம் கேட்டது. சிகரெட்டை அணைத்துவிட்டு மேலே போர்த்தியிருந்த சால்வையையும், தலைப்பாகையையும் சரிசெய்துகொண்டு யோகி மறுபடியும் கேட்டருகே சென்றார்.

அதே குடிகார நண்பர்தான். கேட்டின் அப்பாலிருந்து மிகவும் பவ்யமாக, இருகரம் கூப்பியபடி யோகியை வணங்கி தள்ளாடித் தள்ளாடி அவர் நின்றுகொண்டிருந்தார். யோகி கேட்டைத் திறக்கவில்லை. அந்த நண்பனையே உற்று நோக்கினார்.

“போயிட்டு வாங்க ராஜா. இந்தப் பிச்சைக்காருக்கு வேலை இருக்கு ராஜா. நீங்க போயிட்டு வாங்க ராஜா” யோகி அந்தக் குடிகார நண்பருக்கு மறுபடியும் சொன்னார். அந்த நண்பரும் சரியெனச் சொல்லிவிட்டுச் செல்வது தெரிந்தது. யோகி மீண்டும் உள்ளே வந்தார். சிறிது நேரத்தில் மறுபடியும் சத்தம் முன்பைவிட அதிகமாகக் கேட்டது. யோகி எழவில்லை. சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. மிகவும் முரட்டுத்தனமாக அந்த நண்பன் கத்தினான்.

“யோகி ராம்சுரத்குமாரா என் தெய்வமே, நான் சிரமத்தில் இருக்கிறேன். நீதான் என்னைக் காக்க வேண்டும். நீதான் என் தெய்வம். வா யோகி ராம்சுரத்குமாரா.”

யோகி அசையவில்லை. நேரம் செல்லச் செல்ல சத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. திடீரென யோகி எழுந்தார். பாய்ந்தோடி பெரிய கதவைத் தடாலெனத் திறந்தார். கேட்டருகே ஓடிச் சென்று கேட்டையும் படாரெனத் திறந்தார். யோகியின் வேகத்தையும், கோபத்தையும் கண்ட அந்தக் குடிகார நண்பன் பயந்துபோய் கேட்டிலிருந்து விலகி ரோட்டில் போய் நின்று கொண்டான். திறந்திருந்த மரக்கதவு வழியாக வெளியே நடக்கும் காட்சிகள் எங்களுக்கு நன்றாகத் தெரிந்தன. யோகி வெளியே சென்று அந்தக் குடிகார நண்பனை நையப் புடைத்து அனுப்புவார் என நினைத்துக் கொண்டிருந்தோம். அவரின் வேகமும் முகத்தில் காட்டிய கோபமும் எங்களை அவ்விதம் நினைக்க வைத்தது.

யோகி கோபத்துடன் படியிறங்கி அந்தக் குடிகார நண்பனை அடைந்தார். அறைவிடப் போகிறார் என எதிர்பார்த்த எங்களுக்கு மெய் சிலிர்த்துவிட்டது. யோகி தடாலெனக் குடிகார நண்பனின் காலில் விழுந்தார். “போயிட்டு வாங்க ராஜா, இந்தப் பிச்சைக்காருக்கு வேலை இருக்கு ராஜா. போயிட்டு வாங்க.”

யோகி கெஞ்சினார். அந்தக் குடிகார நண்பன் பயந்தபடி அங்கிருந்து ஓடோடி மறைந்தான். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். யோகி மீண்டும் நிதானமாக இரண்டு கதவுகளையும் பூட்டிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து எங்களை நோக்கி மந்தகாசமாகச் சிரித்தார்.

ஆசிரியர்: எஸ். பார்த்தசாரதி,

வெளியீடு: நேசமுடன்,

எண், 64, மதுரைசாமி மடம் தெரு, பெரம்பூர், சென்னை - 600011.

தொலைபேசி: 9940552516 / 8015252859

விலை: ரூ. 150/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x