

திருப்பதி: கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவங்கள் உட்பட அனைத்து விசேஷ நாட்களிலும் கோயிலுக்குள்ளேயே உற்சவருக்கு ஏகாந்தமாக சேவைகள், பூஜைகள், வாகன சேவைகள் போன்றவை நடத்தப்பட்டன.
இதனால், உற்சவர் வெளியே வந்து சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது என பக்தர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். தற்போது கரோனா தொற்று குறைந்துவிட்டதால் நேற்று உற்சவரான பத்மாவதி தாயார் தங்க தேரில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நேற்று காலை திடீரென தாயார் மாட வீதிகளில் தங்க தேரில் பவனி வருகிறார் என அறிந்ததும் திரளான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தி தாயாரை தரிசித்தனர்.
திருமலையில் சேவை
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அஷ்ட தள பாத பத்மாராதனை சேவை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கரோனா காரணமாக இது ஏகாந்தமாக நடத்தப்பட்டது. மீண்டும் இந்த சேவையின் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், கோடை விடுமுறையால் இந்த சேவையை தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்தது. தற்போது, மீண்டும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவையை தொடர தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஆன்லைனில் இந்த சேவையின் டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் வழக்கம்போல் வரலாம் என அறிவித்துள்ளது. அதே சமயம், திருப்பாவாடை சேவை டிக்கெட் பெற்ற பக்தர்கள், அதற்கு பதில் விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமியை தரிசன முறையில் அனுமதிக்கப்படுவர். இதற்கு சம்மதிக்காத பக்தர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.