Published : 05 May 2016 11:57 AM
Last Updated : 05 May 2016 11:57 AM

ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாட்டம்!- சென்னையில் மே 10 முதல் 13 வரை நடைபெறுகிறது

சென்னை: 5 மே,2016

பிரபல வைணவத் துறவியான ராமானுஜர் அவதரித்து ஆயிரமாவது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, சென்னையில் மாபெரும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ராமானுஜர் தரிசனம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழா, இம்மாதம் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை (மாலை 6 மணி - இரவு 8 மணி) டி.டி.கே. சாலையில் உள்ள நாரதகான சபாவில் நடைபெறவிருக்கிறது. இசை, நடனம், ஆன்மிகச் சொற்பொழிவு என அனைத்தும் இதில் இடம் பெறும்.

சென்னையைச் சேர்ந்த கவுஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும், பக்திசாகரம்.காம் என்ற இணையதளமும் இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் ராமானுஜர் அவதரித்த நோக்கத்தையும், அவருடைய ஆன்மிகச் சிந்தனைகளையும், அவர் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையையும், மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய உரைகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

மே 10-ம் தேதியன்று, திரு. யு.வி. தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிகச் சொற்பொழிவும், மே 11-ம் தேதியன்று திரு. யு.வி. வேலுகுடி கிருஷ்ணனின் இராமானுஜரின் வாழ்க்கை மற்றும் வைஷ்ணவப் பாரம்பரியம் பற்றிய உரையும் இடம்பெறும். மே 12-ம் தேதியன்று திரு. யு.வி. கருணாகராச்சார்யாரும், மே 13 அன்று திரு. யு.வி. அனந்த பத்மநாபரும் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள்.

இந்த நான்கு நாட்களும் பெரும்புதூர் பார்த்தசாரதி கோவில், காஞ்சிபுரம் கோவில், ரங்கம் கோவில், மேல்கோட்டை கோவில் ஆகிய பின்னணி செட்டுகளில் திரு. ஏ.எஸ். ராமின் இசையமைப்பில் ‘திருப்பதி அதிசயம்’, ‘வழிகாட்டிய கடவுள்’, ‘ரங்க காத்யம்’, ‘வைகுண்ட காத்யம்’ ஆகிய தலைப்புகளில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இது குறித்து கவுஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சோனியா கூறுகையில், “வைணவ வழியில் வந்த அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்று நாங்கள் இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு அடுத்தகட்டமாக, ராமானுஜரின் போதனைகளை தமிழில் மொழிபெயர்த்து பொது மக்கள் அனைவருக்கும் - குறிப்பாக, இளைஞர்களுக்குக் கொண்டு செல்லவிருக்கிறோம்” என்றார்.

இவ்விழா குறித்து சுவாமி வேளுக்குடி கிருஷ்ணன் கூறுகையில், “பக்தியைப் பற்றி ராமானுஜர் சொல்கிறபோது, ‘ஞானத்தின் வடித்தெடுக்கப்பட்ட நிலையே பக்தியாகும். இந்த பக்தியானது அறியாமையில் இருப்போருக்கு மருந்தாகவும், தெளிவு பெற்ற ஆத்மாவுக்கு மந்திரமாகவும் விளங்குகிறது’ என்று கூறியிருக்கிறார். இந்தப் பக்தியானது கலியுகத்தின் தீமைகளை அறவே அழிக்க உதவி வருவதோடு, ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் அவரை நினைக்கச் செய்கிறது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் இவரை நினைக்கச் செய்யும்.

ராமானுஜரின் சமஸ்கிருத வேதாந்தங்களும், ஆழ்வார்கள் தமிழில் அருளிய திவ்யப் பிரபந்தங்களும் இன்றைய கலியுகத்திற்கு ஏற்ற படிப்பினைகளாகும். இதுவே ராமானுஜரை இன்றளவும் நடைமுறைக்கு உகந்த ஆச்சார்யராக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. சுவாமி ராமானுஜரே வேதாந்தங்களின் உண்மையான தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். இவரது சித்தாந்தங்கள் இன்றைய நாகரீக வாழ்வுக்கும் பொருத்தமானவையாக உள்ளன என்று சுவாமி வேளுக்குடி கிருஷ்ணன் கூறினார்.

குழந்தைப் பருவம், இளமைப் பருவம், பக்தப் பருவம், சமூக சிந்தனையாளர், அறிவார்ந்த தத்துவ ஞானி என ராமானுஜர் வாழ்வின் பல்வேறு நிலைகளை இந்த நான்கு நாள் நிகழ்ச்சிகளில், பார்வையாளர்கள் கண்டு பரவசமடையலாம்.

சூப்பர் சிங்கர் புகழ் ஸ்பூர்த்தி மற்றும் பிரகதி ஆகியோரின் அபங் பாணி பாடலுக்கும், திரு. உடையலூர் கல்யாணராமன், திரு. சட்டநாத பாகவதர், திரு. கடையநல்லூர் பாகவதர் ஆகியோரின் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகளுக்கும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமதி. ரேவதி சங்கரன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதோடு, நாட்டிய நாடகத்திற்கான பாடலையும் எழுதியுள்ளார்.

இந்த நான்கு நாள் நிகழ்ச்சிகளை, பக்திசாகரம்.காம் இணையதளத்தில் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் மற்றும் ஆர்வலர்கள் மே 22 -ம் தேதி முதல் கண்டுகளிக்கலாம். இலவச பாஸ்கள் eventjini.com-ல் கிடைக்கும்

ஊடகத் தொடர்பு: கே.பி. அமர்நாத், கேட்டலிஸ்ட் பி.ஆர். @ 98418 25081

தி இந்து தமிழ் வாசகர்களுக்கு ஒரு போட்டி

ராமானுஜர் 1000 நான்கு நாள் கொண்டாட்டங்களில் பங்குபெறுவதற்கான இலவச நுழைவுச் சீட்டுகளை ‘தி இந்து தமிழ்’ வாசகர்கள் வெல்லலாம். >www.tamil.thehindu.com/contest என்ற முகவரிக்குச் சென்று கேட்கப்பட்டுள்ள சுலபமான கேள்விகளுக்கு பதிலளியுங்கள். நுழைவுச் சீட்டுகளை வெல்லுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x