

மே 9: அட்சய திருதியை
அட்சய என்ற சொல் வளர்தல் என்று பொருள்படும். சயம் என்றால் கேடு, அட்சயம் என்றால் கேடில்லாத அழிவில்லாத பொருள் என்பதாம். அன்றைய தினத்தில் நாம் செய்யும் எச்செயலும் குறைவின்றி வளர்ந்துகொண்டே இருக்கும். திருதியை தினத்தில் செய்யும் எச்செயலுக்கும் விருத்தி உண்டு என்ற பழமொழியும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறை நாளான திருதியை தினத்தை அட்சய திருதியை நாளாகக் கூறுவர். அன்றைய தினத்தில் இறை வழிபாடு பன்மடங்கு உயர்வைத் தரும். தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் சேர வேண்டும் என்றால் அட்சய திருதியை நாளில் வாங்கினால் வளமுடைய வாழ்வைப் பெறலாம் என்பது ஐதீகம். அன்று விலையுயர்ந்த பொருட்கள்தாம் வாங்க வேண்டும் என்பதில்லை. அன்றைய தினம் ஹோமம், ஜபம் மற்றும் தானம் செய்வது சிறப்பைத் தரும். பொன், வெள்ளி, குடை, விசிறி, ஆடை, நீர்மோர், பானகம், காலணி, மல்லிகைப் பூ, உத்ராட்சம், புத்தகம், பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள், நோட்டு, தயிர் சாதம், போர்வை அல்லது பாய் போன்ற பதினாறு வகை தானங்களைச் செய்வது பல மடங்கு புண்ணியத்தை அளிக்கும் என்பது நம்பிக்கை.
பரசுராமரின் பிறந்த நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பரசுராமர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இதிகாசங்களின்படி இந்நாளில் திரேதா யுகம் தொடங்கியது. பகீரதன் தவம் புரிந்து புனித கங்கை நதியை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் என்றும் கூறப்படுகிறது. தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிஷபதேவரின் நினைவாக இந்நாள் சமணர்களால் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை மகிமை
குபேர பகவான், ஒரு அட்சய திருதியை நன்னாள் அன்று இறைவனை வணங்கித் துதித்தார். அதன் பயனாக இறைவன் இவரை வடதிசைக்கு அதிபதியாக்கி சங்கநிதி, பதுமநிதி, கச்சநிதி, கற்பநிதி, நந்தநிதி, நீலநிதி, மகாநிதி, முகுந்த நிதி, மகாபத்மநிதி என்னும் நவநிதிகளையும் அளித்து அழகாபுரி என்னும் குபேரபுரியை ஆளும் அருளை வழங்கினார்.
வெறும் கையுடன் தன் நண்பன் கண்ணனைக் காணச் செல்லக் கூடாது என்றெண்ணி, இருந்த ஒரு பிடி அரிசியை அவலாக்கி, அதனை சுத்தமான கிழிசல் துணியில் கட்டிக்கொண்டு சென்றார் குசேலர். ஆர்வமாய் கிருஷ்ணர் அதனைப் பெற்றுக்கொண்டு, அவலை வாயில் இடும்போது அட்சய என்றார். நண்பனிடம் விடைபெற்று, தன் இல்லம் திரும்பிய குசேலர், தன் இல்லத்தைக் காணாது தேடினார். அது மாளிகையாக மாறிவிட்டிருந்தது. செல்வச் செழிப்புடன் இருந்த மனைவியைக் கண்டு வியந்தார். இந்த வளங்கள் யாவும் கிருஷ்ணர் கூறிய அட்சய என்ற சொல்லால் விளைந்தன. குசேலர் செல்வ வளமிக்கவரானார். இன்றைய நாளில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அவல் படைத்து, பூஜை செய்தால் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இறைவனுக்குச் செய்யப்படுகிற நிவேதனம், பூஜை ஆகியவை வளத்தையும் நலத்தையும் தரும்.
வழிபட வேண்டிய திருத்தலம்
அட்சய திருதியை நன்னாளில் வழிபட வேண்டிய திருத்தலம் கீழ்வேளூர் அருள்மிகு வனமுலை நாயகி உடனுறை அருள்மிகு கேடிலியப்பர் (அட்சய லிங்கம்) திருத்தலமாகும். சிலந்திச் சோழனாம் கோட்செங்கட்சோழன் புதுக்கிய மாடக்கோயில் கீழ்வேளூர் திருக்கோயில். தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 147வது திருத்தலமாகும். முத்துசாமி தீக்ஷிதர் தனது ‘அட்சயலிங்கவிபோ’ கீர்த்தனையில் ‘பதரி வன முல நாயகி’ என்று குறிப்பிடுகிறார்.
சமுத்திரகுப்தன் எனும் வணிகன் தீய வழியில் தனது அனைத்து செல்வத்தையும் இழந்து, இரந்துண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு, இவ்வாலயத்தில் பிரசாதம் பெற்றுப் புசிக்கலாம் என்று வந்தான். அப்போது அவன், பசி மயக்கத்தால் கொடிமரத்தின் அருகே விழுந்தான். கேடிலியப்பர், இழந்த செல்வத்தை அவனுக்கு மீண்டும் அளிக்குமாறு குபேரனிடம் அருளினார். அவன் மயக்கமுற்றுக் கீழே விழுந்திருந்தாலும் விழுந்து வணங்கியதாகவே ஏற்றுக்கொண்டு கருணையுடன் அருளினார்.
அட்சய திருதியை தானம் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தரும்.
திரெளபதியைக் காப்பாற்றிய அட்சய பாத்திரம்
பஞ்ச பாண்டவர் வனவாசத்தின்போது சூரிய பகவான் அவர்களுக்கு ஒரு அட்சய பாத்திரம் கொடுத்தார். அள்ள அள்ளக் குறையாது உணவளிக்கும் இந்தப் பாத்திரத்துக்கு அமுத சுரபி என்ற பெயரும் உண்டு. இப்பாத்திரத்தை திரௌபதி ஒரு நாளுக்கு ஒரு முறைதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது விதி. உணவு உண்ட பிறகு அதனைக் கழுவிக் கவிழ்த்துவிடுவார்.
ஒரு நாள் உணவு வேளை கழித்து, துர்வாசர் தன் சீடர்களுடன் வருகிறார். தான் உணவருந்தப் போவதாகவும், அதற்கு முன் ஆற்றில் குளித்துவிட்டு வருவதாகக் கூறிச் செல்கிறார். துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாக நேருமோ என்று அஞ்சி, செய்வதறியாது தவிக்கும் திரௌபதி, உதவிக்கு கிருஷ்ணனை வேண்டுகிறாள். மனமிரங்கிய ஆபத்பாந்தவன், அட்சய பாத்திரத்தைக் கொண்டு வரப் பணித்து, அதில் ஒட்டிக் கொண்டிருந்த கீரையை அட்சயம் என்று கூறி உண்டார். நீராடிவிட்டு வந்த துர்வாசர் தனக்கு பசியில்லை என்று சொல்லிவிட்டுத் தன் வழியே சென்றுவிட்டார்.