Published : 09 Jun 2022 05:53 AM
Last Updated : 09 Jun 2022 05:53 AM

நாளை முதல் 14-ம் தேதி வரை பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் ஜூன் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக தெப்பத் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவை வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை வெகு விமரிசையாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக கோயில் உட்புறத்திலும், வெளிப்புறங்களிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தெப்பம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. புது வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

தெப்பத் திருவிழாவில் தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மகுளத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மேலும் தினமும் பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை தெப்பக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறும். தெப்பத் திருவிழாவை முன்னிட்டு வரும் 13-ம்தேதி இரவு கஜ வாகன சேவையும் 14-ம் தேதி இரவு கருடவாகன சேவையும் நடைபெறும். மேலும், தெப்ப உற்சவம் நடந்த பின்னர் தினமும் மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகளின் வீதியுலாவும் நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x