Published : 21 May 2022 05:26 AM
Last Updated : 21 May 2022 05:26 AM
சென்னை: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் துறை செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், ஹரிப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 165 அறிவிப்புகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் திட்டம் தொடங்கப்படும்.
ஆன்மிகப் பயணம்
கோயில் யானைகளுக்கு புதிய குளியல் தொட்டி அமைப்பது, மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் 12 பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் 108 திருவிளக்கு பூஜைகள் நடத்துவது, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT