Last Updated : 20 May, 2016 02:14 PM

 

Published : 20 May 2016 02:14 PM
Last Updated : 20 May 2016 02:14 PM

பைபிள் கதைகள் 7: சந்தோஷமாய் மாறிய துக்கம்!

நதித் தீரத்தின் தெற்குப்பகுதியில் இருந்த சோதோம் நகரில் குடியேறி வாழ்ந்துவந்தார் ஆபிரகாமின் அண்ணன் மகனாகிய லோத்து. சோதோம் நகரின் அருகிலேயே கொமோரா நகரமும் இருந்தது. இந்த இரு நகரங்களிலும் சிலைகளை வணங்கி வந்த மக்கள், பாலியல் குற்றங்கள் உட்பட பெரும் பாவங்களைச் செய்து மிக இழிவான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதனால் பரலோகத் தந்தையாகிய யகோவா, லோத்துவையும் அவனது குடும்பத்தாரையும் சோதோம் நகரிலிருந்து வெளியேறச் செய்துவிட்டு, அந்த நகரங்களை முற்றாக அழித்தார்.

யோர்தான்

கானான் நாட்டில் வசித்துவந்த ஆபிரகாம் தனது சகோதரனாகிய லோத்து, சாவிலிருந்து தப்பித்துக்கொண்டதை அறிந்து நிம்மதியடைந்தார். ஆனால் கானான் நகரமும் கடவுளின் சாபத்துக்கு ஆளாகுமோ என்று அஞ்சினார். காரணம் உலகையும் மனித இனத்தையும் படைத்த உண்மைக் கடவுள், தன்னுடன் பேசிக்கொண்டிருப்பதையும் வாழும் முறைமையையும் வாழ்க்கை நெறிகளையும் கொடைகளாக தன் வழியாக மனித இனத்துக்குத் தருவதையும் அதைப் பெற்று தீங்கற்ற வாழ்வை வாழ்ந்து வருவதையும் கானானியர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அப்படியிருந்தும் அவர்கள் பொய்க் கடவுளர்களையே சிலைகளாக வணங்கி வந்தனர். இதனால் தனது மகன் ஈசாக்கு எக்காரணம்கொண்டும் கானான் பெண்ணொருத்தியை மணந்துகொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஆபிரகாம். எனவே தனது மந்தைகளையும் சொத்துக்களையும் நிர்வகித்துவந்த தனது மூத்த வேலைக்காரரை அழைத்தார். தனது தந்தையின் தேசமும் தற்போது தமது உறவினர்கள் வசித்துவரும் நகரமுமாகிய ஆரானுச்சென்று தன் மகனுக்குப் பொருத்தமான மணமகளைத் தேடி அழைத்து வரும்படி அவரை அனுப்பினார்.

வேலைக்காரரின் பிரார்த்தனை

வயோதிகனாய் இருந்த எஜமானனுக்கு மிகவும் விசுவாசமாய் இருந்த தலைமை வேலைக்காரரும் அவரது விருப்பத்தை ஏற்று அதிகாலையில் புறப்பட்டார். தொலைதூரத்திலிருந்த ஆரான் நகரத்தைச் சென்றடையத் தேவையான உணவு, மணமகள் வீட்டாருக்கான பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை பத்து ஒட்டகங்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். நீண்ட பயணத்துக்குப்பின்பு ஆரான் நகரின் எல்லையை அடைந்தான். அது மாலை நேரம். அந்த இடத்தில் ஒரு சமுதாயக் கிணறு இருந்தது. தங்கள் வீட்டுத்தேவையான குடிநீரை சேகரித்துச் செல்ல மாலைநேரத்தில் இளம்பெண்கள் கிணற்றடிக்கு வருவது சமூக மரபாக இருந்தது. எனவே இந்தக் கிணற்றுக்கு நீர் எடுத்துச் செல்லவரும் ஆரான் நகரின் பெண்களில் ஒருத்தியை ஈசாக்கிற்கும் மணமகளாகத் தேர்ந்தெடுக்க தனக்கு வழிகாட்டும்படி கடவுளாகிய யகோவாவிடம் அந்த வேலைக்காரர் பிரார்த்தனை செய்தார். “ கடவுளே...எனக்கும் என்னுடைய இந்த ஒட்டகங்களுக்கும் இரங்கி, இங்குவரும் எந்தப் பெண் தண்ணீர் இறைத்துத் தருகிறாளோ... அவளே ஈசாக்கிற்கு ஏற்ற மணமகளாக நீர் தேர்ந்தெடுத்து இருக்கிறீர் என்று அறிந்துகொள்வேன்” என்று பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை கடவுள் கேட்டார்.

மனமிறங்கிய பெண்

வேலைக்காரர் எதிர்பார்த்தைப்போலவே ஒரு இளம்பெண் தண்ணீர் எடுக்க வந்தாள். முழுமையான முக்காடிட்டு, அடக்கமே வடிவாக, அழகின் மொத்த உருவமாக கையில் தண்ணீர் குடுவை ஏந்தி அங்கே வந்த அந்தப் பெண்ணின் பெயர் ரெபெக்கா. வேலைக்காரர் அந்நிய தேசத்தின் ஆண்மகனாக இருந்தும் தன் எதிரில் நின்றுகொண்டிருந்த காரணத்தால் அவனுக்குப் வணக்கம் சொன்னாள். அவளது பணிவில் குளிர்ந்த வேலைக்காரர் “பெண்னே.. எனக்குக் குடிக்க கொஞ்சம் தண்ணீர் தருவாயா?” என்றார். உடனடியாக கிணற்றிலிருந்து அவருக்குத் தண்ணீர் கொடுத்தாள்.

ஆனால் வேலைக்காரர் கேட்காமலேயே நீண்டதூரம் பயணித்துக் களைப்படைந்திருந்த அவரது எல்லா ஒட்டகங்களைக் கண்டு, அவை குடிக்கக்குடிக்க தண்ணீரை இறைத்து சளைக்காமல் ஊற்றிக்கொண்டே இருந்தாள். வயிறுமுட்ட தண்ணீர் குடித்த ஒட்டங்களின் உற்சாகம் கண்டு மகிழ்ச்சியடைந்தாள். விலங்குகளுக்கும் இரங்கிய அவளிடம் “ பெண்ணே உனது தந்தையின் பெயரென்ன?” என்று கேட்டார் வேலைக்காரர். மேலும் “இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கிச் செல்ல எனக்கும் எனது ஒட்டங்களுக்கும் இடமிருக்கிறதா?” என்று கேட்டார். ரெபேக்கா விருந்தோம்பல் பண்பினை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டவள். எனவே மறுப்பேதும் கூறாமல் “என் தந்தையின் பெயர் பெத்துவேல். எனக்கொரு சகோதரர் இருக்கிறார். அவரது பெயர் லாபான். எங்கள் வீட்டில் போதுமான இடமிருக்கிறது. தாராளமாக எங்கள் வீட்டில் நீங்கள் தங்கிச் செல்லலாம்”என்றாள். ஆபிரகாமின் அண்ணன் நாகோரின் மகன்தான் பெத்துவேல். இது தலைமை வேலைக்காரருக்கு நன்கு தெரிந்திருந்தது. இவ்வாறு ஆபிரகாமின் உறவினர் வீட்டுக்கே தன்னை வழிநடத்திச்சென்ற கடவுளாகிய யகோவாவுக்கு அவன் மண்டியிட்டு நன்றி சொன்னார்.

துக்கம் சந்தோஷமாய் மாறியது

அன்றிரவு பெத்துவேலின் இல்லத்தில் தங்கி அவர்களது விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார் ஆபிரகாமின் தலைமை வேலைக்காரர். தாம் ஈசாக்கிற்கு மணமகள் தேடி வந்த காரணத்தையும், கடவுள் எவ்வாறு ரெபேக்காளை அடையாளம் காட்டினார் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார்.

இது கடவுளின் ஏற்பாடு என்பதை அறிந்த பெத்துவேலும் அவரது மகனும் ரெபேக்காள் ஈசாக்கை திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தார்கள். இருப்பினும் ரெபெக்காளின் மனதை அறிய விரும்பி அவளது விருப்பத்தைக் கேட்டனர். அப்போது அவள் “சம்மதம்”என்று சொன்னாள். அதுவரைத் தன் மணமகனைக் கண்களால் பார்த்திராத தங்கள் மகள், கடவுளின் ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டாளே என்று அந்தக் குடும்பம் மகிழ்ச்சியால் குதூகலித்தது. மறுநாளே ரேபேக்காளை ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு கானான் தேசத்துக்குப் புறப்பட்டார் ஆபிரகாமின் வேலைக்காரர்.

அவர்கள் கானான் தேசத்தின் எல்லைக்குள் இருந்த வயல்வெளியில் பிரவேசித்தபோது பொழுது சாய்ந்திருந்தது. அப்போது மந்தைகளை மேய்த்துக்கொண்டு அங்கே அன்பே உருவாய் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் ஈசாக்கேதான். ரெபெக்காவை நேருக்கு நேராய்ச் சந்தித்தார். இதனால் அவரது மனதுக்குள் மகிழ்ச்சி பொங்கியது. ரெபேக்காவுக்கும் மகிழ்ச்சியும் வெட்கமும் ஆட்கொள்ள கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.

தனக்காகக் கடவுள் நிச்சயித்த பெண்ணை கண்டுகொண்ட சந்தோஷம் ஈசாக்கை நிறைத்தது. தனது தாய் சாராள் இறந்துபோனதிலிருந்து தம்மை வாட்டிவந்த துக்கத்தால் உற்சாகம் இழந்திருந்த ஈசாக் ரெபக்காவைக் கண்டதும் தனது துக்கம் சந்தோஷமாய் மாறிப்போனதைை உணர்ந்துகொண்டார். ஈசாக்கும் ரேபேக்காளும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு ஏசா என்றும் யாக்கோபு என்றும் பெயரிட்டனர். அவர்கள் எப்படிப்பட்டச் சகோதரர்களாக உருவானார்கள்..

அடுத்த கதையில் காண்போம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x