

இறைநெருக்கத்தைப் பெற விரும்பும் நம்பிக்கையாளன், சக மனிதர்களுடன் அன்பு கொள்வதன் மூலமே அதை சாத்தியமாக்கலாம். பூமியிலுள்ளவர்கள் மீது இரக்கம் காட்டாதவனை வானத்திலுள்ளவனும் இரக்கம் காட்டுவதில்லை. அதிலும் குறிப்பாக தேவையுள்ளவர்கள், நோயுற்ற மனிதர்கள் குறித்து அக்கறை கொள்வதும், அவர்களுக்கு உதவுவதும் இறைவனுக்குப் பேருதவி செய்வதற்கு ஒப்பானதாகும்.
மறுமை நாளில் இறைவனின் திருமுன் நடக்கவிருக்கும் விசாரணை ஒன்றைக் குறித்து நபிகளார் இப்படி சுட்டிகாட்டுகிறார்:
விசாரணையின்போது, மூன்று மனிதர்கள் இறைவனின் திருமுன் நிறுத்தப்பட்டு விசாரணை ஆரம்பமாகும்.
முதலாவது மனிதனிடம் இறைவன், “ஓ..! ஆதமின் மகனே! நான் தாகித்திருந்தேன். நீ எனது தாகத்துக்கு ஏன் தண்ணீர் அளிக்கவில்லை?” என்று கேட்பான்.
அதற்கு அம்மனிதன் குழம்பிய நிலையில், “இறைவா..! உலக மக்கள் அனைவரின் தாகத்தை தீர்த்தருள்பவன் நீ. உனக்கு தாகமா?” என்பான்.
“ஆம்..! தாகம் என்று தண்ணீர் கேட்டு வந்த அந்த மனிதனின் தாகத்தை நீ தணித்திருந்தால் எனது தாகம் தீர்ந்திருப்பதை நீ கண்டிருக்கலாம்!” என்பான் இறைவன்.
இரண்டாவது மனிதனிடம் விசாரணை துவங்கும்.
“ஓ..! ஆதமின் மகனே! நான் பசித்திருந்தேன். எனது பசியை நீ ஏன் போக்கவில்லை?” என்று இறைவன் கேட்பான்.
“இறைவா! உலக மக்கள் அனைவரின் பசிப்பிணியைப் போக்கும் அருளாளன் நீ. உனக்கு பசியா?” என்று இரண்டாவது மனிதன் திடுக்கிட்டுக் கேட்பான்.
அதற்கு இறைவன், “ஆம்.. அன்று உன்னிடம் பசியுடன் வந்த அந்த மனிதனுக்கு நீ உணவளித்திருந்தால் எனது பசியைப் போக்கியதை நீ உணர்ந்திருக்கலாம்” என்று பதிலளிப்பான்.
மூன்றாவது மனிதனிடம் இறைவன், “ஓ..! ஆதமின் மகனே..! நான் நோயுற்றிருந்தேனே! நீ ஏன் எனது நலம் விசாரிக்க வரவில்லை?” என்பான்.
அதற்கு மூன்றாவது மனிதன், “இறைவா..! உலக மக்களின் நோய் தீர்க்கும் கருணையாளன் நீ. உனக்கு நோயா? என்று வியந்து கேட்பான்.
“உண்மைதான்! நோயுற்றிருந்த எனது அடியானை நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால்.. அங்கு என்னை நீ கண்டிருக்கலாம்” என்று பதிலளிப்பான்.
மனிதன் சக மனிதனிடம் இரங்குவது குறித்தும், மக்கள் சேவையின் முக்கியத்துவம் குறித்தும் நபிகளார் தமது தோழர்களிடம் சொன்ன மனிதநேயம் மிக்க சம்பவம் இது.
நபிகள் சொன்ன ஆறு கடமைகள்
# நீங்கள் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும்போது சலாம் முகமன் கூறுங்கள்.
# உங்களில் ஒருவர் விருந்துக்கு அழைத்தால், அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
# உங்களிடம் ஒருவர் ஆலோசனைக் கேட்டால், அவர் நலனை முன்வைத்து நல்லதொரு ஆலோசனை கூறுங்கள்.
# உங்களில் ஒருவர் தும்மிவிட்டு “அல்ஹம்துலில்லாஹ் புகழனைத்தும் இறைவனுக்கே!” என்று கூறினால் அதற்கு அழகிய பதிலாக “யர்ஹமுகல்லாஹ் இறைவன் உம்மீது கருணை பொழிவானாக” என்று அவருடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்.
# உங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அவர் நலன் விசாரிக்க செல்லுங்கள்.
# ஒருவர் மரணமுற்றால் அவருடைய மரண ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்